பல மனிதர்கள் வந்து செல்லும் இடங்களில், குறிப்பாகத் தொடும் இடங்களில் அதிகமான கிருமிகள் இருக்கும். ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவவும் செய்யும்.
பொது இடங்களில் வைக்கும் தொடுதிரைகளை அழுக்கான கைகளால் பலரும் தொடுவதால், அதில் நிறைய கிருமிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தக் கிருமிகளைக் கொல்ல தாமிரத்தைப் பயன் படுத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தாமிரத்திற்கு கிருமிகளைக் கொல்லும் தன்மை உண்டு. இதனால் தான், மருத்துவமனைகளில் கட்டில், கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை தாமிரத்தில் செய்யப்படுகின்றன.
ஆனால், காட்சி ஊடுருவும் திரைகள் மீது தாமிரத்தை இதுவரை யாரும் பயன்படுத்தியதில்லை. ஏனெனில், தாமிரம் ஒளி ஊடுருவலைத் தடுக்கும், மின்சாரத்தைக் கடத்தும். இதனால் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அய்.சி.ஆர்.இ.ஏ., (ICREA) ஆய்வு மய்யத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒளி ஊடுருவக்கூடிய நானோ தாமிர பரப்பை (Transparent nanostructured copper surface – TANCS) உருவாக்கி உள்ளனர்.
விஞ்ஞானிகள் முதலில் 3.5 நானோ மீட்டர் அடர்த்தி மட்டுமே கொண்ட தாமிரப் பட லத்தை கொரிலா வகை கண்ணாடி மீது படிய வைத்தனர். பின்பு அதை 10 நிமிடங்கள் 390 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு சூடு படுத்தினர். ஆறவைத்த பின்னர் சிலிகான் டை ஆக்சைட், ப்ளூரோசிலேன்ஸ் ஆகியவற்றை மெல்லிய படலங்களாகப் படிய வைத்தனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடி மீது ‘ஸ்டஃபைலோகாகஸ் ஏரஸ்’ எனும் பாக்டீரியாவைப் பரப்பினர்.
இரண்டு மணி நேரத்தில், 99.9 சதவீத பாக்டீரியா இறந்திருந்தது. இரண்டு ஆண்டுகள், இந்தக் கண்ணாடியை நாள்தோறும் இருமுறை துடைத்துப் பயன்படுத்தினாலும் இதன் கிருமி கொல்லும் தன்மை குறையாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.