கட்டுமானத் துறையில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.அய்.டி. பல்கலை ஆய்வாளர்கள் களிமண்ணிற்குப் பதிலாகக் கண்ணாடி, சாம்பலைக் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி செங்கல்லை உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக செங்கற்கள் களிமண், மணல், சுண்ணாம்பு, மெனீசியா, அயன் ஆக்சைட் ஆகியவை சேர்த்து உருவாக்கப்படும். இதற்குத் தேவையான களிமண்ணை எடுக்க பூமியைத் தோண்ட வேண்டும்.
இது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல. களிமண், மணலைச் சிறிய துகள்களாக உடைப்பது, உடைத்த பின்பு செங்கற்களாக அச்சு வார்ப்பது ஆகியவையும் சிரமமான வேலைகள். அத்துடன் சூளை களில் செங்கற்களைச் சூடுபடுத்தவும் அதிக ஆற்றல் தேவை.
அதேபோல், 3 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுடைய கண்ணாடித் துகள்களை மறுசுழற்சி செய்வதும் கடினமான ஒன்றாகும்.
அதனால் வீணாக மண்ணில் புதைக்கப்படும் இந்த கண்ணாடித் துகள்களைச் செங்கற்களில் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் ஆய்வாளர்களுக்குத் தோன்றியது.
கண்ணாடித் துகள், சாம்பல் இரண்டுமே அப்படியே பயன்படுத்தப் பட்டன, சிறிதாக உடைக்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை. அத்துடன் இவை விரைவாகச் சூடாகிவிடுவதால் வழக்கமான செங்கல் தயாரிப்பிற்குத் தேவையான வெப்பத்தையும், ஆற்றலையும் விட 20 சதவீதம் குறைவாகவே தேவைப்பட்டன.
கண்ணாடித் துகள், சாம்பல் இரண்டும் வெவ்வேறு விகிதங்களில் கலந்து சோதிக்கப்பட்டன.
அவற்றில் களிமண்ணுக்கு மாற்றாக, 15 சதவீத கண்ணாடித்துகளும், 20 சதவீத சாம்பலும் சேர்க்கப்பட்டு செய்யப்பட்ட செங்கல் மிக உறுதியாக வந்தது.
இந்தப் புது செங்கற்களால் வீடு கட்டினால் வீடு எளிதில் வெப்பம் அடையாது. வீட்டைக் குளிரூட்டுவதற்குத் தேவைப்படும் மின்சாரத்தை, 5 சதவீதம் வரை சேமிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.