விசாகப்பட்டினம், நவ.20 ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் சுமார் 40 படகுகள் எரிந்து சாம்பலாகின. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கு பரவி பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பில், அடையாளம் தெரியாத நபர், படகு களுக்கு தீ வைத்ததாகவும் கூறி வருகின்றனர். ஆனால், தீ விபத்தின்போது, படகில் இருந்த எரிவாயு உருளைகள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அதுதான் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை காவல்துறையினர், நடத்தி வருகின்றனர்.