ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப். 4– ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு இந்தக் குழு அளிக்கும். இந்த குழுவில் இடம்பெறுவதற்கான அழைப்பை காங்கிரஸ் மக்களவைக்குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிராகரித்துள்ளார். இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற எண்ணம் இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம். ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற எண்ணம் இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதலாகும்” என்று தெரிவித்து உள்ளார்.