புதுடில்லி, செப். 4- டில்லி அய்.அய்.டி-யில், பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் அணில் குமார் (வயது 21), தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டில்லி அய்அய்டி-யில் பி.டெக் கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங் படிப்பில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அணில் குமார் (21). இவர் சில பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், மேலும் ஆறு மாதங்கள் விடுதியில் தங்கிப் படிக்க விடுதி அதிகாரிகளிடம் அனுமதி கோரி யுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று ஆறு மாதங்கள் விடுதியில் தங்க விடுதி நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், அணில் குமார் (வயது 21) தனது விடுதி அறையில் நேற்று (2.9.2023) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர், அணில் குமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவர் அணில் குமார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அம்பேத்கர் பூலே பெரியார் மாணவர் வட்டம் தெரிவித்துள்ளது.
டில்லிஅய்.அய்.டி வளாகத்தில், இது கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது தற்கொலை நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.