எடைக் குறைப்பை படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும், உடல்பருமனைக் குறைக்க மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தெரிவித் துள்ளது. உடல் ஆரோக்கியம் தொடர்பாக அய்சிஎம்ஆர் சமீபத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
உடல் எடைக் குறைப்பு சார்ந்த வழிகாட்டுதலில், வேகமான எடைக் குறைப்பையும், உடல்பருமனுக்கு மருந்து எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், எல்லா வகையான ஊட்டச் சத்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்துக்கு அரை கிலோ எடையைக் குறைப்பதுபாதுகாப்பானது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள அய்சிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும் என்றும் உடற்பயிற்சி மற்றும் யோகா உடல் எடையை குறைக்கவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்த வழி என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவால்.. இந்தியாவில் உள்ள மொத்தநோய்களில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுவதாக தெரிவித்துள்ள அய்சிஎம்ஆர் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில பரிந் துரைகளை வழங்கியுள்ளது.
உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரிவிகித உணவு முறையை பின்பற்ற வேண்டும். எண்ணெய்யில் பொரித்த, பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்ட நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மிகுந்த கடலை வகைகள், பழங்களை சாப்பிட வேண்டும். கோழி, கொழுப்பில்லா இறைச்சி மற்றும் மீன் ஆரோக்கியமானது என்று அறிவுறுத்தியுள்ள அய்சிஎம்ஆர், இனிப்புகளையும் பொரித்த உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.