கோவை, மே 19 கோவை பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி அவர்களின் மகன் ரா.காமராஜ் (வயது 63) உடல் நலக் குறைவால் மே 17 அன்று மறைவுற்றார்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை தன் வாழ்நாளெல்லாம் பரப்பியவர் பெரியார் பெருந்தொண்டர் கணபதி இராமசாமி கோவை கணபதி பகுதியில் பல ஆண்டுகள் புத்தகங்களைப் பரப்பும் பணியை தொடங்கியவர்
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர் அப்பகுதியில் இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அதே கொள்கை பற்றோடு கழக பற்றுடன் செயல் பட்டு வருகின்றனர்
அப்படிப்பட்ட கணபதி இராமசாமியின் இரண்டாவது மகன் காமராஜ் ஆரம்ப காலம் முதல் இயக்கப் பற்றுடன் செயல்பட்டார்.
கணபதி பகுதியில் பல பிரச்சாரம் கூட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கழக வளர்ச்சி பெரிதும் பங்காற்றியதோடு திராவிடர் கழகம் அறிவிக்கும் பல போராட்டங்களிலும் அவர் முன்னணி வீரராக பங்கேற்றவர் காமராஜ்.
அவர் மறைந்த தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில், கோவை கழகத் தோழர்கள் அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று அவருடைய உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
காமராஜின் துணைவியார் தேவி, மகன் பிரபாகரன் மற்றும் மூத்த அண்ணன் வீரசிங்கம், தம்பி இரணியன் உள்ளிட்ட உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பகுத்தறிவுக் கொள்கை வழியில் வாழ்ந்த காமராஜ் உடலுக்கு திராவிடர் கழக கொடி போர்த்தப்பட்டு எந்த மூடநம்பிக்கை சடங்குகளும் இல்லாமல் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பிறகு, பகல் ஒரு மணி அளவில் அவருடைய இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்தில் உம் ஏராளமான கழகத் தோழர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்று, ‘‘கணபதி காமராஜ் அவர்களுக்கு வீரவணக்கம், பெரியார் தொண்டருக்கு வீரவணக்கம் என முழக்கம் எழுப்பியதோடு தொடர்ந்து ஜாதி ஒழிப்பு வீரருக்கு வீரவணக்கம், மத ஒழிப்பு வீரருக்கு வீரவணக்கம்” என்று கழக கொள்கைகளை முழக்கம் எழுப்பி ஊர்வலத்தில் திராவிடர் கழகத்தினர் இறுதி மரியாதை செலுத்தியது கண்டு, அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக வியந்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய உடல் மின் மயானத் திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி மரியாதைக்குப்பின் உடல் எரியூட்டப்பட்டது. அங்கேயே வீர வணக்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கோவை ம.சந்திரசேகர், மேட்டுப்பாளையம் சு.வேலுச்சாமி, பொள்ளாச்சி சி மாரிமுத்து மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் மு.தமிழ்செல்வம், தெற்கு பகுதி தெ.குமரேசன், கிழக்குப் பகுதி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு பகுதி செயலாளர் திராவிடமணி, வடக்கு பகுதி தலைவர் கவி கிருஷ்ணன், கு.வெ.கி. செந்தில், ப.க. ஆனந்தராஜ், மேட்டுப்பாளையம் வெ.சந்திரன், வடவள்ளி பகுதி தலைவர் ஆட்டோ சக்தி, மகளிரணி தோழர்கள் ப.கலைச்செல்வி, திலகவதி, முத்துமணி, கவிதா, தருமன், த.க. கவுதமன், சிவகுமார், இருதயராஜ், லூக்காஸ் பீட்டர், சம்பத், அ.மு.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.