பாம்பை பார்த்தவுடன் என்ன செய்ய வேண்டும், எப்படி எளிதில் தப்பிக்க வேண்டும்?
“பாம்பை பார்த்தால் படையும் அஞ்சும்” என்று சொல்வார்கள். பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இல்லை. பாம்பை கண்டவுடன் அனைவரும் பதற்றத்தில் ஏதேதோ செய்து, அதனிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த பதிவில் நீங்கள் விஷப் பாம்பிடம் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது? எப்படி தப்பிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பயப்படக்கூடாது
பாம்பை பார்த்தவுடன் நீங்கள் முதலில் அச்சம் கொள்ளக் கூடாது. பாம்பு எதிரில் வரும் திசையில் அசைவுகளை செய்யாதீர்கள். பாம்பு இருக்கும் திசையில் ஓடவோ, எதையாவது பாம்பு மீது போடவோ முயற்சிக்காதீர்கள். பெரும்பாலான பாம்புகள் உங்கள் அருகில் வருவதை விரும்புவதில்லை. நீங்கள் அதை துன்புறுத்தவில்லை என்றால் அவைகளாகவே சென்றுவிடும்.
பாம்பு இருக்கும் அறையில் அமைதியை
உறுதி செய்யுங்கள்
பாம்பு இருப்பதை உணர்ந்துவிட்டால் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள், செல்லப்பிராணிகள் என எதையும் பாம்பின் அருகில் அனுமதிக்காதீர்கள். கத்தி அலற வேண்டாம். லைட்டை ஆஃப் செய்வதன் மூலம் ஆபத்தை குறைக்கலாம். ஆனாலும் பாம்பை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். பாம்பு பயப்படக் கூடிய எந்த விடயத்தையும் செய்ய கூடாது. இதன் மூலம் அது உங்களை தாக்க நேரிடும். பாம்பு இருக்கும் திசையில் இருந்து வேறு திசையில் செல்லுங்கள். யாரையாவது உதவிக்கு அழையுங்கள்.
பாம்பை ஓட விடுங்கள்
பாம்பு உங்களை எதிர்நோக்கி வராமல் இருப்பதற்கு நீங்கள் ஒரு நீளமான குச்சியை எடுத்து தட்டுங்கள். பாம்புக்கு காதுகள் இல்லை என்பதால் அதிர்வுகள் இல்லாத இடத்தை நோக்கி ஓடும். நீங்கள் குச்சிகளை வைத்து தட்டுவதன் மூலம் அது மாற்று திசைக்கு ஓடும். பிறகு அது வெளியே ஓடி விட்டால் நல்லது. வேறு ஏதேனும் அறைக்கு சென்றுவிட்டால் அதை அடைத்து விட்டு மற்றவர்களை உதவிக்கு அழைக்கவும்.