என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகின்றேன். அதாவது நானும் உயர்திரு. எஸ்.சீனிவாசய்யங்காரும் காங்கிரசின் பிரசார விஷயமாய் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட எச்சில் இலை அப்படியே இருக்க, அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.
இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு. வெங்கிடுசாமிப் பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரியகுளத்திற்குப் போன போது ஒரு வக்கீல் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்திலும், காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்கு பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊறிக்கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தோம், இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் தான் காங்கிரசில் உழைத்தேனானாலும் காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுவதில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை சொல்லிக் கொள்ளுகின்றேன்.
(கோட்டாறு சுயமரியாதை சங்க ஆண்டு விழாவில், தந்தை பெரியார் 4.7.1934இல் பேச்ச, ‘குடிஅரசு’ – 12.7.1931)