ஆதி கபிலர் சொன்ன
ஆகமத்தின் சொற்படியே
ஜாதி வகை இல்லாமல்
சஞ்சரிப்பது எக்காலம்?
சாத்திரத்தைச் சுட்டுச்
சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு
துயர் அறுப்பது எக்காலம்?
– சிவவாக்கியர்
ஆரிய நால் வருண ஜாதி ஏற்பாட் டிற்கான எதிர்ப்புணர்வு, தமிழ்நாட்டில் தொடக்கக் காலம் முதல் இருக்கவே செய்தது. சுமார் 2500 ஆண்டுகட்கு முன்னரே, ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார், திருவள்ளுவர். ஹிந்து மதம், இம்மண்ணின் மைந்தர்களின் மதமே அல்ல. பவுத்த மதமே இம்மண்ணில் தோன்றிய மதமாகும். ஹிந்து மதத்திற்கு ஜாதியே ஆதாரம். ஜாதி அடையாளங்கள், வரையறைகள் மூலமே இந்தியாவில் ஹிந்து மதம் பேணிக் காக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 15ஆம் நூற்றாண்டு வரை ஜாதிகள் இல்லை. ஜாதி என்ற சொல், தமிழ்ச் சொல்லே இல்லை யெனினும் ஜாதிகள் கிளைத்தன. வந்தேறிகளாகளான ஆரியர்களின் இந்து (ஜாதிய) மதத்தினால் இம்மண்ணின் மைந்தர்கள் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். புத்தமதமும், பாலி மொழியும் இந்நாட்டிலிருந்தே வெளி யேற்றப்பட்டன.
சென்னை தேனாம்பேட்டையில், அயோத்திதாசர் 20.5.1845இல் பிறந்தார். இவர் தந்தை பெயர் கந்தசாமி ஆகும். தமிழறிஞர் வி.அயோத்திதாசரிடம் கல்வி கற்றுக் கொண்டதால் ஆசிரியர் பெயரையே அயோத்தி தாசர் ஏற்றுக் கொண்டார். தாய், தந்தை இட்டப் பெயர், காத்தவராயன். தமது இளமைப் பருவத்தில் நீலகிரியிலும், முதுமையில் சென்னை இராயப்பேட்டை அம்மையப்ப (முதலி) தெருவிலும் வசித்து வந்தார்.
அயோத்திதாசர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்தவாதியாக அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, ‘படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராகப் பலதளங்களில் பங்களிப்பு செய் திருக்கிறார்.
‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அவர்களின் குடும்ப வைத்தியராக அயோத்திதாசர் இருந்திருக்கிறார். இளமையில் திரு.வி.க.விற்கு ஏற்பட்ட முடக்குவாதத்தை நீக்கி அவரை நடமாடச் செய்திருக்கிறார். திரு.வி.க. அவர்கள் சென்னை இராயப்பேட்டை கணபதி (முதலி) தெருவில் வாழ்ந்தவர். (இப்போதுள்ள மியூசிக் அகதெமியின் பின்புறமுள்ள ஒரு சிறிய தெரு).
அயோத்திதாசர் அத்வைத தத்துவ நூல்கள் படித்த காரணத்தினால், 1870- இல் ‘அத்வைதானந்த சபை’ எனும் அமைப்பை நிறுவி, பழங்குடி மக்களை அதன் மூலம் திரட்ட எண்ணினார். ஆனால், அத்வைதத்தின் பிற்கால போக்குகள் ஸநாதன தர்மத்தின் மீது காலூன்றி நிற்பதை அறிந்தார். பூர்வத் தமிழர்களான தாழ்த்தப்பட்ட மக்களை உயர்ஜாதியினரும், பார்ப் பனர்களும் புறக்கணிப்பதை, ஒடுக்குவதை அயோத்திதாசரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
‘வரலாற்றை மறந்தவர்கள் வரலாற்றை உருவாக்க முடியாது’ என்றார் அண்ணல் அம்பேத்கர்.
‘தங்களைத் தாங்களே தெரியாதவர்கள் தங்களினத்தை எங்ஙனம் தெரிந்து கொள்வர் ?’ – சிந்தித்தார், அயோத்திதாசர்.
காலனியாதிக்கத்தாலும் பிராமணிய தேசியவாதிகளாலும் தூக்கிப் பிடிக்கப்பட்ட இந்து மதத்தின் அடுக்கு சமூக முறையின் தொன்மையை கேள்விக்குட்படுத்தினார்.
மதத்தால் நலிவும் வருண வேறு பாட்டால் அவலநிலையும், ஆதி திராவிடர்க்கு ஏற்படக் காரணமாயிருந்தது. பார்ப்பனரும் பார்ப்பனியமுமே என்ற கருத்து இலைமறை காயாக இருந்து கனிந்தது. இதைப் பொது மக்கள் கவனத்திற்குப் பேச்சு, எழுத்து மூலமாக கொண்டு சேர்த்தார்.
ஒரு அகழ்வாராய்ச்சியாளன் அழிந்து போனவற்றின் தடயங்களை மட்டுமே வெளிக்கொணர முடியும். ஆனால், அயோத்திதாசர் – திட்டமிட்டு அழிக்கப் பட்ட இம்மண்ணின் மைந்தர்களின் நாகரிகத்தின் மொத்த அம்சங்களையும் மீட்டெடுத்து மக்கள் முன் வைத்தார்.
பறையர் என்போர் கடும் உழைப் பாளிகள் என்பதால் மட்டும் அவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. பவுத்த மதத்தை ஏற்றுக் கொண்டதினால் தான் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றார்.
1881ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பு எடுத்தபோது தாழ்த்தப்பட்டவர்களைப் ‘பூர்வத் தமிழர்” என்ற பெயரால் குறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் முன் வைத்தார்.
1885ஆம் ஆண்டு தம் கொள்கையைப் பரப்புவதற்காகத் ‘திராவிட பாண்டியன்’ எனும் இதழை நடத்தினார். இந்த இதழின் ஆசிரியராக ஜான் ரத்தினம் பணியாற்றினார்.
1886இல் பழங்குடி மக்களான பூர்வத் தமிழர்கள் ‘ஹிந்துக்கள்’ அல்ல என்று அறிவித்தார்.
1890இல் திராவிட மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு 1.12.1891இல் நீலகிரியில் நடை பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க பத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எல்லாச் சமயக் கோட்பாடுகளின் சாரங்களையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது ‘தியோசிபிகல் சொசைட்டி’. இதனைப் பிரம்ம ஞான சபை’ எனத் தமிழ்ப் படுத்துவார்கள். இந்நிறுவனம் சென்னை அடையாறில் இப்போதும் இயங்கி வருகிறது. இவ்வமைப்பை நிறுவியவர் களில் ஒருவரான ஆல்காட், நிரந்தரமாகச் சென்னையில் தங்கினார். அந்நிறுவனத்தோடு தொடர்பு கொண்ட அயோத்திதாசர், ஆல்காட்டுடன் நட்புக் கொண்டிருந்தார். அவரின் உதவியால் தாழ்த்தப்பட்டோருக்கான பல பள்ளிகளை நிறுவினார்.
1900இல் புத்த நெறியில் ஈடுபாடு கொண்ட அயோத்திதாசர், ஆல்காட் அவர்களுடன் இலங்கை சென்றார்.
1902இல் ‘தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்’ எனும் அமைப்பை இராயப் பேட்டையில் நிறுவினார். புத்தரின் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார். எனவே, இவரை, ‘இந்திய பவுத்த மதத்தின் முதல் மறுமலர்ச்சியாளர் என்று அழைக்கின்றனர்.
‘திராவிட பாண்டியன்’, ‘ஒரு பைசாத் தமிழன்’, ‘தமிழன்’ ஆகிய இதழ்களில் பவுத்த கொள்கை விளக்கங்களை எழுதலானார்.
தமிழ் ‘நீச பாஷை’ என ஒதுக்கப் பட்டது. சமஸ்கிருதம் தேவ பாஷையாக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் சமஸ்கிருதத்தில் உள்ள வேத மந்திரங்களைச் சூத்திரர் கற்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது. இராமாயணத்தில் தவம் இருந்த சம்புகனை இராமன் கொல்வதும், பாரதத்தில் வேடன் ஏகலைவன் தனது கட்டை விரலைத் துரோணாச்சாரியாருக்குக் காணிக்கையாக்குவதும் இதன் அடிப்படையில்தான்.
“கல்வி வாய்ப்புகள் இல்லாத சமுதாயங்களை வரலாற்றில் காண்கிறோம். ஆனால், கற்பதைத் தடுத்த அரசுகள், வருண தர்மத்தை ஏற்ற இந்தியத் துணைக்கண்ட அரசுகள் மட்டுமே!”
நாயக்க மன்னர்கள் 17ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து ஆண்ட பொழுது அங்குச் சுமார் 1000 மாணவர்கள் பயின்ற கல்விக் கூடம் இருந்தது. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்’ என்பதையும், பிறர் அதில் பயில உரிமை இல்லை எப்தையும் இராபர்ட்-டி நொபிலி எனும் இத்தாலி நாட்டுப் பாதிரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். அயோத்திதாசர், ‘தமிழன்’ இதழில் இதனையே குறிப்பிடுகிறார்.
“இத் தமிழ் வழங்குந் தென்னிந் தியாவிலோ ஜாதி நாற்றமென்னும் கசி மலத்தால் தங்கள் ஜாதியார் மட்டிலும் வாசிக்கலாம். ஏனை ஜாதியோர் வாசிக்கப்படாதென்னும் பொறாமையும் பொச்சரிப்பும் வாய்ந்தவர்களாதலின் பொதுநலங் கருதி பத்திரிகைகளை வாசிக்க பிரியமில்லாமல் விட்டு விடுகிறார்கள்.”
தமிழ்நாட்டு மக்களிடம் பரவிய கருத்துக்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பத்திரிகைத் துறை இந் நாளைப் போல அந்நாளிலும் பார்ப்பன அறிவாளிகள் எனப்படுவோர் கைகளில் இருந்தன.
ஜி.சுப்பிரமணிய அய்யர், கஸ்தூரி ரங்கன், பாரதியார் போன்ற பார்ப்பன பத்திரிகையாளர்களைக் குறிப்பிடலாம். 1882இல் தொடங்கப்பட்ட ‘சுதேசமித்திரன்’ பார்ப்பனரின் நலனைக் காக்கும் ‘சுயஜாதி` மித்திரனாகவே வெளிப்படையாக செயல்பட்டது.
19.6.1907இல் ‘ஒரு பைசாத் தமிழன்’ வார இதழ் தொடங்கப்பட்டது. ஒரு இதழின் விலை காலணா – தமிழ்நாடு, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளில் விரும்பிப் படிக்கப்பட்டது. சுதேசமித்திரனில் பார்ப்பனியத்தை, பழைய ஸநாதன சமூக ஒழுங்கைப் பராமரிக்க, நிலைநாட்ட வெளியிட்டச் செய்திகளை, கருத்துகளை, தான் நடத்தும் இதழ்களின் வாயிலாக மறுத்தார்; உண்மைகளை வெளிப்படுத்தினார். அந்நாளில் எவரும் தட்டிக் கேட்பார் யாருமில்லை என்ற நிலையில், அயோத்திதாசர் தட்டிக் கேட்டார்; விடாமல் கேட்டார்.
அயோத்திதாசர் அறம் – ஒழுங்கு சார்ந்த ஒரு கருத்தியல் தளமாகத் திராவிட பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். பார்ப்பனீய இம்சைக்கு எதிர் நிலையில் திராவிட பவுத்த அகிம்சையை வியூகம் அமைத்தார். தமிழ், வடமொழி, பாலி, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த அயோத்திதாசர், தமிழ் நாட்டின் தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தை உருவாக்கிய முதல் தலைவராவார்..
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுடைய நாட்டை அயோத்திதாசர் ‘Downtrodden Nation” என்றே எழுதினார். திருவள்ளுவர், அவ்வையார் படைப்பு களுக்குப் பவுத்த மார்க்கத்தின் கோணத் திலிருந்து புதிய விளக்கங்களைத் தந்தார்.
முசுலீம் படையெடுப்புகளால் ஹிந்து இந்தியா ஆக்கிரமிக்கப்பட்ட தென்றால், அதே போல் பார்ப்பன படையெடுப்பாளர்களால் பவுத்த இந்தியா படையெடுக்கப்பட்டது. ஆனால், முசுலீம்கள் ஹிந்து மதத்தை வேருடன் பிடுங்கி எறியவில்லை. மக்களின் ஆன்மிக வாழ்க்கையை வழி நடத்திவந்த கொள்கைகளுக்கு எந்த. ஊறும் விளைவிக்கவில்லை.
பார்ப்பனிய ஆக்கிரமிப்பாளர்கள், பவுத்தம் பரப்பி வந்த ஆன்மீக வாழ்வின் கொள்கைகள் மீதும் அவற்றை வாழ்க்கை முறையாக பின்பற்றி வந்த மக்களின் மீதும் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தி ‘விட்டார்கள் என்கிறார் அயோத்திதாசர்.
ஜாதிபேதமற்ற பூர்வ பவுத்தர்களை, ஏதுமற்ற வெற்றுப் பார்ப்பனப் புரட்டர்கள்.
வஞ்சனை, சூது, வேசம், கபடம், மித்ரபேதம் போன்ற தீவினைகளால் பறையர் எனத் தாழ்த்தியதாக உணர்ந்ததும் அயோத்திதாசரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இறுதியில் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடித்தவர்களே உலக நீதியின் முன் – மிக இழிந்த ஜென்மங்களாக ஆக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு அயோத்திதாசர் சாகும் வரை சமூக விடுதலைக்காகப் போராடினார்.
சமுதாயம், சமயம், இலக்கியம், அரசியல், வரலாறு, தொழில், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்றவைகளில் ஈடுபாடு கொண்டு தொண்டாற்றினார், அயோத்திதாசர்.
5.5.1914 அன்று அயோத்திதாசர் மறைவுற்றார். திரு.வி.க. அவர்கள் ஈமம் வரை சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து நிலைத்த புகழோடு நம்மோடு வாழும் பண்டிதமணி க.அயோத்திதாசரின் வழியில், பார்ப்பனியத்தை வேரோடு சாய்ப்போம்; சமத்துவத்தை நிலைப்படுத்துவோம்!
தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதோடு ‘சாதி’யும் ஒழிக்கப்பட்டது எனச் சட்டத்திருத்தம் செய்ய குரல் எழுப்புவோம்!
நன்றி: “யாதும் ஊரே” இதழில்
ந.வை.சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரை