தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) அவர்களிடம் திராவிடர் கழக சட்ட துறை சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
பொருள்: புகார் மனு – மன்னார்குடி ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் மற்றும் உத்தரப்பிரதேச சாமியார் பரமஹம்ச ஆச் சார்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
வணக்கம். திராவிடர் கழகச் சட்டத்துறை சார்பாக புகார் மனு என்னவென்றால், 02.09.2023 சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து வெளியிட்ட கருத்தை எதிர்த்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர், மாண்புமிகு அமைச்சர் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்த செய்தி எல்லா தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.
அந்தச் செய்தி மாண்புமிகு அமைச்சரின் தலையை வெட்டிக் கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்தது கொலை முயற்சிக்கு வித்திட்டதாக அமைந்துள்ளது.
அதே போல் மன்னார்குடி ஜீயர் எனப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் அவர்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள காணொலி பேட்டியில், உத்தரப்பிரதேச சாமியார் சொன்ன 10 கோடி போதாது என்றும், இப்படிப்பட்டவர்கள் உலகில் இருக்கக்கூடாது என்றும், மாண்புமிகு அமைச்சரது வாழ்க்கை ஈசல் போலத் தான் அமைந்திருக்கும் என்றும் சொல்லியிருப்பது கொலை வெறிபிடித்த செயலாகும்.
மேற்கண்ட இருவரது பேச்சும் மாண்புமிகு அமைச்சரைக் கொலை செய்யும் முயற்சிக்குத் தூண்டுதலாகும். எனவே காவல்துறை இந்த இரு சாமியார்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து, உ.பி. சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அவர்களையும், மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் அவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, பிணையில் வரமுடியாத வகையில் சிறையில் அடைக்க வேண்டும் என திராவிடர் கழகச் சட்டத்துறையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என திராவிடர் கழக சட்டத் துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் புகார் மனு அளித்துள்ளார்.