பலவிதமான நோய்களுக்கு இயற்கையிலேயே மருந்து உள்ளது என்று கூறுவர். இதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத்து உள்ளது. நரம்பு மண்டலத்தில் பொதுவாக சேதமடைந்த நரம்புகள் தாங்களே தங்களைச் சரி செய்து கொள்ளும் இயல்பு உடை யவை. ஆனால், அவை பழையபடி முழுமையான செயல்பாட்டிற்கு வருவதில்லை. இதற்குக் காரணம் சரி செய்ய உதவும் ஸ்சவான் (Schwann) செல்கள் மூன்று மாதங்கள் மட்டுமே சுறுசுறுப்பாகச் செயல் படுவதும், அதற்குப் பின் மந்தமடைவதுமே ஆகும்.
இதை சீர் செய்வதற்கான மருந்துகளை உருவாக்குவதற்கு, உலகளவில் விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை செய்து வந்தனர். தற்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோலோன் பல்கலை விஞ்ஞானிகள் ப்ளஸ்ட் திஸ்டில் (Blessed thistle) எனும் ஒருவகைச் செடியிலிருந்து எடுக்கப்படும் சிநிசின் (Cnicin) எனப்படும் மருந்து இதற்குத் தீர்வாக அமையும் என்று கண்டறிந்துள்ளனர்.
மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் வளரும் இந்தச் செடி, பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்று வலி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ‘நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட சில நோய்களைச் சரிசெய்ய’ இந்த மருந்து உதவும் என்று நவீன விஞ்ஞானம் கண்டறிந்தது. செயற்கையாக ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட மனித, விலங்கு திசுக்கள் மீது சிநிசின் மருந்தைச் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் நல்ல முடிவு தெரிந்தது. எலி, முயல் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செலுத்தியதிலும் நரம்பு பாதிப்பு சரியாவதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. நியூரான் எனப்படும் நரம்பு செல்களின் முடிவில் ஆக்சான் எனும் நார் போன்ற அமைப்பு காணப்படும். இந்தகைய ஆக்சான் வளர்ச்சியை இந்த மருந்து ஊக்குவிக்கிறது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.