ட்ரோன் தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்றாலும், இது பரவலாக பயன்படாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், அதன் பேட்டரிகள். பெரும்பாலான ட்ரோன்களில் உள்ள பேட்டரிகள் 30 நிமிடம் மட்டுமே பறக்க உதவும். அதற்கு மேல் பறக்க வேண்டுமானால் சார்ஜ் செய்ய வேண்டும். மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவது போல மின்சார நிலையங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட வேண்டும். அதுவும் இந்த நிலையங்கள் ட்ரோன் செல்லுகின்ற பாதையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே, தொடர்ந்து ரீசார்ஜ் செய்து கொண்டு ட்ரோன்கள் அதிக தூரம் பறக்க முடியும்.
இந்தக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கு ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கெப்ளர் பல்கலை., பெரோவ்ஸ்கைட் எனும் குறைகடத்தியைக் கொண்டு எடை குறைந்த செல்களை உருவாக்கியுள்ளது. 2.5 மைக்ரோ மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட இந்த செல்கள் மனித முடியின் அகலத்தில் 1/20 அளவைக் கொண்டவை. இந்த செல்களை ட்ரோன் மீது பொருத்தியுள்ளனர். சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தைத் தயாரித்து இந்த செல்கள் ட்ரோன் இயங்க உதவுகின்றன. ட்ரோன் பறந்து கொண்டிருக்கும்போது இது மின்சாரத்தை உற்பத்தி செய்யாது. மாறாக சூரிய ஒளி கிடைக்கின்ற நல்ல இடத்தில் நிறுத்தி ஒளியை மின்சாரமாக்கும்.
குறைந்த எடை உடைய இந்த சோலார் செல்களின் கண்டுபிடிப்பு ட்ரோன்களில் மட்டுமன்றி, பிற மின் சாதனங்கள் இயக்கவும் உதவும். விஞ்ஞானிகள் இதைச் சோதித்த போது சோலார் செல் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மற்ற ட்ரோன்களை விட 6 சதவீத நேரம் அதிகமாகப் பறந்தன. இது மிகக் குறைவான முன்னேற்றம் தான் என்றாலும் கூட, எதிர்காலத்தில் இதனுடைய ஆற்றல் மேம்படுத்தப்பட்டு முழுவதுமே சூரிய ஆற்றலிலே இயங்கக்கூடிய ட்ரோன்கள் உருவாக்கப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.