திருப்பதி செப்.8 – திருப்பதி சேஷசாசலம் வனப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கர்னூலை சேர்ந்த கவுஷிக் (3) எனும் சிறுவன் சிறுத்தை தாக்கி காயங்களுடன் உயிர் பிழைத்தான். அதன்பின் நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) எனும் சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றது.
இதையடுத்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மதியம் 2 மணிக்கு பிறகு அலிபிரி மற்றும் சிறீவாரி மெட்டு நடைபாதைகளில் அனுமதி இல்லை எனவும், அதேபோல், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திருப்பதி – திருமலை இடையே இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி எனவும் திருப்பதி தேவஸ்தானம் புதிய நிபந்தனையை அறிவித்தது.
மேலும், அலிபிரி மற்றும் சிறீவாரி மெட்டு நடைபாதைகளில் செல்லும் பக்தர்களுக்கு பாது காப்பு கருதி கைத்தடிகளை வழங்க முடிவெடுக்கப் பட்டது.
இந்நிலையில், நேற்று (6.9.2023) மாலை அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டத்தை அறங்காவலர் கருணாகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கைத்தடி கையில் இருந்தால், ஒரு மனோ தைரியம் இருக்கும். சிறுத்தையும் பயப்படும். ஆனால், இதோடு நாங்கள் விட்டு விட மாட்டோம்.
கண்டிப்பாக ஒரு நிரந்தர தீர்வை இதற்கு காண்போம் என கருணாகர் ரெட்டி கூறினார். ஒவ்வொரு பக்தருக்கும் வழங்கப்படும் கைத்தடி, லட்சுமி நரசிம்மர் கோயிலை கடந்ததும் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என தர்மா ரெட்டி தெரிவித்தார்.