கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் அண்ணா அவர்களின் உருவப் படத்தை அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களைக் கொண்டு திறந்து வைத்தார்.
1970 பிப்ரவரி 3ஆம் நாள்-அதாவது அண்ணா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் மத்திய அரசின் மூலம் அண்ணா அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட ஆவன செய்தார்.
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் அண்ணா அவர்களின் உருவச் சிலைகளை நிறுவி, அண்ணா அவர்களின் புகழைப் பெருக்கியுள்ளார்.
சென்னை மாநகரில் “மவுண்ட் ரோடு” என அன்று அழைக்கப்பட்ட நெடுஞ்சாலைக்கு “அண்ணா சாலை’ என்றும், அச்சாலையில் கட்டப்பட்ட பிரமாண்டமான மேம்பாலத்திற்கு “அண்ணா மேம்பாலம்” என்றும் பெயரிட்டார்.
சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்கு 1990இல் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களின் உதவியோடு, “அண்ணா பன்னாட்டு விமான நிலையம்” எனப் பெயர் சூட்டி, அண்ணா அவர்களின் பெயரை உலகின் அனைத்துப் பகுதியினரும் தினமும் உச்சரிக்க வழிவகை செய்தார்.
1997இல் கிராமப்புறப் பகுதிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் “அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” என்னும் புதிய திட்டத்தை மாநில அரசின் முழுச் செலவில் நடைமுறைப்படுத்தியதுடன், 2006 முதல் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 இலட்சம் ரூபாய், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் 50 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கும் மாபெரும் திட்டங்களாக அனைத்துக் கிராம / பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, அத்திட்டங்களின்மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் / பேரூராட்சியிலும் அண்ணா அவர்களின் பெயரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்திட வழிவகை செய்துள்ளார்.
அண்ணா நினைவிடத்தில் அண்ணா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் விளக்கப்படுகின்றன.
2007இல் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டுப் பிறந்த நாள் பரிசாக இசுலாமியச் சமுதாய மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் 3.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடுகளை வழங்கினார்.
2008 செப்டம்பர் 15 முதல் அண்ணா பிறந்த நூற்றாண்டினை ஓராண்டு முழுவதும் கொண்டாடிட 365 நாளும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓரிடத்தில் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட ஆவன செய்தார்.
அண்ணா எண்ணி நிறைவேறாமல் இருந்த ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசித் திட்டத்தை அண்ணா அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துகிறார்.
அண்ணா அவர்களின் நூற்றாண்டுப் பிறந்தநாள் விழாவை நாடே வியக்கும் அளவுக்குக் கொண்டாடிட அறிவுரைகள் வழங்கித் தமது அரசியல் ஆசான் அண்ணா அவர்களுக்குத் தொடர்ந்து பெருமைகள் சேர்த்து வருகிறார்.
அண்ணா அவர்களின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில் அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலிருப்பது எண்ணியெண்ணிப் பெருமைப்படத் தக்கவையாகும்.
இத்தகைய சிறப்புகளோடு அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, அவர்கள் மறைந்து 40 ஆண்டுகள் ஆன பின்னாலும், அவர்தம் பெயர் தமிழக அரசியலில் வலுவாக நிலைபெற்றிருப்பது அண்ணா அவர்களின் இணையற்ற அறிவாற்றலையும் தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணா அவர்களிடம் கொண்டுள்ள அளவற்ற பற்றையும் புலப்படுத்தும் அரிய சான்றாகத் திகழ்கிறது.
வாழ்க அண்ணாவின் புகழ்!
(15.9.2009 – பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மலரிலிருந்து…)