பழ.அதியமான்
பாலக்காடு என்ற ஊர்ப் பெயரைப் பலமுறை கேட்டிருந்தாலும், அவவூரைப் பலமுறை கடந்திருந்தாலும் அன்றுதான் (2017 செப்டம்பர் 9) ஊருக்குள் முதன்முதலாகக் காலெடுத்து வைத்தேன். ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த வைக்கம் சத்தியாகிரகியைத் தேடிய பயணம் அது. சென்னைவாசியான எனக்கு ஆட்டோவில் போக அச்சம். ஊர் சுற்றிப் பார்ப்பது அப்போது எனக்கு நோக்கமில்லை: நேரமும் இல்லை. பேருந்து நிலையத்தில் இறங்கியதும் பக்கத்தில் ஒரு பழைய உணவகத்தைத் தேடிப் பிடித்தேன். மதியம் மூன்றரை மணி. காபி கேட்டேன்: குடித்துக் கொண்டே யாரிடம் கேட்கலாம் என நோட்டம் விட்டேன். ‘கல்லா` அருகே அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஒரு பெருசிடம் (வயது 65 இருக்கலாம்). டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரின் சபரி ஆசிரமம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது” என்று கேட்டேன்.
அடித்த முதல் கல்லிலேயே பழம் விழுந்துவிட்டது. இரண்டு பெயர்களும் அவருக்குப் பரிச்சயமானதாக இருந்தன. ஆனால் குறிப்பாக மட்டும் தெரியவில்லை. அவர் இன்னும் இரண்டு வயசாளிகளைக் கூப்பிட்டு விசாரித்தார். இதற்கிடையில் தன் கையிலிருந்த ஆண்ட்ராய்டையும் நோண்டினார். எட்டிப் பார்த்தேன். சபரி ஆசிரமம் அட்ரஸ் என்று ஆங்கிலத்தில் ஒளிர்ந்தது. ஒரு ஆட்டோக்காரரிடம் முகவரியை விளக்கி, கட்டணமும் பேசி அனுப்பிவைத்தார் அப்பெரியவர். இருபது நிமிடச் சாலைப் பயனத்தில் ஒரு கிராமச் சூழலில் முகம் காட்டின அகத்திக்கராவும் அதன் சபரி ஆசிரமமும்.
புராதனச் சூழல். சிறியதும் அல்லாமல் பெரியதும் அல்லாமல் மூன்று கட்டடங்கள் மூன்று ஏக்கர் அளவு நிலப்பரப்பில் இருந்தன. அதுதான் சபரி ஆசிரமம். கடைசிக் கட்டடத்தில் மனிதப் புழக்கம் தெரிந்தது. அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் தமிழ்நாட்டு ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விவரம் கேட்டேன். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் ஒருவரை அவர் கைகாட்டி விட்டார்; முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து அவரிடமும் விவரம் தெரிவித்து அனுப்பிவைத்தார் எங்களை ஆமாம், ஆட்டோக்காரார் அதுவரை உடன் இருந்தார்.
நாங்கள் போய்ப் பார்த்த தேவனுக்கு வயது 65 இருக்கும். கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓவ்வு பெற்றவர். சபரி ஆசிரமப் பள்ளியிலேயே படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்த்தவர் அவர். உண்டு உறைவிடப் பள்ளியாக இயங்கும் சபரி ஆசிரமம், அரசு உதவி பெறும், அய்ந்தாம் வகுப்புவரை உள்ள பள்ளி. அந்தப் பள்ளியைக் கோபாலகிருஷ்ணன் நாயருடன் இணைந்து அவர்தான் நிர்வகித்து வருகிறார். இவைபோன்ற சில விவரங்களுடன் தேநீரும் தந்தார்.
சபரி ஆசிரமத்தைத் தொடங்கிய டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் (1891 – 1935) – கேரளத்தில் ‘தீண்டப்படாத பிராமணன்’ என்று அழைக்கப்பட்டவர்; ‘தீண்டாதவர்’களுக்காகப் பாடுபட்டவர். வைக்கம் போராட்டத்தை நடத்திய முன்னோடி தலைவர்களுள் ஒருவர். போராட்டம் தொடர்பாக கேசவ மேனன், ஜார்ஜ்ஜோசப் ஆகியோருக்கு அடுத்து காந்தியாரிடம் தொடர்ந்து ஆலோசனை கலக்கும் பணியைச் செய்தவர். போராட்டத்திற்குத் தமிழ்நாட்டிலிருந்து பெரியாரை அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தித் தந்தி அனுப்பியவர்களுள் இன்னொருவர். பெரியார் வைக்கம் சென்ற நாளில் கொச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவருடன் கலந்துகொண்டவர்.
சத்தியாகிரகம் செய்து கைதாகிச் சிறை சென்றவர், வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து சுசீந்திரம் போராட்டத்திலும் (1926) ஈடுபட்டவர். ‘யுவபாரதி’ என்ற இதழையும் நடத்தியவர்.
எம்.ஏ., பி.எல். படித்த டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் வக்கீல் தொழிலைக் கைவிட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியவர். 1923இலேயே ‘மிஸ்ர போஜன’த்தை (சமபந்தி போஜனம்) நடத்தியவர். விளைவாக ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டு ஊரை விட்டும் வெளியேற்றப்பட்டார். மனைவியை இவரிடமிருந்து பிரித்துப் பிறந்த வீட்டுக்கு அனுப்பவும் ஜாதிக் கட்டுப்பாடு முயன்றது. அந்த ஈஸ்வரி அம்மாள் அதற்கு மறுத்துக் கணவருடன் ஊரிலிருந்து வெளியேறிவிட்டார். வசிப்பிடம் இல்லாது தவித்தபோது நிலச்சுவான்தார் ஒருவர் இடம் அளித்தார். அந்த இடத்தில் 1923இல் உருவானதுதான் சபரி ஆசிரமம். அதில் தீண்டப்படாதவர் என்று அழைக்கப்பட்டவர்களுக்குக் கல்வி அளித்தார். ‘தீண்டப்படாதவர்’களிடம் நெருங்கிப் பழகி அவர்களது உயர்வுக்குப் பாடுபட்டதால் இவர் ‘தீண்டப்படாத பிராமணன்’ ஆக்கப்பட்டார்; அப்படியே அழைக்கவும் பட்டார்.
கேரளத்துக்கு காந்தியார் வந்தது. அய்ந்து முறைதான். அதில் மூன்று முறை சபரி ஆசிரமம் வந்ததாகச் சொல்கிறார்கள். அச்சமயம் ஒன்றில் எடுக்கப்பட்ட நிழற்படமும் உண்டு. அதில் காந்தியாரும் கஸ்தூரிபாவும் சிறு மேடையில் அமர்ந்திருக்கப் பக்கத்தில் கிருஷ்ணசாமி அய்யர் நின்றுகொண்டுள்ளார்.
டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் வாழ்க்கைச் செயல்பாடுகள் குறித்த நூல்கள் சில மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வந்துள்ளன. 96 பக்கம் கொண்ட அவரது வாழ்க்கைக் கதை கோபாலகிருஷ்ணன் நாயரால் எழுதப்பட்டு 2012இல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் பாஷா சங்கம், டாக்டர் எம்.ஆர்.தம்பானைப் பொதுப்பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்ட நூல் தொடரில் அது இடம் பெற்றுள்ளது. இன்னொன்று சபரி ஆசிரமம் பற்றிய சிறு நூல். அதுவும் கோபாலகிருஷ்ணன் நாயரால் எழுதப்பட்டதுதான். அது 2015இல் வெளிவந்துள்ளது. 64 பக்கம் கொண்ட அந்த நூலில் அட்டைப் படத்தில் முன்னர் குறிப்பிட்ட காந்தியார் – சபரி ஆசிரமக் காட்சி இடம் பெற்றுள்ளது. ‘அயித்த ஜாதிக்காரனாய பிராமணன்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. ‘அயித்த ஜாதிக்காரனாய பிராமணன்’ என்ற மற்றொரு சிறுநூல் திருச்சூர் காந்தி அமைதி நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது (2014). இதன் ஆசிரியர் வி.ராமச்சந்திரன். கிருஷ்ணசாமி அய்யரின் (இண்டாவது) மகன் பி.கே.நடராஜன் அவர்களின் நினைவுகளைத் தாங்கிய ‘அண்டச்சபிள் பிராமின்’ என்றொரு ஆங்கில நூல் வெளிவந்துள்ளது. இதை நடராஜனின் மகள் எழுதியுள்ளார். கோலாலம்பூரிலிருந்து வெளியான (2000) அந்த ஆங்கில நூல் விற்பனைக்கானது அன்று; உறவினர்களுக்குள் பகிர்ந்துகொள்ள எழுதப்பட்டதாகும்.
தேவன் சில விவரங்களைச் சொன்னதோடு மேலும் விவரங்களுக்குக் கோயம்புத்தூரில் வசிக்கும் கிருஷ்ணசாமி அய்யரின் உறவினரை அணுகும்படிக் கேட்டுக்கொண்டார். சில வார இடைவெளிக்குப் பிறகு கோவையில் 2017 அக்டோபர் 14 அன்று மோகன் – ரோகிணி இணையரைச் சந்தித்தேன். காலை வேளையில் மிக அழகான அவர்களது வீட்டின் வரவேற்பு அறையி நிகழ்ந்தது அந்தச் சந்திப்பு. மோகன் என்ற மோகன்தாஸ் கிருஷ்ணசாமி அய்யரின் முதல் மகனான ராமச் சந்திரனின் மகன், ஓய்வுபெற்ற வங்கி அலுவலர். அவரது மனைவி ரோகிணி வயநாட்டைச் சார்ந்த தர்மராஜா அய்யரின் மகள். கிருஷ்ணசாமி அய்யர் குடும்பம் என்றதும் வேறு எதையும் கேட்காமல் சம்பந்தத்திற்குச் சரி என்றாராம் தர்மராஜா. இவர்களது திருமணத்திற்கும் முன்பே தாத்தா கிருஷ்ணசாமி அய்யரும் பாட்டி ஈஸ்வரி அம்மாளும் இறந்து விட்டதால் செவிவழியாக வந்த குடும்பத்துச் செய்திகளை என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.
டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர் – ஈஸ்வரி அம்மாளுக்கு (1897- 1978) ராமச்சந்திரன், நடராஜன், அருந்ததி என மூன்று மக்கட் செல்வங்கள். ராமச்சந்திரனுக்கும் மூன்று குழந்தைகள். அதில் இரண்டாவது மகன் மோகன்தாஸைத்தான் கோயம்புத்தூரில் சந்திக்க முடிந்தது; மற்றவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி.
கிருஷ்ணசாமி அய்யரின் இரண்டாவது மகன் நடராஜன்- ராதாமணியின் மகள். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சுதந்திரா. (ஆமாம், நீங்கள் யூகிப்பதுபோல ஆகஸ்ட் 15ஆம் நான் பிறந்தவர்தான் அவர்) ‘அண்டச்சபிள் பிராமின்’ என்ற விலையில்லா ஆங்கில நூலை அப்பா (நடராஜன்) குறித்து வைத்திருந்த நினைவுகளை விரித்து எழுதி உறவினர்களுக்கு விநியோகித்தவர் அவர்தான். அவரும் அவரது தங்கை ஜெயந்தியும் ஆஸ்திரேலியாவாசிகள்.
தேவன் குறிப்பிட்ட அந்த நூலை மோகன்தாஸ் தன் தங்கை ராஜேஸ்வரியிடமிருந்து வாங்கி நகலெடுத்துத் தந்தார்.
கிருஷ்ணசாமி அய்யரின் ஒரே மகளான அருந்ததிக்கு மூன்று செல்வங்கள். அதில் ஒரு மகள் மட்டும் தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.
‘அண்டச்சபிள் பிராமின்’ என்ற அந்தக் குறுநூல், நாவலைப் போன்ற நடையில் அமைந்துள்ளது; பெரிதும் பேச்சு வழக்கு. குறிப்பான விவரங்கள் எதையும் அந்நூலிலிருந்து பெற இயலவில்லை.
வைக்கம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கிருஷ்ணசாமி அய்யர் சிறையில் இருந்த காலத்தில் அவர் தந்தை ராமசாமி அய்யர் மிகுந்த துயர் உற்றிருந்தார். அப்போது காந்தியார் ஆறுதலாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடித வாசகம் வருமாறு:
“3 ஜூன் 1924ஆம் நாள் ஜார்ஜ் ஜோசப் என் மகனுக்கு எழுதிய கடிதம் மூலம் தகவல் தெரிந்துகொண்டேன். உங்கள் வீரமகன் கிருஷ்ணசாமி சிறையில் இருக்கும்போது உங்கள் மகள் காலமானது தெரிந்தது. உங்கள் இன்னொரு மகன் மனநிலை சரியில்லாமல் இருப்பதும் எனக்குத் தெரியும், நான்கு மகன்களுக்குத் தந்தையான என்னால் உங்கள் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியும். துக்கத்தில் இருக்கும்போதுதான் கடவுளிடம் நாம் கொண்ட நம்பிக்கை முழுமை அடைகிறது. அவர் உங்களுக்குத் தேவைப்படும் உறுதியை அளிப்பார்.”
காந்தியார் சபரி ஆசிரமத்துடன் நல்ல தொடர்பில் இருந்திருக்க வேண்டும். வைக்கம் போராட்டத்தில் 1925 மார்ச்சில் சமாதானம் பேச வந்த காந்தியார் சபரி ஆசிரமம் சென்று விட்டுத்தான் தமிழ்நாடு வழியாக ஊர் திரும்பினார்.
கேரளத்தில் அணுகாமையும் கடைப் பிடிக்கப்படுகிறது என்று கண்கூடாகக் காந்தியார் கண்டது சபரி ஆசிரமத்தில் ஓர் இரவு தங்கியிருந்தபோதுதான். இராஜாஜி அதைக் காந்தியாருக்குச் சுட்டிக்காட்டினார். காந்தியாரின் வார்த்தைகளில் அந்தச் சம்பவம் வருமாறு:
“பாலக்காட்டை அடைந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இராஜாஜி என்னிடம் வந்தார். ஏதாவது வித்தியாசமான சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்களா என்று கேட்டார். ஆமாம், ஏதோ சத்தம் கேட்கிறது என்றேன். அது என்ன சத்தமென்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். பிறகு அது நாயாடிகள் எழுப்பும் சத்தம் என்று எனக்குச் சொன்னார். இதைச் சொல்லும் போது அந்தச் சத்தம் கேட்கும் இடத்திலிருந்து கல்லெறியும் தூரத்தில் சில மனிதர்கள் இருந்தனர்.
‘யார் அந்த மனிதர்கள்? இந்தச் சத்தத்தை எழுப்புகிறவர்கள் யார்?’ என்றேன். அந்த மனிதர்கள் சாலையில் நடக்கவில்லை. அந்தச் சாலையின் ஓரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவர்கள் நின்றிருக்க வேண்டும். நான் அவர்களை அருகில் வரச் சொன்னேன். அவர்கள் வந்தார்கள். ஆனால் சாலையின் பக்கம் வரவில்லை. சாலையின் பக்கம் தாங்கள் வரக் கூடாது என்றார்கள்.”
தீண்டாமை இருப்பது காந்தியாருக்குத் தெரியும். கேரளத்தில் அணுகாமை இருப்பது காந்தியாருக்கு அப்போதுதான் தெரிந்திருக்கும் அல்லது அதை அவர் நேரடியாக உணர்ந்திருக்கலாம். அணுகாமையைக் காந்தியாருக்கு உணர்த்திய இடம் சபரி ஆசிரமமும் அது அமைந்திருந்த பாலக்காடும் எனலாம். அப்படியான ஒரு ஊரில் தீண்டத்தகாதவர்களுக்குப் பள்ளியைத் திறந்ததும் மிஸ்ர போஜனத்தை நடத்தியதும் ஒரு தலித் குழந்தையை வளர்த்ததும் கிருஷ்ணசாமி அய்யர் என்ற மனிதர், அப்படியிருக்க அவர் தீண்டத்தகாத பிராமணனானது ஒன்றும் ஆச்சரியம் இல்லை; எனினும் வருந்தவும் கண்டிக்கவும் நீக்கவும் வேண்டிய அடைமொழிதான் அது.
அப்படி இருந்த கேரளத்தில்தான் போராட்டம் நடத்தி அந்தத் தெருவில் பிறகு “அவர்கள்” நடந்தார்கள்.