ஊற்றங்கரை, மே 11 ஊற்றங்கரை ஆர்.பி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 07.05.2024 முதல் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க ஊற்றங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளரை சந்தித்து தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் கழக மாவட்ட தலைவர் கோ.திராவிட மணி, மாவட்ட செயலாளர் செ.பொன்முடி, பொதுக் குழு உறுப்பினர் பழ,பிரபு, மாவட்ட துணைத் தலைவர் வண்டி. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ், திராவிட முன்னேற்ற கழக நகர அவைத்தலைவர் சு.தணிகை குமரன், திமுக தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவர் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர் வே.குபேந் திரன், மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளரணியின் துணை பொறுப்பாளர் கோ.அசோகன், சிபிஎம் கட்சியின் பொறுப்பாளர் லெனின் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சார்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்று மாலைக்குள் பள்ளி வளாகத்திற்குள் பயிற்சி முகாம் நடைபெறாமால் தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
விடுதலையில் வெளியான செய்தி அறிந்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தலின்படி மெட்ரிக் குலேஷன் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலு வலர் பள்ளியை ஆய்வு செய்ததுடன் விளக்கம் கோரல் கடிதம் (show cause notice) கொடுக்கப்பட்டு உள்ளது.
விடுதலையில் வெளியான செய்தி அறிந்து கல்வி நிலையங்களை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். சூழ்சிகளை முறியடிக்க மிக விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசிற்கும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும், ஊற்றங்கரை அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது