திருச்சி, திருவெறும்பூர் அருகே இருப்பது பூலாங்குடி காலனி. இந்தப் பகுதியைச் சுற்றித்தான் OFT, HAPP, BHEL போன்ற மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன! அப்படியான OFT நிறுவனத்தில் (துப்பாக்கித் தொழிற் சாலை) பணியாற்றியவர் தான் பெரியார் பெருந்தொண்டர் பால்ராஜ் அவர்கள்! சிலர் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள், ஆனால் தன்னைச் சுற்றிலும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவர்கள்!
அப்படி தம் குடும்பத்தினர் அனைவரையும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கி வைத்திருப்பவர் தான் பால்ராஜ் அவர்கள்! அவரின் வாழ்விணையர் ரெஜினா அவர்களை இந்த வார ஞாயிறு மலருக்காகச் சந்திக்கச் சென்றோம்!
தெரியாதவர்கள் உண்டோ!
மகன், மகள், பேரன், பேத்தி என அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்! ஒவ்வொருவர் முகத்திலும் அப்படி ஒரு உற்சாகம்! திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை ரெஜினா (பால்ராஜ்) என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது!
தெருமுனைக் கூட் டம், பொதுக் கூட்டம், கலந்துரையாடல் கூட்டம், கருத்தரங்கம் என எந்தப் பிரச்சாரம் என்றாலும், ரெஜினா அவர்கள் அங்கே இருப்பார்கள்! கூட்டம் முடிய இரவு 9 ஆகுமே, பேருந்து கிடைக்காதே என்றெல்லாம் அவர்கள் கவலைப்பட்டதில்லை! நிகழ்ச்சிக்குப் போக வேண்டும்; நம் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது எண்ணம்!
இசைக் குடும்பம்!
வயது 65 ஆகிறது. இன்றைக்கும் இயக்கப் பாடல்களைப் பாடுவதில் அவ்வளவு ஆர்வம்! நமக்குக் கூட நான்கைந்து பாடல்களைப் பாடிக் காண்பித்தார். “அம்மா! அந்தப் பாடலைப் பாடுங்கள், நன்றாக இருக்கும்”, என்கிறார் இணையர் பால்ராஜ். இந்தப் பாடலை விட்டுவிட்டீர்களே என நினைவு செய்கிறார்கள் மகன், மகள்கள்! எங்க அம்மாயி எங்களைத் தூங்க வைக்க திராவிடர் கழக பாட்டுத்தான் பாடுவார்கள் என்கிறார்கள் பேரன், பேத்திகள். கேட்கவே நமக்கு ஆசையாக இருக்கிறது!
ரெஜினா அவர்களின் சொந்த ஊர் கோயில் எசனை. இது அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. பெயரைப் படித்தாலே தெரிந்துக் கொள்ளலாம், இது கோயில்கள் நிறைந்த ஊர்! பால்ராஜ் அவர்களை 1974ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணம் செய்து, பூலாங்குடி பகுதிக்கு வந்திருக்கிறார்கள். ரெஜினா அவர்களின் தந்தையார் திருமணத்தைத் தேவாலயத்தில் தான் நடத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் பால்ராஜ் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை! ஆசிரியராகப் பணியாற்றிய, தமது அண்ணன் செல்வராஜ் அவர்கள் தலைமையில் திருவெறும்பூரில் இணையேற்பு விழா நடைபெற்றுள்ளது!
திசை மாறிய வாழ்க்கை!
பால்ராஜ் அவர்களுக்கு எப்போதுமே பெரியார் குறித்த பேச்சு தானாம்! அதேநேரம் ரெஜினா அவர்கள் சர்ச்சுக்குப் போவதைத் தடுக்கவில்லை. இந்நிலையில் திராவிடர் கழகக் கூட்டங்களுக்கும் போக தொடங்கியுள்ளார். திருச்சி பெரியார் மாளிகையில் 1986 ஆம் ஆண்டு, 2 நாள் மகளிர் பயற்சி முகாம் நடைபெற்றதாம்! அதில் கலந்து கொண்ட பிறகே, இவர்கள் வாழ்வின் திசை மாறியிருக்கிறது!
மூடநம்பிக்கையின் தன்மைகளைப் புரிந்து, கிறிஸ்தவ மதத்தின் பொய், புரட்டுகளை நன்றாக அறிந்து கொண்டேன் என்கிறார். அதைவிட பெரியாரியக் குடும்பங்களின் தோழமை பெரியளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மட்டு மின்றி இயக்க ஈடுபாடுகள் வளர, வளர துணிச்சலும், தவறுகளை எதிர்க்கும் தன்மையும், எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலும் கிடைத்திருக்கிறது!
தெருமுனைக் கூட்டங்கள் தேவை!
இவர்களுக்குச் சொந்தமான வயலில் வேலை பார்க்கும் போது நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவார்களாம். அதே ராகத்தில் இனவுணர்வு, மொழியுணர்வு, பகுத்தறிவு, புதிய கல்விக் கொள்கை, தேர்தல்கள் என எந்த ஒன்றையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. பால்ராஜ் அவர்கள் பாட்டெழுத, ரெஜினா அவர்கள் இசைய மைத்துப் பாடுகிறார். இவர்கள் ராகம் ஒலிக்காத இயக்க நிகழ்வுகளே குறைவு! அதுவும் மாவட்டத் தலைவராகக் கோமாகுடி பிச்சையப்பா, செயலாளராக காட்டூர் அரங்கராஜ் ஆகியோர் இருக்கும் போது, 2 மாதத்திற்கு ஒரு பொதுக் கூட்டம் நடக்குமாம்! இவர்கள் வசிக்கும் சிறு பகுதியான பூலாங்குடி காலனியில் கூட 3 மாதத்திற்கு ஒரு கூட்டம் நடைபெறுமாம்!
“தெருமுனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்தினால், கடைத் தெரு வசூலை எளிதாக வசூலிக்கலாம்”, என்கிறார் ரெஜினா அவர்கள்! மாவட்டப் பொறுப்பாளர்கள் பணி செய்வது ஒருபுறம், அந்தந்தப் பகுதி தோழர்கள், எங்கள் பகுதியில் கூட்டம் நடத்த வேண்டும் என அடிக்கடி கூற வேண்டும் என்கிறார்! இவர்களின் அந்தச் சிறு பகுதியில் பெரியார் படிப்பகம் உள்ளது. ஆசிரியர் அவர்கள் தான் திறந்து வைத்துள்ளார்கள்! திருச்சி மாவட்டம் தவிர, தமிழ்நாடு அளவிலான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக 95 விழுக்காட்டிற்கும் மேலான பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளார்!
தி.க.காரர் வீடு எங்கே?
இவ்வளவு தீவிரமாக இருந்தால், உறவுகளில் பிரச்சினை வராமல் இருக்குமா? திருமணமான தொடக்கத்திலே அம்மா, அப்பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பத்து ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளனர். பெற்றோர் சொத்தே வேண்டாம்; பெரியார் கொள்கையே போதும் எனக் கருதி, பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து, இன்று பேரன், பேத்திகள் வரை இயக்கத்திற்குக் கொடுத்தவர் ரெஜினா அவர்கள்!
பெரியார் பிறந்த நாள் வந்துவிட்டால் கொடி யேற்றுவது, இயக்கப் பாடல் களை ஒளிபரப்புவது, சர்க்கரைப் பொங்கல் வைப்பது எனத் தம் கிராமத்தையே பகுத்தறிவுப் பூர்வமாக மாற்றி விடுகிறார்கள். இப்படி செய்பவர்களுக்குக் கூடுதல் நன்மை ஒன்று இருக்கிறது. யாராவது புதிதாக அந்த ஊருக்குச் சென்று, பெயரைக் கூறி, தி.க என்று சொன்னால் போதும், வீட்டை அடையாளம் காட்டிவிடுவார்கள். நாம் அப்படித்தான் போனோம்!
கடவுள் இருப்பதை நிரூபிக்கிறேன்!
இவர்கள் வீட்டிற்கு அருகில் ஒருவர் இருந்தாராம். ரெஜினா அவர்களோ கிறிஸ்தவக் குடும்பம். “என்னோடு சிறீரங்கம் வாருங்கள், அங்கே கடவுள் இருப்பதை நிரூபிக்கிறேன்”, என்றாராம். இரண்டே ஆண்டுகளில் கருப்புச் சட்டை அணிந்து, இயக்கத்திற்கு வந்துவிட்டாராம்! அதேபோல தமது தந்தையுடன் பல முரண்கள் தொடர்ந்த நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு நானும் வருகிறேன் என்றார்களாம்… அதுவும் புது கருப்புச்
சட்டையுடன்!
இவர்களுக்கு 2 மகன், 2 மகள். நால் வருக்குமே சுயமரியாதைத் திருமணம் தான்! பிள்ளைகள், பேரன், பேத்திகளுக்குக் கிறிஸ்தவ மத ரீதியான எந்த விழாக்களும் இவர்கள் நடத்தியதில்லை! பலரும் சிறப்பாகக் கொண்டாடும் கிறிஸ்மஸ் விழா கூட, இவர்கள் வீட்டில் கிடையாது! ரெஜினா அவர்கள் 8 ஆவது வரை மட்டுமே படித்திருக்கிறார். எனினும் அறிவியல் ரீதியான, பகுத்தறிவு வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
போராட்டமும், சிறையும்!
திருவெறும்பூர் ஒன்றியத் தலைவராக ஞா.ஆரோக்கியராஜ், செயலாளராக மு.சேகர் பணியாற்றிய காலத்தில், இவர் பொருளாளராக இருந்துள்ளார்! தவிர திருச்சி மாவட்ட மகளிரணி தலைவராகவும், தற்போது பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்!
வானொலி நிலையம் முன்பான மறியலில் 10 நாள் சிறையும், காவிரி நீர் போராட்டத்தில் 3 நாள் சிறையும் பெற்றுள்ளார். “நான் துப்பாக்கித் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகிறேன், நீங்கள் இயக்க நிகழ்வுகளுக்குப் போய் வாருங்கள்!”, என இணையர் பால்ராஜ் அடிக்கடி கூறுவாராம்! வெளியூர் நிகழ்ச்சி முடித்து, நள்ளிரவில் பேருந்து கிடைக்காமல், 8 கி.மீ. தூரம் நடந்தே வீட்டிற்கு வந்துள்ளார்களாம்!
திராவிட இயக்கத்தின் வெற்றி!
இந்த இணையர்களே எழுதிய இயக்கப் பாடல்கள் ஏழெட்டு நோட்டுகள் இருக்கிறது! குலக்கல்வி தொடர்பான ஒரு பாடலை 20 ஆண்டுகளுக்கு முனபே எழுதியுள்ளார். “செருப்பு தைக்க வேண்டுமாம், நம்ம துணி வெளுக்க வேண்டுமாம், மேளம் கொட்ட வேண்டுமாம், நம்ம முடிதிருத்த வேண்டுமாம், மரம் அறுக்க வேண்டுமாம், நம்ம மூட்டை தூக்க வேண்டுமாம், வீதி கூட்ட வேண்டுமாம், நம்ம மாடு மேய்க்க வேண்டுமாம்… ஆனால் பார்ப்பான் மட்டும் படித்து விட்டு பட்டம் பெற வேண்டுமாம்”, என முடிகிறது அந்தப் பாடல்!
இறுதியாக இரண்டு செய்திகளை நாம் சொல்ல முடியும்! அதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி! ஆம்! இவர்கள் வீட்டில் நுழைந்ததும் எங்கேயும் இயேசு படமோ, மேரி படமோ இல்லை. அங்கே தந்தை பெரியார் இருக்கிறார், திருவள்ளுவர் இருக்கிறார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இருக்கிறார், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறார்! மற்றொன்று, கிறிஸ்தவக் குடும்பங்களில் பைபிளை வைத்துக் கொண்டு பாடல் பாடிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் வீட்டில் பகுத்தறிவு இசை கேட்டுக் கொண்டே இருக்கிறது!
இயக்க வாழ்வில் ஒரு மகளிராய் ரெஜினா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்!