பாணன்
இந்திய ரயில்வேத்துறையின் தற்போதைய அவலங்களைப் போக்க லாலு, மம்தா போன்றோர் அமைச்சராக இருந்த காலம் மீண்டும் திரும்புமா?
இந்தியன் ரயில்வே 2014-களுக்கு முன்பு சாமனியனுக்கு குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப் பயணத்திற்கு ஏதுவான ஒன்று – ஆனால் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு?
இந்திய ரயில்வேயின் ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஆடுமாடுகளை கொண்டு செல்வது போல் நெரிசலாக ரயில் பெட்டிகள் மாறிவிட்டன. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், அதில் எந்த தயக்கமும் இல்லாமல் பிறருடைய இடங்களில் அமர்ந்துகொள்வது, பாதைகளில் கூட உட்கார்ந்துகொள்வது பொதுவானதாகி விட்டது. முன்பு முன்பதிவு பெட்டியில் மட்டுமே இருந்தது, தற்போது குளிர்சாதன இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்பு பெட்டி வரையிலும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக பயணிக்கிறார்கள்.
அன்றாடம் சமூகவலைதளங்களில் இப்படி அவதிப்பட்ட பயணிகளின் கண்ணீர் கதைகளும், குமுறல் வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் பதிவேற்றப்படுகின்றன.
எல்லோரும் தவறாமல் ரயில்வே அமைச்சரிடம் முறையிடுகின்றனர். ஆனால் அமைச்சரோ, அரசின் மீது அவதூறு பரப்ப செய்யப்பட்ட பொய் பரப்புரை இது. ரயில்கள் சொர்க்கமாகிவிட்டன என கூறிக்கொண்டு இருக்கிறார்!
முன்பதிவு செய்தவர்களின் நிலையும் மோசம்தான். சாதாரண முன்பதிவில் ஒருமாதம் முன்பே காத்திருப்போர் பட்டியலில் முதலிடம் பதிவு. பதிவு செய்தாலும் படுக்கை கிடைப்பதில்லை. முதியவர்களுக்கு கூட ஆர்ஏசி அதிகமாக போடப்படுகிறது. வரிசையாக இரவு நேரத்தில் அமர்ந்துகொண்டே போகிறவர்களை நிறைய பார்க்க முடிகிறது.
அரசு பொது ரயில்களை தவிர்த்துவிட்டு ‘வந்தே பாரத்’தில் அதிக கவனம் செலுத்து கிறது.
இதற்கு காரணம் தனியார் மயமாக்கல் – ரயில்வே பங்குச் சந்தையில் நுழைந்து தனியார் முதலீடுகளை பெறத்தொடங்கிய பிறகுதான் இந்த நிலை என்பது கண் கூடாகத்தெரியும்.
ரயில்வே மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்கிற இடத்திலிருந்து முத லீட்டார்களை கவர அவர்களுக்கு படம் காட்டும் இடத்திற்கு நகர்ந்துவிட்டது. இதுதான் தனியார் மயத்தின் மய்யப்பகுதி – இனி முழுக்க தனியாருக்கு கொடுக்க வேண்டியதுதான்.
பணத்தை மிச்சப்படுத்தும், லாபத்தை பெருக்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருக்கிறது ரயில்வே!
அதனால்தான் முன்பு இருந்ததைவிட ஏ.சி. பெட்டிகள் அதிகமாகவும், ஸ்லீப்பர் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளையும் படிப்படியாக வெகுவாக குறைத்தும் விட்டார்கள். இன்று எந்த ரயிலில் பார்த்தாலும் ஏசி பெட்டிகள்தான் அதிகமிருக்கின்றன. அதோடு அதிகம் லாபம் ஈட்டித் தராத பாசஞ்சர் வண்டிகளையும் பெருமளவில் குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலான ஹிந்தி மாநிலங்களில் முக்கிய நகரங்களைத் தவிர்த்து பேருந்து வசதிகள் என்பது இல்லாத நிலைதான்.
அவர்களுக்கு (வடமாநிலங்களுக்கு) ரயில் ஒன்றே கதிமோட்சம். அதை நம்பியே அவர்களுடைய வாழ்வாதாரம் இயங்குகிறது.
ரயில்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான நிதியும் குறைக்கப் பட்டிருக்கிறது. முன்பெல்லாம் ரயில்களில் காவல்துறை கண்காணிப்பை பார்க்க முடியும். இப்போதெல்லாம் யாரையும் பார்க்க முடிவதில்லை. ஏசி பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகளில் பராமரிப்பு என்பது பேருக்குத்தான் செய்யப்படுகிறது!
ஏழைகள் பயணிக்கமுடியாதபடி முன்பதிவற்ற பெட்டிகளைக் குறைத் திருக்கிறார்கள், அவர்களெல்லாம் எப்படி ஊர்களுக்கு செல்லமுடியும். அதனால்தான் மக்கள் ‘ரிசர்வ்ட் காம்பார்ட்மென்ட்களில்’ ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகிறார்கள். இன்னொரு பக்கம் வந்தேபாரத் ரயில்களின் மேல் அதிக கவனத்தையும் மற்ற ரயில்களின் மீதான கவனத்தையும் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. அவற்றின் வேகம் குறைக்கப்படுகிறது. பிற ரயில்களுக்கு பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் செய்யப் படுகிற நிதியில் பெரும்பான்மை இந்த வந்தே பாரத் ஜிகினாவுக்கும் ரயில் நிலைய தாடிபொம்மை செல்பி பாய்ன்ட்களுக்கும் போகிறது! சதாப்தி மாதிரியான சிறப்பு ரயில்களில் பயணித்துப்பாருங்கள், குப்பைத்தொட்டிக்குள் இருப்பதுபோலவே இருக்கும். அதில் தரப்படுகிற உணவும் வெந்தும் வேகாத கழிவுதான்.
இது ரயில்வேயை தனியார் மயமாக்கு வதற்கானதே என்பது உறுதி, இப்படியே போனால் இந்தியா முழுக்கவே உயர் நடுத்தர வர்க்கமும், பணக்காரர்களும் மாத்திரம்தான் ரயில்களில் பயணிக்க முடியும் என்ற நிலை உருவாகிவிடும். வந்தே பாரத் ரயில் இதற்கு பெரும் எடுத்துக்காட்டு. ரயில் கொள்ளையர்களாக மாறி ரயில்களை ஹைஜாக் பண்ணத் தொடங்கி விடவும் வாய்ப்பிருக்கிறது!
இவர்கள் மக்களுக்கானவர்கள்
ஏழைகளின் ரதம் என்ற பெயரில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்தினார். காரணம் அப்போது முழுமையான குளிர்சாதன வசதிகள் கொண்ட சதாப்தி, பெருநகரங்களை இணைக்கும் ரயில், ராஜதானி – தலைநகரங்களை இணைக்கும் ரயில் போன்றவை கட்டணம் அதிகம். இந்த சேவை சாமானியர்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தினார்.
Garib Rath service was introduced in 2005 by former Indian railway minister Lalu Prasad Yadav. It is an air conditioned Express train that can run at the same speed as Rajadhani Express or Shatabdi Express. The specialty of the service is the ticket fare is inexpensive compared to the other luxury trains and it is faster than other express trains.
இதுநாள் வரை மும்பையிலிருந்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணித்த பீகார், உத்தரப்பிரதேச, மேற்குவங்க தொழிலாளர்களை கரிப் ரத் மூலம் குளிர்சாதன வசதிகள் கொண்ட ரயிலில் பயணிக்க வைத்தார். காரணம் முன்பதிவு ரயில் கட்டணத்தை விட கொஞ்சம் அதிகம் தான், எடுத்துகாட்டு 2006ஆம் ஆண்டு கால கட்டத்தில் மும்பை, வாரணாசி முன்பதிவு ரயில் கட்டணம் ரூ. 350 என்று இருந்தது, கரீப் ரத்தில் ரூ .590 என்று இருந்தது. இதுதான் ஏழைகளின் ரதத்திற்கான வெற்றி.
அதன் பிறகு மம்தா தூரந்தோ எக்ஸ்பிரஸ் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். நீண்ட தொலைவு செல்லும் ரயில் பெட்டிகளின் வெளிப்பக்கம் அழகிய ஓவியங்களுடன் வட இந்தியாவில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய இந்த ரயிலும் ஏழைகளின் ரதமாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் 2014ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் – சாமானியர்கள் மேற்குடிகளோடு ஏசியில் பயணிப்பதா என்ற ஒரு தீண்டாமை மனநிலைதான் உடனடியாக ரயில் கட்டணங்களை ஏற்றியதோடு மட்டுமல்லாமல் அதிக மக்கள் பயணிக்கும் கரிப் ரயிலும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப் பட்டது.
மோடியின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆட்சியில் ரயில்வேத் துறை அமைச்சர்கள் யார் என்று சாமானியர்களுக்கு தெரியாமலே இருந்தது.
அந்த அளவிற்கு தனியார் துறையில் அதிகாரிகள் நிட்டி ஆயோக் என்ற பெயரில் மேலே உட்கார்ந்துகொண்டு ரயிலில் போக்குவரத்தை தனியார் மயமாக்கு வதற்காக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருந்தனர். 2023 ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவில் உலக வரலாற்றிலேயே மிகவும் மோசமான விபத்து ஏற்படக் காரணமாக இருந்தது. மோடி ஆட்சியின் ரயில்வே அமைச்சகத்தின் மெத்தனமான போக்கு என்று ஒன்றிய அரசின் அதிகாரிகளே கூறும் அளவிற்கு சென்றது.
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் என்பவர்தான் என்பதே ஒடிசா ரயில் விபத்தில் அவர் உடைந்த பெட்டிகளுக்கு இடையே குனிந்து நிமிர்ந்து செல்லும் போதுதான் மக்களுக்குத் தெரிந்தது.
மோடி அறிமுகப்படுத்திய வந்தே பாரத் பணக்காரர்கள் ரயில் என்பதற்கு எடுத்துகாட்டு பல ஆண்டுகளாக ஏழைகள் பயன்படுத்தும் வைகை மற்றும் நெல்லை விரைவு ரயில்களின் நேரத்தில் பெரும் மாற்றம் – வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் நேரம் 15 நிமிடங்கள் அதிகப்படுத்தியும் அதே போல் வந்தேபாரத் ரயில் கடந்து செல்லும் வரை வைகை எக்ஸ்பிரஸ் காத்திருந்து பின் தாமதமாக செல்லுவதாலும் மக்கள் குறித்த நேரத்தில் தங்கள் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவது தொடர்கதையாகி உள்ளது.
கிட்டத்தட்ட சாமானியர்களிடமிருந்து தூரமாக விலகிவிட்ட ரயில்வேத் துறையின் இந்த அவலத்திற்கு ரயில்வேத் துறை யின் தனி நிதி நிலை அறிக்கையை ஒழித்துக் கட்டியதுதான் முதல் காரணம் என்று ரயில்வேத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேனாள் அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.
புதிய ஆட்சி மலர்ந்து மீண்டும் ரயில்வேத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வந்தால் மட்டுமே ரயில்வேத் துறை மீண்டும் புத்துயிர் பெற்று சாமானியன் சுதந்திரக் காற்றோடு ரயிலில் பயணிக்க முடியும் இல்லை என்றால் நிலைமை மோசமாகும்.