சென்னை, மே 10 அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஅய் மூலம் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெறும் மின்னணு பயணச் சீட்டு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தி பயணச் சீட்டு பெறலாம். பயணச் சீட்டு விநியோகம் செய்ய யுபிஅய் மூலம் பணம் பெறும் வசதியை மாநகர் போக்குவரத்து கழகம் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஅய், டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் பணம் பெற்று பயணச் சீட்டு வழங்கும் வசதியை அறிமுகப்படுத்த கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் இந்த புதிய இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத் திற்கு சொந்தமான 328 ஏசி பேருந்துகள் உள்பட 1,068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி ஜிபே, போன் பே போன்ற யுபிஅய், கிரெடிட் டெபிட் கார்ட், மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ஏற்கெனவே வெளியூர் செல்லும் பேருந்துகளில் மின்னணு சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக யுபிஅய், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்களை பெரும் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம் செய்ய கடந்த ஆண்டே திட்டமிடப்பட்டது. இதற்காக எஸ்பிஅய் வங்கியிடம் இயந்திரங்களை வாங்க ஒப்புதம் மேற் கொள்ளப்பட்டது. இந்த இயந்திரத்தின் சோத னைகள் முடிவடைந்து, அரசு ஒப்புதல் வழங்கிய பின் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் முறை எளிமையாகிறது. மேலும் நேரடியாக வங்கிக் கணக்குக்கு பணம் செல்லும். பணம் கையாளுதல் குறைவதால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. சில்லரை பிரச்சினை இருக்காது. இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றனர்.