சென்னை, மே.10- நாய்கள் வளர்க்க கட்டாயம் உரிமம் பெறவேண் டும். அதேநேரம் நாய்கள் பொது மக்களை கடித்தால், உரிமையாளர்கள்மீது வழக்கு பாயும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிழற் பந்தல்
கோடை வெயிலை முன்னிட்டு, வாகன ஓட்டிகள் நலன் கருதி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட போக்குவரத்து சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று (9.5.2024) ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோடை வெயிலை முன்னிட்டு 8 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்த நிழற்பந்தல்களால் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித பாதிப் பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்படுகிறது. மழைக் காலங்களிலும் இந்த நிழற் பந்தல்களை அதற்கேற்றார் போல மாற்றி அமைக்கத் தேவையான நடவடிக் கையும்: எடுக்கப்படும். ஒவ்வொரு பந்தல்கள் அமைக்கவும் ரூ.3.5லட்சம் செலவாகியுள்ளது.
நாய்கள் வளர்க்க உரிமம்
மேலும், நாய்களை வளர்ப்பதற்கான உரிமத்தை அதன் உரிமையாளர்கள் கட்டாயம் பெற வேண்டும். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. எனவே, முகாம்கள் அமைத்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணிகளை தொடங்க உள்ளோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் உரிய ஒப்புதல் பெற்று பொதுமக்களுக்கு நாய்களை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு செய்யப் படும்.
விலங்குகள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. வளர்ப்பு நாய்களை குறை சொல் வதை காட்டிலும் அதைவளர்க்கும் உரிமையாளர்கள் பாதுகாப் புடனும், எச்சரிக்கையுடனும் வளர்க்க வேண்டும். நாய்கள் கடித்தால் அதன் உரிமை யாளர்கள் மீதே வழக்கு பாயும்.
கடும் நடவடிக்கை
தகுந்த வழிமுறைகளை பின்பற்றாமல் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாடு முட்டுவது,நாய்கள் கடிப்பது என்பது தேசிய அளவில் உள்ள பிரச்சினை. சென்னையில் மட்டும் அது நடப்பது கிடையாது. எனவே, இதை மிகவும் பக்குவமாக கையாள வேண்டிய நிலையில் உள்ளோம்.
23 வகையான நாய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. ஆனால், இந்த தடைக்கு சென்னை, டில்லி, கருநாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றங்கள் இடைக் கால தடை விதித்துள்ளன.
சிறுமிக்கு உயர்தர சிகிச்சை
சென்னையில் நாய்கள் கடித்த சிறுமிக்கு அனைத்து விதமான உயர்தர சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு மனரீதியான பிரச்சினையும் ஏற்படலாம் என்பதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் வாக்கு எண்ணும் மய்யத்தின் வெளியே நுழைவுவாயில்களில் நடந்து செல்லும் பாதையில் உள்ள 2 கண்காணிப்பு கேமராக்கள் மழை பெய்யும்போது. தண்ணீர் பட்டு பழுது ஏற்பட் டது. வாக்கு எண்ணும் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கண்காணிப்பு கேமரா
சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மய்யத் திலும் மொத்தமாக 584 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளது. அந்த வகையில் ராணிமேரி கல்லூரியில் 176 கண்காணிப்பு கேமராக்களும், அண்ணா பல்கலைக் கழகத்தில் 210கேமராக்களும், லயோலா கல்லூரியில் 198 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. 3 வாக்கு எண்ணும் மய்யத்திலும் முழுமை யாக ஆய்வு நடத்தியுள்ளோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.