வி.சி.வில்வம்
தமிழ்நாட்டில் அண்மையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது! தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. திராவிடர் கழகமும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டது! அதே நேரம் அடுத்த தேர்தல் என்பதோடு, அடுத்த தலை முறைக் குறித்தும் அதிகம் கவனம் கொள்வது திராவிடர் கழகத்தின் இயல்பு!
100 தெருமுனைக் கூட்டங்கள்!
அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க அடுத்தக் கட்ட பிரச்சாரத்தைத் தோழர்கள் தொடங்கிவிட்டனர்! ஆம்! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் 100 இடங்களில் தெருமுனைக் கூட் டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன! இளம் தலை முறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் சுயமரி யாதை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டு வருகிறது!
ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால் அவரின் அறிவு, ஆற்றல், உழைப்பிற்கு ஏற்ப தம் வாழ்வை அமைத்துக் கொள்வார். அதற்கேற்ற பலன்களையும், மகிழ்ச்சியையும் அனுபவித்துவிட்டு, இவ்வுலகை விட்டு மறைந்து போவார்!
இதுதான் பொதுவான நடைமுறை! ஆனால் இந்த நாட்டில் தோன்றும் மனிதர்களை மட்டும் ஏன் வகை, வகையாகப் பிரித்து வைத்தார்கள்?
மனிதர்களா?
சூத்திரர்களா?
சில மனிதர்களைப் பார்த்தாலே தீட்டு என்றார்கள், சிலரை தெருக்களில் நடக்காதே என்றார்கள், வேறு சில மனிதர்களைப் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்காதே என்றார்கள், சிலரை செருப்பு போடாதே என்றார்கள், மொத்தத்தில் இந்த மனிதக் கூட்டத்தையே “சூத்திரர்கள்” என்றார்கள்! இரண்டு கால், இரண்டு கை, ஒரு வாய், ஒரு மூக்கு உள்ள உருவத்தை “மனி தர்கள்” என்று தான் உலகம் அழைக்கிறது! இந்தியா மட்டும் தான் “சூத்திரர்கள்” என்று அழைக்கிறது!
எவ்வளவோ பேர் ஆராய்ச்சி செய்தார்கள், ஆய்வுப் படிப்புப் படித்தார்கள், விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டார்கள், ஆனால் மேற்கண்ட செய்தியை யாரும் கேள்வி கேட்கவில்லை. மனிதரை மனிதர் என்று அழைக்காமல், ஏன் சூத்திரர் என்று அழைக்கிறீர்கள் என யாருமே கேட்கவில்லை! இதை விளக்கிடும் தெருமுனைக் கூட்டங்கள் தான் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகின்றன!
உங்கள் மனநிலை என்ன?
“எப்பொழுது பார்த்தாலும் சூத்திரன், சூத்திரன் என்கிற வார்த்தைதானா? உங்களுக்கு வேறு பேச்சே இல்லையா? எங்களுக்குப் போரடித்துவிட்டது”, என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். அவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கேட்கிறோம்! உங்களை, உங்கள் ஊரில் நாளை முதல் இந்தந்த தெருக்களில் நடக்கக் கூடாது, ஊரில் உள்ள குளத்தைப் பயன்படுத்தக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, பள்ளிக் கூடத் திற்குச் செல்லக் கூடாது என்று சொன்னால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அப்படித்தானே அந்தக் காலத்திலும் இருந்திருக்கும்?
இன்றைக்கு நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அவமானங்களைத் தானே, அன்றைக்கு நம் தாத்தனும், பாட்டியும் அனுபவித்து இருப்பார்கள்? உலகினில் எந்த மனிதர்களுக்காகவது இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்திருக்கிறதா? இது ஏதோ ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மட்டும் எனச் சிலர் நினைக் கின்றனர். தமிழர்களில் உயர்ஜாதி(?) என்போருக்கும் இந்த இழிவுகள் இருந்தன. வேண்டுமானால் வெவ் வேறான இழிவுகள் இருந்திருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாகத் தமிழர்களைச் சூத்திரர்கள் என்றே அவமானம் செய்தார்கள்!
ஹிந்துக்களைக் கொடுமை செய்பவர்கள் யார்?
சரி… மேலே சொன்னவாறு தொடக் கூடாது, நடக்கக் கூடாது, படிக்கக் கூடாது என ஹிந்துக்களைக் கொடுமை செய்த மதம் எது? இஸ்லாம் மதமா? கிறிஸ்தவ மதமா? இல்லையே? பிறப்பு முதல் இறப்பு வரை அசிங்கப்படுத்தி, அவர்களின் நிம்மதியைக் கெடுத்தது இந்த ஹிந்து மதம்தானே? தம் மதத்தில் இருப்பவர்களையே, இப்படி யாரும் கொடுமைப்படுத் துவார்களா? எனவே தான் கூறுகிறோம், ஹிந்து மதத் தால் தமிழர்கள் எந்தப் பயனையும் அடைந்ததில்லை!
அதேநேரம் இந்த நாட்டில் உருவான சுயமரியாதை இயக்கம், தமிழர் வாழ்வைச் செழுமைப்படுத்தியது! தமிழர்களைச் சாலையில் நடக்கக் கூடாது என்று சொல்ல, தண்ணீர் பருகக் கூடாது என்று சொல்ல, படிக்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? என ஒவ்வொன்றிற்கும் கேள்விக் கேட்டது! அப்படிக் கேள்வி கேட்ட அந்தச் சுயமரியாதை இயக்கத்தின் வயதுதான் இப்போது 100.
3% ஹிந்துக்களும்;
97% ஹிந்துக்களும்!
“திராவிடர் கழகம் ஹிந்து மக்களுக்கு எதிரானது”, எனச் சிலர் சொல்கிறார்கள். நாங்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறோம். இங்கே இருக்கிற 97 விழுக்காடு ஹிந்துக்கள் வேறு; 3 விழுக்காடு ஹிந்துக்கள் வேறு! இந்த 3 விழுக்காட்டினர் தான் உண்மையான ஹிந் துக்கள்! அதன் உரிமையாளர்கள்! மீதம் 97 பேர் ஒரே இரவில் மதம் என்னும் போர்வைக்குள் அமுக்கப்பட்ட வர்கள்! திமிறி வர முடியாத தாத்தனும், பாட்டியும் அங்கேயே சிறையுண்டார்கள்!
சரி! ஹிந்து மதத்தில் தானே இருக்கிறார்கள், அவர்களுக்குக் கேடு விளைவிக்க வேண்டாம், அவர்களை அசிங்கப்படுத்த வேண்டாம், அவர்கள் வாழ்வை நசுக்க வேண்டாம் என்கிற எண்ணமே இல்லாமல், கொடுங்கோலர்களாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்!
பெரியார் ஹிந்துக்களுக்கு எதிரியா?
இந்த 3 விழுக்காடு ஹிந்து மதக் கொடுமைகளைத் தட்டிக் கேட்டால், 97 விழுக்காடு தமிழ் ஹிந்துக்களுக்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தை நிறுத்தப் பார்த் தார்கள்! பெரியாரை அப்படித்தான் பிரிக்க முயற்சித் தார்கள். பெரியார் கடவுள் இல்லை என்கிறார், வேறு எந்தக் கொள்கையும் அவர் பேசவில்லை,
ஹிந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறார், ஹிந்துக் கடவுளை மட்டுமே மறுக்கிறார் எனத் தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள்!
ஆனால் உண்மை வரலாறு என்ன? பெரியார் ஹிந்துக்களுக்கு எதிராக இருந்தாரா? இன்றைய ஹிந்துக்களின் நிலைமையைப் பார்த்தாலே தெரியுமே! மேலே சொன்னவாறு சாலையில் நடக்க, செருப்பு அணிய, தண்ணீர் குடிக்க, படிக்க என எல்லா உரிமை களும் இன்றைக்கு வந்துவிட்டதே! எப்படி வந்தது? ஹிந்து மதம் தன்னைத் திருத்திக் கொண்டதா? மனித நேயத்தைக் கற்றுக் கொண்டதா? மூன்று விழுக்காடு பார்ப்பன ஹிந்துக்கள், 97 விழுக்காடு தமிழ் ஹிந்துக் களுக்கு உரிமைகள் வழங்கிவிட்டார்களா? இல்லையே!
சுயமரியாதை இயக்கச்
சாதனைகள்!
பிறப்பு முதல் இறப்பு வரை பாதிக்கப்பட்டு வாழ்ந்த தமிழ் ஹிந்துக்களுக்கு, அத்தனை அடிப்படை உரிமை களையும் பிறப்புரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, மொழி உரிமை, கல்வி உரிமை, வேலை உரிமை, தொழில் உரிமை, திருமண உரிமை, சொத்துரிமை, மொத்தத்தில் சுயமரியாதைக்கான அத்தனை உரிமை களையும் பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம் அல்லவா! தமிழர்கள் ஹிந்து மதத்தில் இருந்தாலும், அதுகுறித்த தீமைகளை மட்டுமே பேசிக் கொண் டிருக்காமல், ஆக்கபூர்வமான செயல்களைச் செய்து, தமிழர் தம் வாழ்வை இன்று உலகளவில் உயர்த்திக் காட்டியது இந்தச் சுயமரியாதை இயக்கம் அல்லவா!
இன்னும் சொன்னால் 3 விழுக்காடு ஹிந்து மதப் பார்ப்பனர்கள் வாழ்க்கையும் இன்று விஞ்ஞானப் பூர்வமாக மாறி இருக்கிறதே? உடைகள் மாறிவிட்டன, உணவு மாறியது, தலைமுடிகள் மாறிவிட்டன, மொத் தத்தில் அஞ்ஞான வாழ்க்கையையே அவர்கள் விரும்புவதில்லையே? பத்து பைசாவுக்குப் பயன்படாத பூணூல் மட்டும் தான் அவர்களின் மிச்சமாக இருக்கிறது. அதேபோல பார்ப்பனப் பெண்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு யார் காரணம்?
நாட்டிற்கு யார் தேவை?
பத்து வயதில் திருமணம் செய்து, வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்து, கணவர் இறந்தால், அதே நெருப்பில் தூக்கிப் போட்டு கொளுத்திய காட்சிகள் எல்லாம் மறைந்துவிட்டதே? யார் இதைத் தடுத்து நிறுத்தினார் கள்? அக்கிரகாரத்தில் இருந்த ஆண்கள் செய்தார்களா? அம்மா சாவை மகன்கள் நிறுத்தினார்களா? அக்கா, தங்கை சாவை அண்ணன், தம்பிகள் நிறுத்தினார்களா? இல்லையே? திராவிடர் இயக்கம் தானே செய்தது! சுயமரியாதை இயக்கம் தானே சாதித்தது!
ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட 97 விழுக்காடு தமிழர்களுக்காக, இன்று வரை சுயமரியாதை இயக்கம் தானே போராடிக் கொண்டிருக்கிறது! அதேநேரம் பார்ப்பனர்கள் தங்களின் அக்கிரமத்தை இன்னும் கைவிடவில்லை! நூறாண்டுகள் கடந்து சுயமரியாதை இயக்கமும் தம் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது! எனவே இந்த நாட்டிற்குத் தேவை சுயமரியாதை இயக்கமா? ஹிந்து மதமா? என்பதை யோசிக்க வேண்டும்!
நூறாண்டு கல்வி உரிமைகள்!
தினமும் 50, 100 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்து, ஓரிரண்டு வேளைகள் மட்டுமே உணவருந்தி, பிள்ளை களைப் படிக்க வைக்க வழியில்லாமல் கிடந்த இனம் தமிழினம்! ஆங்காங்கே இருந்த பள்ளிக் கூடங் களையும் “உடலெங்கும்” மூளை கொண்ட இராஜாஜி மூடிவிட்டார். பெரியாரின் முயற்சியில் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராகி, மூடிய பள்ளிகளை விட, மூன்று மடங்கு அதிகமாகக் கல்விக் கூடங்களைத் திறந்தார்!
பள்ளிக்கூடம் திறந்தால் போதுமா, எம் பிள்ளைகள் உணவுக்கு என்ன செய்வார்கள் எனக் கேட்டார்கள் தமிழர்கள். அதுதான் பிரச்சினையா? வாருங்கள்! மதிய உணவு வழங்குகிறோம் என்றார்கள்! உணவு மட்டும் போதுமா? புத்தகத்திற்கு எங்கே போவது என்றார்கள்? அதுதான் பிரச்சினையா? வாருங்கள் புத்தகம் தருகி றோம் என்றார்கள்! நடந்து வரும் போது கல்லும், முள்ளும் குத்துகிறதே, வெயில் வாட்டி வதைக்கிறதே என்ற போது காலணிகள் வழங்கினார்கள், பிறகு மிதிவண்டி வழங்கினார்கள், பள்ளிக்கூடம் தூரமாக இருக்கிறதே, பணம் செலவழித்து எப்படி பேருந்தில் வரமுடியும் என்ற போது, இலவசப் பயண அட்டை கொடுத்தார்கள். கடந்த நூறு ஆண்டுகளாக இப்படித் தானே கல்வி உரிமைகள் தொன்று தொட்டு வருகின்றன!
அடிமேல் அடிவைத்து
ஆகாயத்தைத் தொட்டவர்கள்!
இதில் ஹிந்து மதத்திற்கு என்ன பங்கு உள்ளது? ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு 97 விழுக் காடு தமிழர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்குப் பார்ப்பனர்கள் செய்த ஒரே ஒரு நன்மையைக் கூற முடியுமா?
“ஏங்க… அதெல்லாம் சரிங்க! எல்லாம் முடிஞ்சு போன விசயம்! ஏன் அதையே பேசிக்கிட்டு இருக் கீங்க…? பார்ப்பனர்களும் முன்ன மாதிரி இல்ல, மாறிட் டாங்க”, என நமக்குச் சமாதானம் சொல்கிறார்கள், வரலாற்றைப் படிக்காமலே, கருத்துக் கூறும் “வாட்சப்” வம்சாவழியினர்!
சுயமரியாதை இயக்கத்தின் முன்னால் மூன்று விழுக்காடு பார்ப்பன ஹிந்துக்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள்! 97 விழுக்காடு தமிழ் ஹிந்துக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்! தொடங்கிய காலத்தில் இருந்து அடிமேல் அடி வைத்து, இந்த ஆகாயத்தைத் தொட்டிருக்கிறார்கள் சுயமரியாதை இயக்கத்தினர்! எனினும் பார்ப்பனர்கள் திருந்திவிடுவார்களா என்ன? 2 ஆயிரம் ஆண்டு கால சொகுசு வாழ்க்கையை விட எப்படி மனசு வரும்? அதனால் தான் சுயமரியாதை இயக்கத்தின் போராட்டமும் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது!
இன்று வரை தடை நீடிக்கிறது!
ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது எனத் தடை விதித்தார்கள். அதுவும் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் படிக்க முடியும் என்றார்கள். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். மூன்று விழுக்காடு ஹிந்துக்களின் தாய்மொழி சமஸ்கிருதம், 97 விழுக்காடு ஹிந்துக்களின் தாய்மொழி தமிழ்! ஆனால் இன்று வரை 3 விழுக்காடு மொழியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது!
ஆக இப்படியான சமஸ்கிருதத் தடையை உடைத்து தமிழர்களை மருத்துவர்களாக அழகு பார்த்தது சுயமரியாதை இயக்கம்! ஆனால் இன்று “நீட்” தேர்வு எனும் புதுத் தடையைக் கொண்டு வந்துவிட் டார்கள். ஆக 97 விழுக்காடு ஹிந்துக்கள் மருத்துவர் களாக வரக் கூடாது என ஹிந்து மதம்தான் தடுக்கிறது! ஹிந்து மதத்திற்கு தற்காப்பு இயக்கமாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்.தான் தடுக்கிறது; ஹிந்து மதத்திற்கு அரசியல் கட்சியாகச் செயல்படும் பாஜகதான் தடுக்கிறது!
எங்கள் தலைவர்கள்!
ஆக ஹிந்து மதத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களுக்கு, பார்ப்பன ஹிந்துக்கள் இடையூறு செய்து கொண்டே இருக்கிறார்கள்! அதை எதிர்த்து ஒவ் வொன்றிலும் வெற்றி பெற்றாலும், மீண்டும், மீண்டும் ஏற்படும் பார்ப்பனச் சூழ்ச்சியை முறியடிக்க, சுயமரி யாதை இயக்கம் களத்தில் நின்று கொண்டே இருக்கிறது!
ஆக பார்ப்பனர்களுக்கும் பயன்படுகிற வகையில் எல்லோருக்கும் எல்லாம், ‘அனைவருக்கும் அனைத் தும்’ என்கிற சமத்துவத்தை வளர்ப்பதே திராவிடச் சித்தாந்தத்தின் நூற்றாண்டு பணி! அந்தப் பணியில் சி.நடேசன், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், தந்தை பெரியார், பனகால் அரசர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்!
சுயமரியாதை இயக்கக்
கோட்டை!
திராவிடர் இயக்கத்தின், திராவிட ஆட்சியின் நன்மைகளைப் பெறாத ஒரே ஒரு தமிழ் ஹிந்துவோ, ஒரே ஒரு தமிழ் கிறிஸ்தவரோ, ஒரே ஒரு தமிழ் இஸ்லாமியரோ தமிழ்நாட்டில் இருக்க முடியாது! தமிழர்கள் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இருந்தாலும், அதில் மாற்றுக் கருத்துகளும், விமர்சனங்களும் இருந்தாலும் அவர்களின் உரிமைகளை ஒருபோதும் இந்த இயக்கம் விட்டுக் கொடுத்ததில்லை! இன்னும் சொன்னால் தங்கள் இன்னுயிரையும் இழந்திருக் கிறார்கள்! தமிழர்களின் மரியாதைக்குக் குறைவு ஏற் படாமல் காத்திடும் கருப்புக் கவசமே இந்தச் சுயமரி யாதை இயக்கம்! இந்த நூற்றாண்டுக் கோட்டையில் தான், அதன் உச்சியில் தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்! அவர்கள் தம் வாழ்வு மிளிர்கிறது! இன்னும் உயரம் செல்ல வாழ்த்துவோம்