நடை பயணத்தை (பாதை யாத்திரை என்று தான் அவர்கள் சொல்லுவார்கள்) மேற்கொண்டுள்ள பிஜேபியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அய்.பி.எஸ். சிறீவில்லிபுத்தூரில் சவால் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாரா?” என்பதுதான் அந்தச் சவால்.
நாமும் ஒரு சவால்விட முடியும். அதனை ஏற்கத் தயாரா என்பதுதான் நமது எதிர் கேள்வி
(1) சனாதனம் என்பதில் வருணாசிரமம் என்பது அடங்குமா அடங்காதா?
(2) வருணம் என்பதில் ஜாதி அடங்குமா அடங்காதா?
(3) ஜாதி இல்லை என்றால் இந்துவாக இருக்க முடியாது என்ற சட்ட அறிஞர் முல்லாவின் கருத்து குறித்து என்ன பதில்?
(4) வருண தர்மம் என்று வருகிறபோது பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயார்தானா? (பார்க்க மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 1 சுலோகம் 87) மற்றும் அதர்வண வேதம் அத்தியாயம் 19 – சுலோகம் 8).
இதில் திருவாளர் அண்ணாமலை அய்.பி.எஸ். எந்தப் பிரிவில் வருகிறார்? சூத்திரன் என்ற பிரிவின் கீழ்தானே வருகிறார்.
(5) சூத்திரன் என்றால் யார்? சனாதனத்தின் மூல நூலான மனுதர்ம சாஸ்திரம் 8ஆம் அத்தியாயம் 415ஆம் சுலோகம் கூறுகிறதே – அதனை அறிவாரா அண்ணாமலை?
சூத்திரன் ஏழு வகைப்படும். சூத்திரன் என்றால் யார்?
1. போரில் புறங்காட்டி ஓடியவன்,
2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்,
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன்,
4.விபச்சாரி மகன்,
5. விலைக்கு வாங்கப்பட்டவன்,
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன் என்று மனுதர்மம் கூறுகிறதே – சனாதனம் கூறுகிறதே – இதில் அண்ணாமலையாக இருக்கட்டும் – சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனர் அல்லாதாரும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், பிஜேபியினர் மனுதர்மம் கூறும் இந்த சனாதனத்தை – மனுதர்மத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? விபச்சாரி மகன் என்கிற அளவுக்கு சூத்திரர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்களே – இதனைப் பெருமையாக அண்ணாமலைகள் “சபாஷ்! சபாஷ்!!” என்று ஏற்றுக் கொள்கிறார்களா?
அண்ணாமலைகளுக்கும் சேர்த்து தானே – இந்த இழிவுப் பட்டத்தை ஒழித்துக் கட்ட தந்தை பெரியார் பாடுபட்டார். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் மனுதர்ம சாஸ்திர நூலை ஏன் எரித்தனர் என்பதை அண்ணாமலைகள் இப்பொழுதாவது புரிந்து கொள்வார்களா?
(6) பெண்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்கள் என்று கூறுவதும் அவர்களின் சனாதன மனுதர்ம சாத்திரம் தானே! (மனுதர்மம் அத்தியாயம் 9 – சுலோகம் 19).
(7) மனுதர்மம் இருக்கட்டும் பகவான் கிருஷ்ணன் என்று கூறிப் புளகாங்கிதம் அடைகிறார்களே, அந்தப் பகவான் அருளிய கீதை என்ன சொல்லுகிறது?
“பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்” (Born Our of Womb of sin) (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32) என்கிறதே கீதை – இதை ஏற்றுக் கொண்டு கண்ணில் ஒத்திக் கொள்ளப் போகிறார்களா?
இந்த சுலோகத்தை வீட்டிற்குச் சென்று பெண்களிடம் சொல்லிப் பாருங்கள் பார்க்கலாம்.
(8) தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய காஞ்சி சங்க ராச்சாரியாரின் கூற்றை உங்கள் சனாதனம் ஏற்றுக் கொள்கிறதா? (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்” – 2ஆம் பாகம்)
(9) 16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் (கவனிக்கவும்) சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் என்ன கூறினார்?
“ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகு மென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் கூறினார். (ஆதாரம்: ‘தமிழ் நாட்டில் காந்தி) பக்கம் 575,576).
ஸனாதனம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்தக் கூற்றை முன்னிறுத்தி பாராட்டி, பிஜேபி தேர்தல் பிரச்சாரம் செய்ய முன் வருமா?
(10) குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்திற்கும், திரவுபதி மூர்முவுக்கும் ஒட்டுப் போடாமல் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிராமணருக்கு ஓட்டுப் போட்ட திமுகதான் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறுகிறது என்கிறார் அண்ணாமலை.
மேனாள் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குள்ளும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிரம்மா கோயிலுக்குள்ளும் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாரே – (15.5.2018) பிஜேபி ஆட்சியில் –
நாட்டின் முதல் குடிமகன் முப்படைகளின் தலைவர் அரசமைப்புச் சட்டத்தின் தகைமை சால் தலைவரே தீண்டப்படாதவர் ஆகி விட்டாரே உங்கள் சனாதனத்தில்! தடுத்தவர்கள் தண்டிக்கப்பட்டனரா? பிஜேபி மோடி ஆட்சியில்?
மிக்க படித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பிஜேபி போற்றும் அந்த சனாதனத்தின் கொடுமை கண்களை மறைத்து விட்டதோ!
தற்போதைய குடியரசு தலைவர் டில்லி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது (26.6.2023) கட்டை போட்டு தடுக்கப்பட்டாரே!
அண்ணாமலையாரின் பா.ஜ.க. வாய் திறந்ததா? திறக்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் போற்றும் சனாதனம் இந்துத்துவா ஏணிப் படிக்கட்டு முறையைத் தானே சாரமாகக் கொண்டது. (Graded inequality – B.R. Ambedkar) இந்திய அரசமைப்புச் சட்ட சிற்பி அம்பேத்கரும், மவுண்ட் பேட்டனும் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது, அம்பேத்கர் தடுக்கப்பட்டார் – கிறிஸ்தவரான மவுண்ட்பேட்டன் அனுமதிக்கப்பட்டாரே – இதுதான் ஹிந்து சனாதனமா?
காஞ்சி சங்கர மடத்துக்கு சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரியார் பக்கத்தில் சமமான ஆசனத்தில் அமர முடிகிறது – ஏ.பி.ஜே. அப்துல்கலாமும், ஒன்றிய பிஜேபி அமைச்சர் மாண்பமை பொன் இராதாகிருஷ்ணனும் சென்றால் சங்கராச்சாரியார் முன் தரையில்தானே அமர வேண்டியிருக்கிறது.
அண்ணாமலை அவர்களே, உங்கள் ஹிந்து சனாதனத்தில் இந்த அம்சங்களை எல்லாம் வெகு மக்களிடம் சொல்லி வாக்கு கேளுங்கள் – அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுத்து தேர்தலை சந்திக்க திமுகவும், முற்போக்கு சக்திகளும் தயார்! தயார் தான்!!
பதில் கூறத் தயார் தானா?
தயார் தானா?