கவிஞர் கனிமொழி எம்.பி.,
கோவில்பட்டி, செப்.10 தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான கவிஞர் கனிமொழி.
கடந்த 8.9.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று கவிஞர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பல மாநிலங்களில் பல இடங்களில் இன்றும் பள்ளிக் கூடங்களே கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களே கிடையாது. பெருந்தலைவர் காமராஜரில் தொடங்கி இன்று வரை பள்ளிக்கூடங்கள் உயர் கல்விக்கான கல்லூரிகள் என்று ஒவ்வொரு அரசும் தொடர்ந்து பணி செய்து இருக்கிறது. இது சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றிலே மிக முக்கியமான பகுதி.
பள்ளிகள் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு பெரிய அளவில் வரவில்லை. அப்போது சென்னையிலே ஜஸ்டிஸ் பார்ட்டி அரசு பள்ளிகளில் மதிய உணவு என்பதை சிறிய அளவில் கொண்டு வருகிறார்கள். அதை அவர்களால் மேற்கொண்டு எடுத்து செல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வந்து படிக்காமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்ததை பார்க்கிறார். ‘‘ஏன் மாடு மேய்க்கிறீங்க பள்ளிக்கூடத்துக்கு போகலையா” என்று கேட்டபோது, ‘நான் மாடு மேய்க்காம பள்ளிக்கூடத்துக்கு போனா நீ சாப்பாடு போடுவியா?’ என்று அந்த மாணவர்கள் கேட்டார்கள்.
காமராஜர் உருவாக்கிய மதிய உணவுத்திட்டம்!
சென்னை வந்த முதலமைச்சர் காமராஜர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை உருவாக்கி காட்டினார். அதற்குப் பிறகு தொடர்ந்து வந்த ஆட்சியினர் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் தி.மு.க.வாக இருக்கட்டும், அ.தி.மு.க.வாக இருக்கட்டும் யாரும் அந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை. அதை இன்னும் விரிவு படுத்திக் கொடுத்தார்கள்.
ஒன்றிய அரசாங்கம் 2035 இல் 50 சதவீதம் மாணவர்களை உயர்கல்விக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர் கள் விகிதம் சென்ற ஆண்டு 52 சதவீதத்தை தாண்டி விட்டோம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்து செய்திருக்கிற முயற்சிகள்.
கல்லூரிகளை உருவாக்கிய தலைவர் கலைஞர்!
பிள்ளைகளுக்கு திரு மணம் செய்ய வேண்டும் என் பதற்காக படிப்பை நிறுத்தி விடக்கூடாது.அதனால் தான் திருமண உதவித் தொகை திட்டத்தை தலைவர் கலை ஞர் கொண்டு வந்தார். எட் டாவது வரை படிக்க வையுங் கள், பத்தாவது வரை படிக்க வையுங்கள், உங்கள் மகளை நாங்கள் திருமணம் செய்து தருகிறோம் என்று ஒரு அரசு இருக்கிறது என்றால்… அந்த மாணவர்களின் கல்வி மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்க வேண்டும்!
கல்லூரிகள் ரொம்ப தூரத் தில் இருந்தால் அனுப்ப மாட் டார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகளை அனுப்பவே மாட்டார்கள். அவர்களுக்கு ஊருக்கு அருகிலேயே கல் லூரிகளை உருவாக்கினால் அவர்கள் நிச்சயமாக படிக் கும் வாய்ப்பு உண்டாகும் என்பதற்காகத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் சின்ன சின்னஊர்களில் கூட கல்லூரி களை உருவாக்கினார். இன்று நாம் தேசிய அளவைவிட, அவர்கள் 27% தான் இருக் கிறார்கள். ஆனால் நாம் உயர் கல்வி விகிதத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என் றால்… அத்தனை பேர் இழுத்து வந்திருக்கிற தேர் தான் இது.
இத்தனை பேர் போராடி இத்தனை பேர் கஷ்டப்பட்டு கல்வியை அனைவருக்குமானது என்ற நிலையை நாம் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறோம். இது நம்மிடமிருந்து தட்டி பறிக்கப்படக் கூடாது என்றால் நீங்கள் இந்த போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மெடிக்கல் காலேஜ் குள்ளேயே போக முடியும். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மருத்துவர்கள் ஆக முடியும் என்ற நிலை இருந்தது. நீதிக்கட்சி ஆட்சியிலே தான் அந்த சட்டம் மாற்றப்பட்டது. அதற்குமுன் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாத நிலை இருந்தது. ஆண்கள் போல பெண்கள் வேடமிட்டுச் சென்று படித்த அவலங்களும் உண்டு.
கல்விக்காக இந்த உலகம் இவ்வளவு போராடி இருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் தான் நாம் பெற்றிருக்கக் கூடிய இந்த உரிமைகளை பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் இவ்வளவு கஷ்டப்பட்டு இதை நம் கையில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இன்று நாம் எல்லோரும் சர்வ சாதாரணமாக கல்லூரிகளுக்கு சென்று படிக்கிறோம் என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்கள் என்ன… என்பதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் இந்த காலகட்டத்தில் நாம் பெற்றிருக்கும் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
நீங்கள் உங்கள் பெற்றோரிடம் போன் கேட்டிருப்பீர்கள். அவர்கள் வாங்கி தர தாமதிப்பார்கள். ‘‘அவன் வச்சிருக்கான் இவன் வச்சிருக்கான் எனக்கு போன் வாங்கி தா” என்று சொல்வீர்கள். பழைய போன் ஆக இருந்தால் கூட கொடு என்று சொல்வீர்கள். ஒரு கட்டத்தில் உங்களுக்கு போன் வாங்கி கொடுத்த பிறகு அப்போதுதான் உங்களுக்கு அதன் மதிப்பு தெரியும்.
இன்று நாம் கல்லூரியில் உட்கார்ந்து இருக்கிறோம், நாளை நினைத்தால் சிலிக்கான் வேலியில் போய் வேலை செய்ய முடியும் என்ற நிலையை இன்று நாம் அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கான வேல்யூ என்ன, மதிப்பு என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நமக்காக பல போர்க்களங்களை சந்தித்தவர்கள், ரத்தம் சிந்தியவர்கள், கண்ணீர் விட்டவர்கள் இவர்களுடைய வரலாறுகளைநாம் தெரிந்து கொள்ள வேண்டும் அது தெரிந்தால்தான் இதை நம்மால் பாதுகாக்க முடியும்.
ஏனென்றால் நமக்கு இருப்பது மாபெரும் தமிழ் கனவு. அந்த கனவு எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் இருக்க வேண்டும். ஆண் -பெண், ஜாதி -மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் ஒரு அழகான உலகத்தை நாம் உருவாக்க வேண்டும். எல்லோரும் என்றும் இங்கே தலை நிமிர்ந்து வாழக்கூடிய சுயமரியாதையோடு வாழக்கூடிய, பெரியார் கனவு கண்ட ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய உரிமை இருக்கிறது. அதுதான் நம்முடைய தமிழ் கனவு. அதை உருவாக்கக் கூடியவர்கள் நீங்கள்தான்.”
– இவ்வாறு கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.