லக்னோ, செப். 10 – உத்தரப்பிரதேச மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், பைபிள் மற்றும் நல்ல போதனைகளை வழங்குவதை மதமாற்ற முயற்சி என கருத முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு கூறியுள்ளது.
பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப் பைச் சேர்ந்த மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக, ஜோஷ் பப்பாச் சென் மற்றும் ஷீஜா ஆகிய 2 கிறிஸ்தவர்கள் மீது, அம்பேத்கர் நகர் மாவட் டத்தைச் சேர்ந்த பாஜகவினர் கடந்த 24.1.2023 அன்று புகார் அளித்தனர். காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜா ஆகியோரை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கிறிஸ் தவர்கள் 2 பேரும், தங்களுக்கு பிணை வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மேல்முறையீட்டிற்கும் சென்றனர். நீதிபதி ஷமீம் அகமது அமர்வு மனுவை விசாரித்தது.
அப்போது, வழக்குரைஞர்களின் வாதங் களைக் கேட்ட நீதிபதி, “கற்பித்தல், போதனைகளை வழங்குதல், ‘புனித’ பைபிளை விநி யோகித்தல், குழந்தைகள் கல்வி பெற ஊக்குவித்தல், கிராமப்புற மக்கள் சபையை ஏற்பாடு செய்தல் மற்றும் மத சடங்குகளை நடத்துதல், கிராமப்புற மக்களுக்கு இடை யிலான பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், மது அருந்த வேண்டாம் என போதித்தல் போன்றவை 2021 ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதமாற்ற முயற்சியாக கருதப்படாது” என்று குறிப்பிட்டார்.
மேலும், மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் அல்லது அவரது குடும்பத்தினர் மட்டுமே வழக்குத் தொடர முடியும் என்றும், முகம் தெரியாத மூன்றாவது நபர் புகாரளிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜா ஆகியோருக்கு பிணையும் வழங்கியுள்ளார்.