தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்பாட்டு நகரில் உள்ள பள்ளியில்தான் அந்தச் சம்பவம் நடைபெற்றது. அன்று, பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுக்காகக் கோடை விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள் பள் ளிக்கு வந்து சேர்ந்தனர்.
பரபரப்பும் படபடப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. கணிசமான எண்ணிக்கையில் மாணவர்களும் வந்து சேர்ந்தனர். மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல், வகுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வந்தி ருந்த மாணவர்கள் ஆசிரியர்களைச் சுற்றி நின்று, தங்களின் பாடவாரியான மதிப் பெண்களை அறிய முண்டியடித்தனர்.
தவறான முடிவு
அவரவர் அலைபேசிக்கே தேர்வு முடிவு வந்து விடும். என்றபோதிலும் ஊருக்குள் இருக்கும் அந்தப் பள்ளிக்கு வந்து முடிவையும் மதிப்பெண்களையும் அறிந்துகொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். வருடந்தோறும் நடைபெறும் இந்தச் சம்பிரதாயச் செயலில் ஆசிரியர்களை விட மாண வர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவது வியப்பிற்குரியது.
பள்ளியில் தினமும் இணைந்தே இருந்த மாண வர்கள், விடுமுறையில் வாரக் கணக்கில் பிரிந்து, மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பை அந்தக் கூடுகை தந்தது. சிலர் வீட்டிலேயே தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டும் வந்தனர். சிலர் முடிவைத் தெரிந்து கொள்வதற்காகப் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியரின் அருகில் நின்ற ஒரு மாணவி, அவளது தேர்வு முடிவுகள் மட்டுமல்ல, அவளுடைய தோழிகளின் தேர்வு முடிவு களையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆசிரியரைச் சூழ்ந்து நின்றிருந்த மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில், “அய்யையோ யாராவது ஓடியாங்க…” என்கிற குரல் ஓங்கிக் கேட்க, ஒட்டுமொத்தப் பள்ளியும் திரும்பியது. குரல் கேட்ட திசையை நோக்கி அத்தனை கால்களும் ஓடத் தொடங்கின. பள்ளி வளாகத்தில் இருந்த மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி அருகே ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது.
ஆசிரியர்கள் கூட்டத்தை விலக்கி உள்ளே சென்றனர். ரத்தக் காயங்களுடன் ஒரு மாணவி சுருண்டு கிடந்தார். அழுகையும் பயமும் ஒருசேரத் தொற்றிக்கொண்டது. விழுந்து கிடந்த மாணவியின் வகுப்பு ஆசிரியர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, உடனடியாகச் செயல்படத் தொடங் கினார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்.
தேர்வும் மதிப்பெண்ணும்
மாணவியின் வீட்டுக்குத் தகவல் போன அடுத்த சில நிமிடங்களில் அம்மா, அப்பா, அண்ணன்கள் என உறவினர்கள் கூடினர். அந்தப் பள்ளி அதுவரை கண்டிராத அசாதாரண உணர்வில் நிரம்பி வழிந்தது. பள்ளி ஆசிரியர்கள் படபடப்புடன் ஆட்டோவில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
“இப்படிச் செய்துட்டாளே டீச்சர். அவளுக்கு நாங்க என்ன குறை வச்சோம்? பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆனா என்ன? படிப்பு வரலன்னா பள்ளிக்கூடமே போக வேணாம்னுதானே சொன்னோம். அவதானே கேட்காமல் பள்ளிக்கூடம் வந்தா! இன்னிக்கு இப்படிப் பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டாளே… நாங்க என்ன செய்வோம்?” என்று கதறும் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு வகுப்பு ஆசிரியரும் கண்ணீர் கசிந்தார்.
அவர் ஒன்றும் படிக்கத் தகுதி இல்லாதவர் அல்ல என்று ஆசிரியருக்குத் தெரியும். மாற்றுக் கோணத்தில் சிந்திக்கவும் தன்னுடைய கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப் படுத்தவும் தெரிந்திருந்த திறன்மிக்க அவருக்கு எழுதுவதில் தான் சிக்கல்.
இவரின் இந்த முடிவுக்குக் காரணம் என்று யாரைக் குறைப்பட்டு கொள்வது என்று ஆசிரியர் கலங்கி நின்றார். உறவினர்கள் அனைவரும் மருத்துவ மனையை நோக்கிப் புறப்பட்ட பிறகு மைதானம் அசாதாரணமான அமைதி கொண்டது. சக தோழிகள் பேசத் தொடங்கினர். “டீச்சர்… அவளுக்குக் கல்யாணம் செய்ய வீட்ல ஏற்பாடு செய்யுறாங்க. அவதான் படிக்கணும் என்று விருப்பப்பட்டு பள்ளிக்கு வந்தாள்.
பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகிவிட்டதால் தனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று பயந்து தான் தண்ணி தொட்டி மேல ஏறி குதிச்சுட்டா” என்று கண்களில் நீர் கசிய அவர்கள் கூறி முடிக்கும்போது துக்கத்தில் ஆசிரியருக்கு மனம் கனத்துப் போனது.
சமூகத்தின் அலட்சியம்
பெண் பிள்ளைகளைக் கல்யாணம், பிள்ளைப்பேறு தாண்டிச் சிந்திக்கக்கூட அனுமதிக்காத இந்தச் சமூகக் கட்டமைப்பை என்ன சொல்வது? இப்படியான சமூகப் பின்னணியிலிருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளை இந்தத் தேர்வும் மதிப் பெண்ணும் பள்ளியை விட்டே துரத்துவது எப்படிச் சமூக நீதி ஆகும்? தேர்வு முறை தரும் தோல்வி, மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பிள்ளைகளை ஊனமடையச் செய்து, மிகுந்த சலிப் புடனும் வலியுடனும் வாழ்வின் விளிம்பில் ஒடுங்கிக் கொள்ள விரட்டுகிறது.
பெண் பிள்ளைகளின் முழுமையான வளர்ச்சியில் இந்தச் சமூகம் காட்டும் அலட்சியம், நியாய மற்ற செயல். தங்களைச் சுற்றி நடக்கக் கூடிய இப்படியான அநியாயங்களைக் கேள்விக்கு உள்ளாக்காமல், தங்களைத் தண்டனைக்கு உட்படுத்திக் கொள்ளக்கூடிய மனோபாவத்தைத் தரும் கல்வி எவ்வளவு அபத்த மானது?
தேர்வும் மதிப்பெண்ணும் எதை அளவிட முயற்சி செய்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பொதுத் தேர்வு எழுத வரும் மாண வர்களைப் பார்க்கவே அவ்வளவு பரிதாபமாக உள்ளது. .தேர்வு அறையில் அந்த நிசப்தமான சூழலில் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம்.
“பெற்றோர்கள் பிள்ளைகளை இப்படி பித்துக் குளியாக மாற்றியுள்ளார்களே” என்று கவலையாக இருக்கிறது. சரியாகத் தூங்காமல், குழி விழுந்த கண் களுடனும், வறண்டு போன உதடுகளுடனும், மாணவர்கள் மலங்க மலங்க விழித்தபடியே வினாத் தாளை வாங்குவது பெரும் அச்சத்தைத் தருகிறது.
முட்டி முட்டி மனனம் செய்த பாடங்கள், தேர்வு எழுதி முடித்த அடுத்த சில வாரங்களில் மறந்து போய்விடுகின்றன. கல்வி என்பது மாணவர்களின் நம்பிக்கையை வளர்த்து, வாழ்வின் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் துணிச் சலுடன் கையாளும் திறனைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா? இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் குலைத்துப் போடுவதுதான் கல்வியா? மனிதநேயத்துடன் கூடிய சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கும் விதமாகக் கல்வி அமைய வேண்டும். அப்படிச் செய்யாமல் சமூகத்தை விட்டு விலகி நிற்கும் கல்வி, எந்த நேர்மறையான விளைச்சலையும் இந்தச் சமூகத்துக்கு தராது. மனனமும் மதிப்பெண்னும் மட்டும்தான் கல்வி என்றால், அது இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கக் காத்திருக்கிறதோ?!
நன்றி: “இந்து தமிழ் திசை” – திசைகாட்டி ( 7.5.2024 )