கன்னியாகுமரி, மே 7– கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சர்வதர்ஷித் மற்றும் அவருடன் பணியாற்றி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் ஷாம், வெங்கடேஷ், சாருகவி, காயத்ரி, நேசி ஆகிய 6 பேரும் நாகர்கோவில் வந்தனர். நேற்று (6.5.2024) காலை திற்பரப்பு அருவிக்கு அவர்கள் சென்றனர்.
அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்ததால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரம் லெமூர் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது ராட்சத அலை அவர்கள் 6 பேரையும் இழுத்துச் சென்றது.
இதைப் பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
பறக்கையைச் சேர்ந்த சர்வதர்ஷித் மற்றும் நேசி ஆகிய 2பேரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்களது உடல்கள் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கின. இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்வதர்ஷித் சிகிச்சை பலனின்றி பலியானார். நேசி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சுற்றுலா வந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலியான நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மய்யம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடற்கரை பகுதிகளில் இயல்பை விட 1.5மீ அளவு அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்திருந்தது.
முன்னதாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) மாலை வரை ‘கள்ளக் கடல்’ நிகழ்வு காரணமாக பேரலை எழ வாய்ப்புள்ளது என இந்திய கடல்சார் ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத் திருந்தது.
கடலில் எவ்வித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவது ‘கள்ளக் கடல்’ எனப்படுகிறது
எச்சரிக்கை! விளையாட்டு வினையானது! மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி சாவு
Leave a Comment