உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?
இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற மாகாணங்களிலிருந்தும் எல்லா வகையிலும் வேறுபட்டது என்பதைப் பல வகையாலும் நாம் எடுத்துக்காட்டி வந் திருக்கிறோம். உண்ணும் உணவு, உடுக்கும் உடையிலும், சென்னை மாகாணத்தவர் வேறு! மற்ற மாகாணத்தவர் வேறு! வாழும் நிலம், ஆளும் தட்ப வெப்பங்கூட இயற்கையிலேயே வெவ்வேறானவை! வாழுகின்ற மக்களின் மனப்போக்கும், பழக்க, வழக்கங்களும் மாறானவை – எதிரானவை!
நாட்டுப் பிரிவினைக்கு நாம் கூறும் பல உண்மைகளில் இவையும் சில. பிரிவினையால் பிழைப்புக்கெடும் என்றெண் ணுகிற நிலையிலுள்ளவர்கள் கூட தென்னாடு – வடநாடு என்கிற தலைப்பில், தலையைக் கொடுத்துவிட்டோமே என்ன செய்வது என்கிற மாமியார் – மருமகள் உறவில், இந்த வேறுபாடுகளின் உண்மையை ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் வெளியிட்டுக் கொண்டு வருவதையும் நாம் கேட்கிறோம்.
வடநாடு என்று சொல்லப்படும் பெரும்பகுதியான ஆரியவர்த்தம் இன்று கொலைக்களமாக, கொள்ளையர் ஆளுகைக்குட்பட்டு, மனித நாகரிகத்தைப் பலிபீடத்திலேற்றி, மதிகெட்ட செயல் செய்கிறதென்றால் அதற்குக் காரணம் மத உணர்ச்சியின் தடிப்பு – வெறி. இதற்குரிய பரிகாரம் வேறு.
தென்னாடு என்று பேசப்படும் திராவிடம், பார்ப்பனிய மதமான இந்துமத வலையில் சிக்கி, பார்ப்பனியர் ஆளுகைக்குட்பட்டு, மனிதப் பண்பை இழந்து, மானமிழந்து வாழும் நிலையில், இன்று சிறு அளவுக்கு இன உணர்ச்சி தலையெடுத்து அதன் காரணமாகப் பார்ப்பனர் – திராவிடர் என்கிற உணர்ச்சி வலுத்து வருகிறதென்றால் இதற்குக் காரணம் திராவிடர்களிடையே புதிதாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி. இதற்குரிய பரிகாரம் வேறு.
வட நாட்டில் இந்து – முஸ்லிம் வேற்றுமை. இது மத அடிப்படையில் வளர்ந்தது. எப்பொழுது – முஸ்லிம் மதம் வந்ததோ அப்பொழுதிலிருந்தே அதாவது, தனக்கு முற்றிலும் விரோதமானது – ஏமாந்தால் தன்னழிவுக்கு வழிகோலுவது என்கிற நிலை இந்து மதத்திற்கு ஏற்பட்டதிலிருந்தே பரம்பரை விரோதமாக வளர்ந்தது.
திராவிட நாட்டில் திராவிடர் – ஆரியர் வேற்றுமை. இது இன அடிப்படையில் ஒவ்வொரு காலத்தில் தோன்றி, பிறந்த வீட்டில் செத்த குழந்தை போல, தோன்றிய காலத்திலேயே மறைத்து இருள் சூழ்ந்தது. உலகப் பொது அறிவின் உத்வேக மான ஆற்றலால் – விஞ்ஞான அறிவின் துணையினால் இன்று அந்த கார் இருள் தணிய அதனால் ஆரியப் பார்ப்பனரின் நயவஞ்சகமும், தந்திரமுமான ஏற்பாடுகள் துலங்க, அவ்வேற்பாட்டினால் உழைப்பு அவமதிக்கப்பட்டு உன்மத்தர்கள் உயர்வடையும் உண்மை நிலை புரியவே, உண்மைக் காட்சியால் – உரிமை வேட்கையால் சேர்ந்தே யறியாத திராவிடர்கள் சிறு அளவுக்காவது சேர்ந்து நிற்க, இச் சேர்க்கை தனது ஏகபோக ஆட்சிக்கு ஆட்டங் கொடுக்குமே என்ற தன்னல விருப்பினால், பார்ப்பனர் மானமழிந்த செயல் பல செய்து எதிர்க்க, அவ்வெதிர்ப்பினால் வலுத்தது இவ்வேற்றுமை.
இருவகை வேற்றுமையும் அழியத்தான் வேண்டும். அழிக்கத்தான் வேண்டும். அதற்குப் பரிகாரம் என்ன? டைஃபாய்டு காய்ச்சலையும், மலேரியா காய்ச்சலையும் போக்கடிக்க வேண்டுமானால், அதற்குப் பரிகாரம் என்ன? காய்ச்சல் என்ற ஒற்றுமையால் பரிகாரமும், ஒற்றுமையாய் இருக்குமா? பரிகாரம் ஒன்றானால், விபரீத மல்லவா விளையும்? வடநாட்டுப் பிரச்சி னையைத் தீர்த்துவிடும் என்று கருதக்கூடிய மருந்து, திராவிட நாட்டுப் பிரச்சினையையும் போக்கிவிடும் என்று கருதினால், அது மருந்தின் கோளாறு அல்ல! மருத்துவனின் முட்டாள்தனம்! மருந்து தர முன்வருவோர் இதை உணரவேண்டும்!
திராவிடத்தின் செழிப்புக்கு, பெருமைக்குக் காரணமாய் இருப்பவர்கள் திராவிட நாட் டிலுள்ள பாட்டாளிகள், தொழிலாளிகள். இப் பேர்ப்பட்டவர்கள் நேரடியாகப் பொருளைக் குவித்துப் பெருக்காமல் இருக்கலாம்! பெருக் காததினால் நேரடியாகச் சர்க்காருக்கு வரியும் கொடுக்காமல் இருக்கலாம்! ஆனால், உண்மை யில் வரி கொடுப்பவர்கள் இவர்கள்தான். இவர்களின் உழைப்புத்தான், பொருளாக, வெள்ளி ரூபாயாக, தங்க நகை களாக, மாட மாளிகைகளாக, மகிழ்ச்சிக்குரிய வாகனாதிகளாக, ஏன் உயிர் வாழ்க்கைக்கே அடிப்படையான உணவுப் பொருள்களாகப் பல்வேறு உருவங்களாகின்றன. இதை அப்பாவியான அவர்கள் உணர வேண்டும்.
உழைப்பிலேயே பிறந்து உழைப்பிலேயே மடியும் பாட்டாளித்தோழர்கள் நிலை உயர்வடைய வேண்டு மென்பதை, மறுத்தால் தம் வாழ்வும் மக்கி மடிய வேண்டும் என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஒவ்வொருவரும் இன்று தொழிலாளிகளின் பெயரைச் சொல்லித்தானே தங்களுடைய சொந்தக் காரியாதிகளை நடத்திக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது! இந்தப் பாட்டாளித் தோழர்கள் விசித்திரமான பார்ப்பனிய அமைப்பினால் சூத்திர ஜாதியாய், தீண்டப்படாத ஜாதியாய் மழையிலும், வெயிலிலும், உழைத்துழைத்து உடல் கருகி, மேனி வாடி, உழைத்த பயனடையாமலிருப்பதுடன் இல்லாமல், உழைத் தோம் என்கிற பெருமையைக் கூட எண்ண முடியாமல் உழைப்பதும், அதன் பயனைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் தயவால் நாம் வாழுகின்றோம் என்கிற கேவல மான எண்ணத்துடன் வாழும்படியான நிலையுமல்லவா இந்த நாட்டில் காண்கிறோம்.
100க்கு 97 பேரான திராவிடப் பாட்டாளி மக்கள் இந்த அவல வாழ்வு ஏன் வாழ வேண்டும்? இவர்களில் 100க்கு 90 பேர் தங்களுடைய பெயரை எழுதுவதற்குக் கூட வகையற்றவர்களாக ஏன் இருக்க வேண்டும்? ஏமாற்றி வாழும் சிறு கும்பல் பார்ப்பான், சைவன் என்கிற பெயர் தாங்கி முதல் ஜாதியாய், உயர்ந்த ஜாதியாய், பெருமையுடன் வாழ மற்ற 90 பேர்கள் 4 ஆம் ஜாதியாய், 5 ஆம் ஜாதியாய் ‘தேவடியாள் பிள்ளைகளாக’ ஏன் திரிய வேண்டும்? இந்த இழி நிலைக்கு இவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு, இவர்கள் மடமையில் அழுந்தியிருப்பதற்கு, இவர்கள் தலை நிமிர முடியாத அடிமைகளாகவே இருப்பதற்குக் காரணம் உண்மைப் பார்ப்பன மதமான இல்லாத இந்து மதமும், இந்து மத அடிப்படையில் புகட்டப்படும் கல்வி, கலைகளும். பார்ப்பனர்களின் படுமோசத்தால் பிரிந்து வாழும் பல ஜாதி ஏற்பாடுகளுமல்லவா?
“நாம் இப்பொழுது சுயராஜ்யம் பெற்றுவிட்டோம் என்று சொல்லிக் கொள்கிறோம். சுயராஜ்யம் பெற்ற பிறகும் உழைப்பவன் இழிந்த ஜாதியாய் இருக்கலாமா? அவனை இழி ஜாதியாய் வைத்திருக்கும் மதம் எதுவோ அந்த மதத்தை வாழவிடலாமா? உழைப்பவன் அறிவுபெற அதற்காக ஆரம்பப் பாடசாலைகள் சுயராஜ்யத்தில் பெருக வேண்டாமா? ஆரம்பப் பாடசாலைகள் பெருகுவதற்கு வசதியில்லாத போது, மேல் படிப்புக் கல்லூரிகள் ஏன் சுயராஜ்யத்தில் இருக்க வேண்டும்? இதை சுயராஜ்ய அரசாங்கம் கருத வேண்டாமா?’’
“பல பிரிவுகள் உள்ள இந்த நாட்டில், பிரிவை ஒழித்து ஒற்றுமைக்கான வழி எதுவோ அதைச் செய்யாமல், அல்லது யாவரும் சமவுரிமையடைவதற்கு முறை எதுவோ அதைக் கையாளாமல், 100க்கு 3 பேர்களாக உள்ள மேல் ஜாதிக் காரர்கள் அனுபவித்தது போக, சுரண்டியது போக, மீதியுள்ள எச்சிலுக்குத்தான் மற்ற ஜாதியார்கள் சண்டை போட்டுக் கொண்டு அனுபவிக்க வேண்டுமென்கிற அமைப்பு சுயராஜ்யத்தில் இருக்கலாமா?’’ உத்தியோகங்கள் மதிக்கப் பட்டு அதற்குப் பெருமை கொடுக்கப்படுகிற வரையிலும், பல ஜாதிகள் அமைப்பு இருந்து அவைகளுக்குத் தனித் தனியே உயர்வும், தாழ்வும் கொடுக்கப்படுகிற வரையிலும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையை மாற்றாமல், அந்தந்த ஜாதிக்கு அல்லது அந்தந்த வகுப்புக்கு ஏற்ற முறையில் அல்லவா உத்தியோகங்கள் வழங்க வேண்டும்? எப்படியும் 100க்கு 3 வீதத்திற்கு மேல் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுக்கலாமா? இழிவான வேலை என்று கருதப்படுகிற உழவு வேலை, தெருக்கூட்டும் வேலை, கக்கூஸ் எடுக்கும் வேலை, சிரைக்கும் வேலை, வெளுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய உடலுழைப்பு வேலைகளில், எல்லா ஜாதியாரும் அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற கணக்குப்படி வேலை செய்து ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதல்லவா?
இந்த உடலுழைப்பு வேலையைச் செய்யாத சமூகத்தினருக்கு “மேல்தரம்” என்று மதிக்கப்படுகின்ற உத்தி யோகங்களைக் கொடுக்காமலிருப்பதல்லவா, உண்மையிலேயே உயர்வு, இழிவு என்கிற வித்தியாசங்களைப் போக்கும் மார்க்கங்களாகும்.
ஜனநாயகம் தழைக்க, கட்டாய ஆரம்பக் கல்வியை அளிப்பதற்கான நடவடிக்கைகளை உடனே அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது .
கல்வி நிலையங்களில் வகுப்பு விகிதாச்சாரம் அனுஷ் டிக்காமல் இருப்பது, எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் வேண் டும் என்ற நியாயமான கொள்கைக்கு விரோதமானதும், அக்கொள்கையை அழிப்ப தானதுமே ஆகும். இது .
இன்றையத் திராவிடர்களில் 100க்கு 10 பேராவது படித்தவர்களாய் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?
திராவிடர்களில் சிலர் இன்று உயர்தர உத்தியோகங்களிலும் இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?
இன்று ஓமந்தூரார் மீண்டும் காங்கிரஇ கட்சித் தலைவராய் வந்திருக்கிறாரென்றால், இன்றையச் சென்னை மாகாண மந்திரி சபையில் பெரும்பாலோர் திராவிடர்களாய் இருக்கிறார்கள் என்றால், அதற்கு உண்மையான காரணம் என்ன?
தோழர் முத்தையா முதலி யாரவர்களின் வகுப்பு வாரி உத்தி யோகச் சட்டம்தான் இவைகளுக்குக் காரணம். இதை இல்லையென்று நாணயமான எந்த காங்கிரஸ் மந்திரிதான் மறுக்க முடியுமென்று கேட்கிறோம்.
கேள்வி கேட்பாரற்ற கேவலமான நிலையில் வாழ்ந்த திராவிடர்கள், முக்கியமாக உத்தியோகத் துறையில் ஓரளவுக்காவது இடம் பெற்றிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் யாராயிருந்தாலும் நீதிக்கட்சியை நெஞ்சில் நினைக்காத நன்றிகெட்ட பிராணிகளாக இருக்க முடியாது என்பது உறுதி.
வகுப்புவாரி உத்தியோக நியமனம், வகுப்பு வாரி படிப்பு முறை இன்று சிறு அளவுக்காவது பயன் தந்திருக்கிறதென்றால் இனி ஆட்சியாளர்கள் என்ன செய்யவேண்டும்? வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முறையில் இப்போது என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ அவற்றை நீக்கி, உண்மையிலேயே எல்லா ஜாதிகளுக்கும் அந்தந்த ஜாதிகளின் எண் ணிக்கைக்கு ஏற்றபடி பிரதிநிதித்துவம் அமைய அல்லவா ஏற்பாடு செய்யவேண்டும்? அப்படித் தானே நாட்டின் பொது நலனிலும் நியாயத்திலும் அக்கறையுடைய எவரும் எதிர்பார்க்க முடியும்.
ஆனால், ஓமந்தூரார் மந்திரிசபை ஏற்பட்ட பிறகு, வகுப்புவாரி விநியோக முறையில் பார்ப்பனர்களுக்கு கேடு கொஞ்சமும் இல்லாமல், அவர்கள் நிலைமையைப் பாதுகாத்துத்தர முன் வந்த போக்கைத்தான் நாம் கண்டோம்!
ஆதி திராவிடர்களுக்கு 100க்கு 14. முஸ்லிம்களுக்கு 100க்கு 7. கிறிஸ்தவர்களுக்கு 100க்கு 7. பார்ப்பனர்களுக்கு 100க்கு 14. பார்ப்பனரல்லாத, கிறிஸ்துவரல்லாத, முஸ்லிமல்லாத, ஆதித்திராவிடரல்லாத 100க்கு 85 பேராயிருக்கும் அல்லாத முண்டங்களுக்கு 100க்கு 56. இந்த விகிதாச் சாரம்தான் நியாயம் என்று ஓமந்தூரார் மந்திரிசபை தீர்ப் பளித்தது!
இந்தத் தீர்ப்பின் அநியாயத்தை, அக்கிரமத்தை நாம் அப்போதே வன்மையாய்க் கண்டித்தோம். ஆனால், பார்ப்பனர்களோ இதைக் கண்டு வயிறெரிந்தார்கள் என்பதை நாம் மறக்கவில்லை.
காந்தியாரைக் கொன்று பூரணப் புராண ராஜ்யம் ஏற்பட்டு விட்டது என்று கும்மாளம் கொட்டினோமே! இன்னும் இந்த “சனியன்” தீரவில்லையே! நம் ஏகபோகமான இஷ்ட சித்தியடைவதற்கு இப்போதும் தடைதானா! என்று பார்ப்பனர்கள் அங்கலாய்க்கலானார்கள். இந்த அங்கலாய்ப்பின் எதிரொலிதான் சென்ற மாதம் 21 ஆம் தேதி தோழர் ராகவய்யா அவர்கள் வழியாகச் சட்டசபையில் எதிரொலித்தது.
“பிராமணர், பிராமணரல்லாதார் வேற் றுமையை சர்க்கார் அதிகார பூர்வமாக ஆதரிக் கின்றனரா?” இது கேள்வி.
பிறப்பு முதல் இறப்பு வரை இவ்வேற்றுமை இருக்கும் வரை, அவற்றை சர்க்கார் எப்படி அங்கீகரிக்காமலிருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இது பதில்.
இந்தப் பதிலை தந்தவர் மதி மந்திரி தோழர் அவினாசிலிங்கம் அவர்கள். இது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்க முடியாதென் பதையும், மந்திரிசபையின் பொதுக்கருத் தைத்தான் அவர் தெரிவித்திருக்க வேண்டும் என்பதையும்தான் எவரும் எண்ண வேண்டும்.
இந்த நிலைமையில், நாம் நம்முடைய கோரிக்கையை மாநாட்டில் வற்புறுத்தியதைக் கண்ட இந்திய யூனியன், 15 நாட்களுக்குப் பிறகு அதாவது இந்த மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய திட்டம் என்ன என்பதை விளக்கி மாகாண மந்திரி சபைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
“இனிமேல் உத்தியோக நியமனங்களில், இந்துக்களிடையே வகுப்புவாரி நியமனம் கூடாது, இப்படிச் செய்வது புதிய வித்தியாசங்களைச் சிருஷ்டிப்பதாகும். இது இப்போதைய சர்க்காரின் கொள்கைக்கு உகந்ததாக இல்லை. இவ்வேற்றுமைகளை மாகாண சர்க்கார்கள் அங்கீகரித்திருந் தாலும், இல்லாவிட்டாலும் இதுதான் இந்திய சர்க்காரின் கொள்கை” என்று பார்ப்பனிய – ராமராஜ்ய சர்க்கார் அறி வித்து விட்டது.
இந்த அறிவிப்பைக் கேட்டுப் பார்ப்பனர் மனம் குளிர்ந்திருக்கும்! காந்தியாரைக் கொன்ற போது அடைந்த திருப்தியைக் காட்டிலும் பெருந்திருப்திப்பட்டிருப்பார்கள்! தேசியப் போர்வையைப் போர்த்தி நிற்கும் பார்ப்பனர்களின் தினசரிகளும், தூதுவேலை செய்தாவது பிழைக்கவேண்டும் என்று எண்ணும் பார்ப்பனப் பாதந்தாங்கிகளான நம் விபீஷணர்களின் தினசரிகளும் இதை வரவேற்றுப் பூரிப் படையலாம்! சோஸியலிஇட் என்ற புதிய பட்டுப் போர் வையில் மறைந்து நிற்கும் சுகவாசிகளான பார்ப்பனர்கள் இதைக் கேட்டுத் துந்துபி முழங்கலாம்! ஆனால் திராவிடர்களின் நிலை என்ன?
நம்மைப் பொறுத்தவரையில் நாம் இந்த அநீதமான போக்கை எதிர்பாராதவர்கள் அல்ல! “ஆகஇட் 15 திராவிடர்களின் துக்க நாள்” என்பதை, அப்பொழுதே திராவிடர் கழகம் திராவிடர்களுக்குக் கூறியது! இந்தச் சுயராஜ்யம் பார்ப்பனர்களின் ராஜ்யந்தான் என்பதை இன்னும் ஒவ்வொரு செயல்களிலும் வற்புறுத்தப்படுவதைப் பார்க்கலாம்! திராவிடன், திராவிட உணர்ச்சி பெற்று இந்து மதச் சாக்கடையிலிருந்து எப்பொழுது வெளிவருகிறானோ, அது வரையிலும் அவனுக்கு விமோசனமில்லை! திராவிட இன உணர்ச்சியற்று திராவிடன் இந்து மதச் சேற்றை எவ் வளவு காலம் பூசிக் கொண்டிருக்கின்றானோ அது வரை யிலும் அதன் பயனை அனுபவிக்கத்தானே வேண்டும்! மத்திய சர்க்காரின் கையில் குடுமியைக் கொடுத்து விட்டு, மானங்கெட்டு வாழும் நம் மந்திரிசபை, இந்தக் காரியத்திலும் ஒத்துப் பாடலாம்! அல்லது மவுனம் சாதிக்கலாம்! எப்படியானாலும் திராவிடன் உண்மை நிலையை உணர வேண்டும்! வெளிப்படையாகவே துப்பாக்கியேந்த வேண்டுமா? என்று பார்ப்பனர்கள் ஒரு புறம் கேட்கின்றனர். பார்ப்பனர்களுக்குத்தான் உத்தியோகமும், உயர்வாழ்வும் என்று முழக்குகிறது மற்றொரு புறம். மத்திய சர்க்கார். “யானைவரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல ஆச்சாரியார் வைஸ்ராயாக வருவதற்கு முன்னாலேயே, அவருடைய ஆட்சி இன்னும் எப்படி எப்படியிருக்கும்? ஆட்சியில் எந்தெந்த மாதிரியெல்லாம் நடக்கலாம்? என்று காட்டுகின்ற அடையாளங்கள் தாம் இந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக ஆரியம் போருக்கழைத்து விட்டது என்ற அடையாளம்தான் இது. மானங்கெட்ட திராவிட சமுதாயம் ஒன்று வாழவேண்டும்! இல்லாவிட்டால் மண்ணோடு மண்ணாய் மக்கி மடிய வேண்டும்!
“மத்திய சர்க்காரின் திட்டத்தை மாகாண சர்க்காரும் பின்பற்றட்டும்! எந்த உத்தியோகத்திலும், எந்த படிப்பிலும் பார்ப்பானே இடம் பெறட்டும்! இழி ஜாதி மக்களாகவே இந்நாட்டுப் பெருங்குடி மக்கள் விளங்கட்டும்! எதற்கும் பார்ப்பானை எதிர்பார்த்தே, அவன் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தே, அடிமையிலும் அடிமையாக, அவஸ்தையறியாத எருமைகளாக வாழ்ந்தொழியட்டும்!” இப்படிக் கனவுகண்டு திருப்திப்படுகிறார்கள் பார்ப்பனர்கள்.
முடிவு என்ன?
திருப்திப்படுகின்ற பார்ப்பனர்களே! சிந்தித்துப் பாருங்கள். இன உணர்ச்சி பெற்ற ஒரு திராவிடன் இந்த நாட்டில் இருக்கும் வரையிலும் உங்கள் கனவு, உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு நாளும் பலியாது. ஆச்சாரியார் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தாலும், அகம்பாவ நேரு பார்ப்பனரின் ஆலோசனையால் விளைந்ததென்றாலும், பார்ப்பான் பார்ப்பானாகவே வாழும் நிலை இருக்கும் வரையிலும் இந்தத் திட்டமோ இதைப் போன்ற வேறு திட்டங்களோ ஆக்குவது, அவற்றை அமலுக்குக் கொண்டு வருவது எல்லாம் கருதுகிற பயனைக் கைகூடச் செய்யாது. வகுப்புவாரி விபரீத வெடி உண்மையிலேயே விபரீத வெடிதான். ஆம்! அது ஆரியத்தின் அழிவுக்கு விபரீதமான வெடியாகத்தான் முடியும். பார்ப்பனியத்தின் ஆசை, பார்ப் பனியத்தின் முடிவு அதுதான் என்றால் நடக்கட்டும்! நமக்குக் கவலையில்லை.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 29.05.1948