நாக்பூரில் உள்ள சவுடி என்ற பகுதியில் உள்ள சாலை ஓரம் தேநீர் விற்பவர் டோலி சாய்வாலா என்ற பெயர் கொண்டவர். இவர் அனைத்துத் திரைப்பட நடிகர்கள் போல நடித்தும், அரசியல்வாதிகளைப் போல் பேசியும் தேநீர் விற்பதால் இவர் மெல்ல மெல்ல பிரபலமாகி திரைப்பட நடிகர்கள் மற்றும் பல வெளிநாட்டுப் பிரபலங்கள் அவரைத்தேடிச் சென்று தேநீர் குடித்து படங்கள் எடுத்துக்கொள்கின்றனர்.
இதில் சமீபத்தில் டில்லி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் இவரைக் காண்பதற்காகவே நாக்பூருக்குச் சென்றார். இவரது சமூகசேவைகளை பாராட்டி தனது தொண்டு நிறுவனத்தில் இவரையும் ஒரு பிரச்சாரகராக நியமித்துள்ளார்.
ஆனால், இது தொடர்பாக சமூகவலைதளங்களைத் தவிர வேறு எந்த ஒரு செய்தி ஊடகமும் முக்கியத்துவம் தரவில்லை. பில்கேட்ஸ் இவரைச் சந்தித்ததைக் கூட ஏதோ ஒரு மூலையில் சாதாரண செய்தியாகத்தான் போட்டனர்.
சாய்வாலா டோலி என்பவர் சாலை ஓரத்தில் கடைவைத்த போதும், அதில் வரும் வருவாயில் பெரும்பங்கை தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வாங்கவும், வறிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காகவும் செலவழித்து வருகிறார்.
இவரின் சமூகவலைதளப் புகழை பின்னுக்குத் தள்ள, ஆயிரத்தில் ஒருவராக புதிதாக கடை போட்டிருக்கும் பெண்ணை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
காரணம் டோலி சாய்வாலா தனது கழுத்தில் அம்பேத்கர் படம் போட்ட டாலரும் தம்மச்சக்கரம் பொறிக் கப்பட்ட சில்வர் செயினும் அணிந்துள்ளார் என்பதுதான்
மும்பை விக்ரோலி பகுதியில் கல்லூரி முடித்த பெண் ஒருவர் வைத்திருக்கும் ‘வடாபாவ்’ கடை தொடர்பாக கிட்டத்தட்ட வாரத்திற்கு மூன்று முறை ஊடகங்களும் யூடியூப் சேனல்களும் தொடர்ந்து செய்திகளை வெளி யிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் இதுவரை அவரது ’வடா பாவ்’ கடைக்கு எந்த பிரபலமும் செல்லவில்லை.
உருளைக்கிழங்கு மசியலை உருட்டி அதை கடலைமாவில் கலந்து வடை போன்று சுட்டு அதனை சதுரவடிவில் இருக்கும் ‘பன்’ உள்ளே வைத்து கொடுப்பது. இதை மும்பையில் பலர் தொழிலாக செய்கின்றனர்.
ஆனால் டோலிசாய்வாலாவை விட இந்தப் பெண்ணுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கின்றனர்.
காரணம் மும்பையில் ‘வடாபாவ்;’ விற்பவர் பார்ப்பனப் பெண் என்பதே!
அதிலும் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் பார்வை – இந்து – முஸ்லிம் – கிறிஸ்தவர் என்ற பார்வை நாட்டை எங்குக் கொண்டு போய் நிறுத்தும்?
பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பனரல்லாதார், சிறுபான்மையினர் போராடுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எதிலும் ஆதிக்கப் புரியில் கோலோச்சும் ஒரு கூட்டம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலுக்கு எதிராக மதம் – ஜாதிப் போதைகளை ஏற்றி, அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, பாதிக்கப்பட்டவர்களை தலையெடுக்க விடாமல் செய்வது மிகவும் கேவலமான பாசிச பார்ப்பன நடவடிக்கையே!
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்து, பார்ப்பனர் அல்லாதாரிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வு வடமாநிலங்களிலும் பரவி வேர்ப் பிடிப்பது காலத்தின் கட்டாயம்!