சென்னை, செப்.10 – சென்னையை தலைமை யகமாகக் கொண்ட தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான தேசிய அமைப்பாகிய நேஷனல் இன்ஸ்ட்டிட்யூஷன் ஃபார் குவாலிட்டி அண்ட் ரிலையபிலிட்டி, இந்தி யாவில் தரத்தை மேம்படுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று வரும் முதன்மை அமைப்பாகும்.
சென்னை வர்த்தக மய்யத்தில் செப்டம்பர் 15-16 தேதிகளில் 17-ஆவது பன்னாட்டு மாநாட்டை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ‘உலகளாவிய சிறப்பை நோக்கி – இந்தியாவின் எழுச்சி’ என்ற கருப் பொருளுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தியத் தொழில்களின் வெற்றிக் கதைகளை வெளிப்படுத்தி, தரத்தில் உலகளாவிய தலைமை யகமாக இந்தியாவை உயர்த்துவதற்கு இளைய தலை முறையினரை இந்த மாநாடு ஊக்குவிக்கும்.
இதனை செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று அசோக் லேலண்டின் சோர்சிங் & சப்ளை செயின் பிரிவின் மூத்த துணைத் தலைவர் சுதிர் சிக்லே தொடங்கி வைக்கவுள்ளார்.
செப்டம்பர் 16 அன்று நடைபெறும் என்.அய்.க்யு.ஆர். விருது வழங்கும் விழாவில், அய்.அய்.டி. மெட்ராஸின் இயக்குநர் வி.காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய என்.அய்.க்யு.ஆர். அமைப்பின் தேசியத் தலைவர் எஸ். முரளி சங்கர், “இந்தியத் தொழில்துறை நிறுவனங்களிடையே தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதில் முதன்மையானது எங்களுடைய அமைப்பாகும்.
தேசியக் கருத்தரங்குகள், மாநாடுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ள தனிநபர்கள், நிறுவனங்களை நாங்கள் தயார்படுத்தியுள்ளோம்” என்றார்.