“மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தினம், தினம் வெற்றி பெறும் தலைவராகப் பெரியார் இருக்கிறார்”, எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார். சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம் 02.05.2024 அன்று, தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில் நடைபெற்றது! அதில் பங்கேற்று உரை யாற்றும்போது அவர் கூறியதாவது:
சிறப்பு வாய்ந்த தஞ்சை!சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா கொண்டாடும் அதேவேளையில், இன்று மேலும் ஒரு முக்கியமான நாளாகும்! அதாவது மே 2 ஆம் தேதியான இன்று தான் “குடிஅரசு” இதழ் தொடங்கப்பட்ட நாள்! தமிழ் நாடு முழுவதும் இந்த நூற்றாண்டுகளைக் கொண்டாடும் விதமாக 100 கூட்டங்கள் நடைபெற இருக்கிறது! முதல் கூட்டம் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்கள் பேசினார்கள். இரண்டாவது கூட்டமாக இன்று தஞ்சாவூரில் நடைபெறு கிறது!
“ஒரு தராசு தட்டை எடுத்து, ஒரு தட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், மற்றொரு தட்டில் மற்ற மாவட்டங் களையும் வைத்தால், தஞ்சாவூர் தான் கனமாக இருக்கும்”, எனப் பெரியார் கூறுவார். பெரியார் ஒரு கருத்தைச் சொன்னால் காரணம் இல்லாமல் கூற மாட்டார்! பெரியார் பொய் சொல்கிறார் என்பதாக ஒருமுறை பேச்சு வந்தது. அதற்குப் பதிலளித்த பெரியார், “எனக்கு உண்மையைச் சொல்லவே நேரமில்லை, நான் எங்கே பொய் சொல்லப் போகிறேன்”, எனக் கேட்டார்.
வரிசை கட்டும் நூற்றாண்டுகள்!
அப்படி சிறப்பு வாய்ந்த தஞ்சாவூரில் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெறுகிறது!
பொதுக் கூட்டங்களில் கருத்துகளைச் சொல்வதை விட, வரலாற்றுச் செய்திகளைக் கூறுவது மிகுந்த பயன் கொடுப்ப தாக நான் கருதுகிறேன். அதில் இரண்டு நன்மைகள் விளைகின்றன! ஒன்று, மக்களுக்கு வரலாறு தெரிகிறது. மற்றொன்று அவ்வரலாற்றுச் செய்திகளோடு உணர்வு களையும் பெறுகிறார்கள்!
திராவிடர் கழகம் என்பது ஒரு இயக்கம். இயங்கிக் கொண்டே இருப்பது தான் அதன் பணி. இந்த ஆண்டு நமக்கு ஏராளமான நூற்றாண்டுகள் இருக்கின்றன!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நூற் றாண்டு, சிந்துவெளி அகழ்வாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்ஷான் மார்ஷல் ஆய்வு நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு, இராஜகிரி தங்கராசு அவர்களின் நூற்றாண்டு என ஏராளமான வரலாறுகள் நமக்கு இருக்கின்றன!
தப்பித்தது தமிழ்நாடு!
திராவிடர் கழகத்திற்குப் பிறகு நிறைய அரசியல் கட்சிகள் தோன்றின. பெரியாரிடம் இருந்தவர்கள் இந்த நாட்டை ஆண்டார்கள்; ஆண்டு கொண்டிருக்கிறார்கள்! ஆனால் பெரியார் பதவியை நாடவில்லை. இரண்டு முறை சென்னை மாகாண பிரதமர் பதவி அவரைத் தேடி வந்தது. இந்தப் பணிக்கு ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் இயக்கப் பணிக்கு யார் வருவார்கள்? நானே தொடர்ந்து செய்வேன் என்றார் பெரியார்.
அதனால் தான் இந்தத் தமிழ்நாடு தப்பித்தது; பிழைத்தது!
மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டு காலமாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது ! அண்மையில் 10, 12ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் அத்தனை மாணவர்களும் தோல்வியைத் தழுவினர். இந்த இடத்தில் தமிழ்நாட்டு நிலையையும் நீங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள்! இன்றைக்குக் கூட தென்காசி மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் இன்பா குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியைப் பார்க்கிறோம். இவர் “நான் முதல்வன் திட்டத்தில்” பயிற்சிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! இந்தியாவிலேயே தமிழ்நாடு தானே அனைத்துக் கல்வி நிலையிலும் முன்னணியில் உள்ளது!
கல்வியும்! தமிழ்நாடும்!!
இதே உடல் முழுக்க மூளை கொண்ட இராஜாஜி என்ன செய்தார்? இருக்கிற பள்ளிகளை எல்லாம் மூடினார். தமிழர்கள் படித்தால் நெஞ்சைப் பிளக்க வேண்டும் எனவும் அவர்களின் சனாதனம் எழுதி வைத்திருந்தது. இதை மாற்றியது சுயமரியாதை இயக்கம் தானே! பிறகு காமராஜரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தி தமிழர்களுக்கான கல்விக் கண் திறக்கப்பட்டது! காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பெரியார் ஆதரித்தார். நான் எப்போது, யாரை ஆதரிப்பேன் என்பது எனக்கே தெரியாது என்றவர் பெரியார். அது ஆட்சி செய்பவர்களைப் பொறுத்தது என்றார். காமராசரால் பெரும் மாற்றம் வந்தவுடன் கல்விக் கண் திறந்த காமராசர், கர்மவீரர் காமராசர், பச்சைத் தமிழர் காமராசர் எனப் பெரியார் போற்றினார்! குழுந்தைகளுக்கு எல்லாம் காமராசர் எனப் பெயர் சூட்டினார்!
அந்தச் சனாதனம் தானே மீண்டும் எழப் பார்க்கிறது. அதனால் தான் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசினார். அவர் கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை! அரசியலில் இருந்து கொண்டே துணிச்சலாகப் பேசிய அவருக்கு, ஆயிரம் நன்றிகளை நாம் சொல்ல வேண்டும்!
வரலாறு மாறுகிறது!
ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கேட்டு காங்கிரசில் பெரியார் போராடினார். ஒவ்வொரு மாநாட்டிலும் இதன் தொடர்பான தீர்மானத்தை தோல்வியுற செய்தார்கள். கடைசியாகக் காஞ்சிபுரம் மாநாட்டில் பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டு, திருவிகவும் மறுத்தார். பிறகு தான் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறி இந்தச் சுய மரியாதை இயக்கத்தையே தோற்றுவித்தார்! ஒருவேளை காங்கிரஸ் அன்றைக்கு இட ஒதுக்கீட்டை ஆதரித்து இருந்தால், சுயமரியாதை இயக்கம் தோன்றி இருக்காதோ என்னமோ!
எந்தக் காங்கிரஸ் கட்சியில் இட ஒதுக்கீடு கேட்டு பெரியார் போராடினாரோ அதே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இப்போது என்ன சொல்கிறது? இட ஒதுக் கீட்டை பாதுகாப்போம்! இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம்! ஜாதி வாரிக் கணக்கெடுத்து நியாயம் வழங்குவோம் என்கிறது. அதாவது அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை! அதுதானே இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை!
இந்தியாவில் பரவும் பெரியார்!
அந்த இடத்திற்கு காங்கிரஸ் வந்த காரணத்தாலேதான் நாம் ஆதரிக்கிறோம்! இது பெரியார் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி அல்லவா! சுயமரியாதை இயக்கத்தின் சாதனை அல்லவா! அதனாலேயே இந்த நூற்றாண்டுகளை நாம் கொண்டாடுகிறோம்! அதேநேரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முயற்சியாலே சட்டப் பாதுகாப்பும் பெறப்பட்டது!
ஆக பெரியார் என்பவர் தமிழ்நாடு கடந்து, வட மாநிலங்கள் கடந்து, உலகம் முழுவதும் சென்றுவிட்டார்! அண்மையில் ஆசிரியர் அவர்களுக்கு கொல்கத்தாவில் இருந்த ஒரு நூல் வந்தது. என்னவென்று பார்த்தால், பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் நூலை வங்க மொழியில் வெளியிட்டுள்ளார்கள். அதேபோல ஜிலீமீ சிஷீறீறீமீநீtமீபீ ஷ்ஷீக்ஷீளீs ஷீயீ ஜிலீணீஸீtலீணீவீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ எனும் ஆங்கிலப் புத்தகத்தை பஞ்சாபியில் மொழி பெயர்த்துள்ளார்கள்!
உலகம் சுற்றும் பெரியார்!
இதுமட்டுமா? சுயமரியாதை மாநாடு ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் நடந்தது. நாங்களெல்லாம் கலந்து கொண்டோம்! அதேபோல கனடா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் நடைபெற்றது. அங்கே பேசியவர்கள் யார்? ஆய்வாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்ற மேதைகள் பேசினார்கள். உலக அமைதிக்கு மதம் அகற்றப்பட வேண்டும் என்றார்கள். அதற்குப் பெரியார் கொள்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்கள்!
“மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்றாரே புரட்சிக்கவிஞர்! அதுதான் நிறைவேறி இருக்கிறது! சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் ஒரே பெயர்கள் தான்! அந்த நூற்றாண்டு சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தான் இதை வென்று காட்டியுள்ளார்!
பெரியார்தான் வெல்வார்!
தமிழ்நாட்டிற்கு வந்த பிரியங்கா காந்தி என்ன சொன்னார்? தயவுசெய்து தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானால்?” என்கிற நூலை படியுங்கள் என்றாரே! இவையெல்லாம் காலத்தின் கட்டாயம்! வெற்றி பெறுவதற்குக் காலங்கள் முன்பின் ஆகலாம், ஆனால் பெரியார் தான் வெல்வார் என்பது கல்லின் மீது பொறிக்கப்பட்ட எழுத்து!
ஆங்கிலத்திலே ஒரு வரி உண்டு. மக்களுக்குத் தேவை யான கருத்தைச் செழுமையாக உருவாக்கினால் சட்டம் நொண்டி அடித்துக் கொண்டே பின்னால் வரும் என்பார்கள்! அதுதானே தமிழ்நாட்டின் வரலாறு! திராவிடர் கழகத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள் தானே இன்று அரசின் சட்டங்களாக இருக்கிறது!
இந்தியாவில் அமைதி நிலவட்டும்!
அப்படியான சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் மீண்டும் “நீட்” என்கிற குலக்கல்வியைக் கொண்டு வர பார்க்கிறார்கள். முதன்முதலில் நம் பிள்ளை அனிதாவை 1176 மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் இழந்தோம்! அதன் தொடர்ச்சியாகப் பல பிள்ளைகள். எனவே தமிழ்நாட்டின் முழு உரிமை களையும் பாதுகாக்கவே சுயமரியாதை இயக்கம் தோன்றி இப்போது நூற்றாண்டையும் கொண்டாடி வருகிறது!
தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும்போது ஆசிரியர் கூறினார், “யார் வர வேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பது மிக முக்கியம்”, என்றார். அந்த அளவிலே வடமாநில மக்களும் இப்போது விழிப்புணர் வோடு இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தியா கூட்டணி பெரு வெற்றி பெறும்! இந்தச் சுயமரியாதை இயக்கக் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவ வேண்டும்; அமைதியான வாழ்க்கையை மக்கள் பெற வேண்டும்”, எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
தொகுப்பு : வி.சி.வில்வம்