”கோயம்புத்தூர், அரசம்பாளையம் என்னும் ஊரில் 1845, மே-20இல் கந்தசாமி இணையருக்குப் பிறந்த அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் சூட்டிய பெயர் காத்தவ ராயன் என்பது. போகர் நானூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தின சுருக்கம், பாலவா கடன் போன்ற மருத்துவ நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றி நூல்களாக்கிய புலவரான வீ.அயோத்திதாச கவிராஜ பண்டி தர் என்னும் தமது ஆசிரியரும் குருவு மானவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பற்றின் காரண மாக ஆசிரியர் பெயரையே தமது பெயராக மாற்றியமைத்துக்கொண்டார் காத்தவராயன். தமிழ் இலக்கியம், இலக்கணம், பன்மொழிப் புலமை, மருத்துவம் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களுக்கு பண்டிதர் என்னும் அடை மொழியை வழங்கி கவுரவிப்பது அக்காலத்து வழக்கமாயிருந்துள்ளது. அதன்படி காத்தவ ராயனான நமது அயோத்திதாசரின் பெயரை அடுத்து வரும் பண்டிதர் என்னும் அடை மொழியும் இவ்வகையில் வந்து சேர்ந்திருக்க வேண்டும். பண்டிதரின் அறிவார்ந்த இவ் வெழுச்சிக்கு அடித்தளமாக அவரது தமிழ் இலக்கிய-சித்த மருத்துவ அறிவுமிகுந்த குடும்பப் பின்னணியே காரணமாக இருந்து உள்ளது எனலாம்.
அயோத்திதாசரின் கூற்று:
அயோத்திதாசர் வகுத்துக் கொண்ட மேல் வருணத்தாருக்கெதிரான போராட்ட வியூகத் திற்கு அவர் பெற்ற அளவற்ற கல்வி தேவைப் பட்டிருக்கிறது. பெரும்பாலும் தனிமனிதராக நின்று அவர் நடத்திய போரட்டம் அது. பலமுனைகளிலிருந்து பலரின் தாக்குதலுக்கு ஆளான ஆதி திராவிடர்களுக்காக அவர் தனியராகவே போர்க்கொடி உயர்த்தினார்.அவர்களின் பகைவர்கள் யார் என்பதிலும் அவர்களுக்கெதிரான போர் எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டுமென்பதிலும் அவர் முடிவுகள் தெளிவானவை.
நம்மை நெடு நாளாக ஏமாற்றி வருகிற பார்ப்பனியக் கொள்கை மிகத் தந்திரமானது. அதன் லட்சணமோ நம்மைக் கவரும் மந்திரத் தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட இந் தியா என்னும் பெரிய மரமாகும். அம்மரத் திற்குக் கடவுள், மதம், வேதம், ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளை நடுவில் இந்து என்னும் கூடு கட்டியுள்ளது. அக்கூட்டில் மும்மூர்த்தி மதம் என்னும் கல்முட்டை இட்டு, அதைப் பார்ப்பார் என்னும் கழுகு அடை காத்துள்ளது. தனது கல்முட்டையைப் பொன் முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற் கண்டும், காதாற் கேட்டும், மனத்தில் உணர்ந்தும் கவலையற்றிருக்கிறோம். ஆராய்ச்சி என்னும் கல்லெறிந்து கழுகைத் துரத்தாமலும் சுயசம தர்மம் என்னும் வாள் கொண்டு மரத்தை வெட்டிக் கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும் சஞ்சீவியை அக்கல்முட்டை மேல் பிரயோகித்து முட்டையை உடைத்து உண்மை அறிதற்கன்றி, மவுனம் சாதித்துச் சாகின்றோம். இவ்வித ஞாய விரிவை எடுத்துரைக்கும் பவுத் தர்களை நிந்திப்பதல்லாமல் சிந்திப்பதில்லை. பார்ப்பனர் அல்லாதவர்களால் எழுதப்பட்டு உள்ள ‘பிராமணத்துவத்தைத்தான் “யதார்த்த பிராமண வேதாந்த” விவரமென்று நாம் சொல் கின்றோம். பிராமண மதத்தார்களே எழுதி வைத்துள்ள பிராமணத்துவத்தை, “வேஷ பிராமண வேதாந்த” விவரமென்று இழிவு படுத்துகிறோம். (பண்டிதர் 82)
வேறோரிடத்தில் “பறையர் அவர் – பார்ப்பார் இவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற புத்த தர்மமான சுயமரியாதையை எல்லாரும் மடை திறந்து இன்புற்று வாழ எல்லார்க்கும் சொல்வது நல்லார் கருத்தாம்” (பண்டிதர் | 134) என்று தம் நோக்கை மறைமுகமாகச் சுட்டுவார். தாம் மேற்கொண்ட வாழ்நாள் போரில் அவர் எந்நாளும் எங்கும் வன்முறையைப் பரிந் துரைக்கவில்லை. உட்பகைவரானாலும் புறப் பகைவரானாலும் உடல் அளவில் ஊறு செய்ய வேண்டும் என்பது அவருக்கு ஏற்புடைய தன்று. அறிவு நிலையில் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் என்பதும் அறிவு நிலை யில் எதிர்வினை செய்ய வேண்டும் என்பதும் அவர் முடிவு. அவர்கள் செய்து வரும் கொடு மைகளை “இத்தேசத்துடன் நூதனமாகக் குடி யேறியுள்ளப் பராய சாதியோர்களில் பறையர் பறையர் என்று அழைக்கும் படியானவர்களோ பெரும்பாலும் பயிரிடும் வேளாளத் தொழிலா ளருமாய் இருப்பார்களன்றி வேறு மிலேச்சத் தொழில் கிடையாது. இத்தகைய சுத்த தேகி களைக் கிராமங்களில் சுத்தசலம் மொண்டு குடிக்க விடாமலும் அம்பட்டர்களைச் சவரம் செய்ய விடாமலும் வண்ணார்களை வஸ்திரம் எடுக்க விடாமலும் தடுத்து இவர்கள் சுகத்தைக் கெடுப்பதுமல்லாமல் இவர்கள் உத்தியோகத் திற்குச் செல்லுமிடங்களிலும் சத்துருக்களா யிருந்து கெடுத்து வருவதையும் (அலாய்சியஸ் 4, 6) உணர வேண்டும் என்று மீண்டும் மீண் டும் பல கட்டுரைகளிலும் எடுத்துரைப்பார். ஆனால் பகை கொண்டவர்களைப் பகையால் வெல்லலாகாது, சாந்தத்தால் வெல்லலா மென்றும், பொறாமை கொண்டவர்களைப் பொறாமையால் வெல்லலாகாது அன்பால் வெல்லலாமென்றும், புத்தபிரான் போதித்துள் ளாரென்று அவ்வப்பொழுது அவர் நினைவு படுத்தக் காணலாம். தென்னிந்தியாவில் பறை யர் என்று தாழ்த்தப்பட்ட பழங்குடிகள் ஒரு காலத்தில் உயர்வர் என்பது திண்ணம் என்ற நம்பிக்கை கொண்டிருந்த அயோத்திதாசர் அவ்வாறு உயர்த்தப்படுங்கால் தங்களைக் காலமெல்லாம் தாழ்த்தி நிலை குலையச் செய்தவர்களை அவர்கள் தாழ்த்தித் துன்பம் செய்யார் என்று உறுதிமொழி கூறுகின்றார். ஆயினும் அடாத செயல் செய்தோர் அவர்கள் செய்த வினையின் பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதைப் புத்த தன்மக் கொள்கை யடிப்படையில் விளக்குவது அவர் வழக்கம்.