தமிழ்நாடு அரசு, முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்! சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் முறையை ரத்து செய்க!

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்பட பல தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:

கடும் வெப்பம் நிலவுவதால், (தேர்தல் முடிந்த இடைவெளியும் மற்றொரு காரணம்) தமிழ்நாட்டில் பலரும் நடுத்தர வர்க்க மக்கள் உள்பட கொடைக்கானல், உதகமண்டலம் போன்ற சுற்றுலா மய்யங்களுக்கு கோடையில் இளைப்பாற்றிக் கொள்ள செல்லும் நிலையில், வருகையாளர்கள் எண்ணிக்கை பெருகும் நிலையில், கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் (டிராஃபிக்ஜாம்) ஏற்படுவது இயல்பே. எதிர்பார்க்க வேண்டியதே!
அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் சுற்றுலா மய்யங்களுக்கு அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வாங்கிச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ள தீர்வு – பல வியாபாரிகளுக்கும், சிறு, குறு வணிகர்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் நடத்துவோர் என பல தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுவதால் அவர்கள் அதை ரத்து செய்து தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுமாறு கோரியுள்ளனர். சீசன் நேரத்தில்தான் அவர்கள் சம்பாதிக்க முடியும் என்பதால் இது நியாயமான கோரிக்கையே!
அதற்காக தமிழ்நாடு அரசு அதனை (இ-பாஸ்) நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ தீர்ப்பின்மீது மேல் முறையீடு உடனே செய்து, வணிகர்கள் மற்ற பொது மக்களுக்கும் சுற்றுலா பாதிக்காமல் செய்யலாம்!
சபரிமலை மற்றும் திருவிழாக்களில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலின் போதும்கூட உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையையா தீர்வாகக் கூறியது? பின் ஏன் வணிகர் வாழ்வாதாரத்திற்கும், மக்கள் சுற்றுலாவிற்கும் இப்படி ஒரு இடையூறு ஏற்படுத்த வேண்டும்?
உடனடியாக மறுபரிசீலனை அவசியம். அவசரம் என்பதே நமது வேண்டுகோள்!

தலைவர்
5.5.2024 திராவிடர் கழகம்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *