பழகு முகாமில் கற்றுக்கொண்டதை கடைப்பிடிக்க கவிஞர் கலி. பூங்குன்றன் வேண்டுகோள்!
வல்லம், மே.4 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச் சியின் நிறைவு நாளில் பெரியார் பிஞ்சுகள் 76 பேருக்கு ’ஆங்கில ஆசான்’ (11 புத்தகங்கள்) பரிசாக வழங்கப்பட்டது.
பழகு முகாமின் நிறைவு நாளில் (2.5.2024) ஆல்பர்ட் அய்ஸ்ன்டீன் அரங்கில் முதல் வகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதில் அமெரிக்காவிலிருந்து பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் ஜூம் காணொலியில் குரல் ஒலியாக குழந்தைகளுடன் கலந்துரை யாடினார்.
பேசுவது யாரென்று பிஞ்சுகளுக் குத் தெரியாது. தந்தை பெரியார் குரலில் பேசினார். குரல் ஒலியைக்கேட்டு பிஞ்சுகள் கேள்விகள் கேட்டனர். பெரியார் குரலும் பதில் சொன்னது. இறுதியில் சோம.இளங் கோவன் அவர்களின் முகம் திரையில் தெரிந் தது. சிறந்த கேள்விகள் கேட்கப்பட்டதாக மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 76 பேருக்கும் 11 புத்தகங்கள் அடங்கிய ”ஆங்கில ஆசான்” தொகுப்பு மருத்துவர் சோம. இளங் கோவன் அவர்களால் பரிசாக வழங்கப்பட உள்ளது என்ற தகவலை ஒருங்கிணைப்பாளர் பிரின்சு அறிவிக்க, பிஞ்சுகள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். சோம. இளங்கோவன் மிகுந்த மனநிறைவோடு விடை பெற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து பெரியார் சமுதாய வானொலியின் (Periyar Community Radio) பொறுப்பாளர் ஆஷா பிஞ்சுகளுக்கு பெரியார் சமுதாய வானொலியின் பணிகளை விளக்கினார். பின்னர் குழந்தைகள் தங்கள் கருத்துகளை இதில் பதிவு செய்யலாம் என்று அறிவித்தார். மிகுந்த உற்சாகத்துடன் பெரியார் பிஞ்சுகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நீங்களும் பயிற்சி பெற்றால் ரேடியோ ஜாக்கி ஆகலாம் என்று ஊக்கப்படுத்தி விடை பெற்றார். முதல் நாளில் குழந்தைகள் கையில் கட்டியிருந்த கயிற்றை பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர். அதை ஒரு கண்ணாடி டப்பாவில் கொண்டு வந்து அதன் கேடுகளை ஆதாரங்களுடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை இயக்கு நரும், உயிரி தொழில்நுட்பம் பொறியியல் பேராசிரியருமான முனைவர் குமரன் விவரித்தார். இக்காட்சி நேரலையில் திரையில் பிஞ்சுகளுக்கு பெரிதுபடுத்தி காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து கவிஞர் குழந்தை களுக்கு மூடநம்பிக்கை ஒழிப்பு, தவறான பொருளில் வழங்கிவரும் அதிர்ஷ்டம், திருஷ்டம் வடசொற்களின் விளக்கம், இடது கை பழக்கம், வலது கை பழக்கத்திற்கான அறிவியல் விளக்கம் என்று கொள்கை வகுப்பு எடுத்துவிட்டு, “பழகு முகாமில் கற்றுக் கொண்ட பகுத்தறிவை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இறுதியில் பெரியார், சாக்ரடீஸ் போன்றோர் “கேள்வி கேள்” என்று சொன்னார்கள். “அதன்படி கேட்டு வாழ்வில் பயனடை யுங்கள்” என்று கூறி வகுப்பை நிறைவு செய்தார்.
பிற்பகல் 12 மணியளவில் பரிசளிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
பின்னர் முறைப்படி வரவேற்பு உரையை பழகு முகாமில் பங்கேற்ற இன்பத்தமிழன் வழங்க, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமச் சந்திரன், ”குழந்தைகள் நல்ல இலக்குகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் வழங்கிய ஆங்கில ஆசான் புத்தகத் தொகுப்பு, சான்றிதழ்கள் ஆகியவற்றை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பிஞ்சுகளுக்கு வழங்கி வாழ்த்தினார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய அய்ந்து திணைப் பெயரிலுள்ள குழுக்களும் வரிசையாக வந்து பெற்றுக் கொண்டனர். புதுவை பிரபாகரன், ஈரோடு சோபிகா ஆகியோர் பழகு முகாம் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பெற்றோர் சார்பாக திருப்பூர் வெள்ளகோயிலைச் சேர்ந்த ஜெகநாதன் முகாமை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அதோடு தான் பரிந்துரை செய்த இயக்கம் சாராத பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கே அனுப்பிவிட்டு நிம்மதியாக இருப்பதாகக் கூறி, பழகு முகாம் பெற்றோரின் பேராதரவைப் பெற்றுள்ளது” என்று கூறினார். அதேபோல் கடலூர் மணிவேல், ”எங்கள் குழந்தைகளை நாங்கள் கூட இப்படிக் கவனித்திருப்போமா என்று தெரியாது. அந்தளவுக்கு அனைவரும் குழந்தைகளை கவனித்துக்கொண்டனர்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். நிகழ்ச்சி யில் புதுவை சிவ.வீரமணி, பதிவாளர் சிறீவித்யா, டெல்டா புட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் பர்வீன், பேராசிரியர் முருகன், கமலக்கண்ணன், உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், துணைப் பேராசிரியர்கள் அனுசுயா, சித்ரா, வி.சி. வில்வம், இளந்திரையன், நாத்திகப் பொன் முடி மற்றும் பெற்றோர்கள் நிகழ்ச்சியின் மற்ற ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நாட்டுப் பண் பாடி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
மதிய உணவுக்குப் பிறகு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சொர்ணா ரங்கநாதன் விடுதியில் முகாம் விடுதி ஒருங்கிணைப் பாளர்களிடம் முறைப்படி விடை பெற்றுக் கொண்டிருந்தனர். ஆண்டுக்கணக்கில் பழகி யது போன்ற உணர்வுடன் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தனர் பிஞ்சுகள். சென்னையிலிருந்து வந்திருந்த இளந் தென்றல் மணியம்மை தன் தாயிடம், ’இன்னும் 5 நாட்கள் இங்கே தான் இருக்கப் போகிறேன். வீட்டுக்கு வரப் போவதில்லை’ என்று சொன்னதாக தாயே ஒருங்கிணைப் பாளர்களிடம் புகார் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருந்தது. அங்கு நிலவிய உணர்ச்சி பூர்வமான சூழலைக் கண்ட பெற்றோர் ‘எங்களுக்கும் இப்படியொரு முகாமை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பொறாமையுடன் வெளிப்படையாகப் பேசினர்.
’பழகு முகாமை 10 நாட்கள் வைக்க வேண்டியதுதானே’ என்று சில குழந்தைகள் உண்மையாகவே புலம்பிக்கொண்டிருந்தனர். இத்தனை கலவரங்களுக்கிடையே, ‘அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம்’ என்று உறுதி கூறி பிஞ்சுகள் பிரியா விடை பெற்றுக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில் பெரியார் பிஞ்சுகள் நடைபயிற்சியினூடே 80 செம்மரக் கன்றுகளை நட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஒரு சிறிய மண் குவளையில் உரமிடப்பட்டு வீட்டில் ஏதாவது ஒரு செடியை நட்டு வளர்க்கும் படி ஒவ்வொரு பிஞ்சுக்கும் வழங்கப்பட்டது. ஒரு வழியாக 2024 ஆம் ஆண்டுக்கான பழகு முகாம் ஏராளமான பயன்களை விளைவித்தும், ஏராளமான எதிர்பார்ப்புகளை விதைத்தும் நிறைவு பெற்றது.