தேனி,மே 4- ஒன்றிய, மாநில அரசுகள் இணைய வழி சூதாட்டம், முதலீடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் படித்த இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தின் மீது கொண்ட மோகத்தால் அதில் கண்மூடித்தனமாக ஏராளமான பணத்தை இழந்து வருகின்றனர்.
போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தனவந்தன் (வயது 26). இவர், போடியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரியா (23). இருவரும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கினார். நாளடைவில் அவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நட்டம் ஏற்பட்டது. அதில் ரூ.53 லட்சம் வரை முதலீடு செய்து தனவந்தன் இழந்ததாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினர். ஆனால் தனவந்தனால் பணத்தை திருப்பி தர முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (2.5.2024) மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தனவந்தன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இரவு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தபோது தனவந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மகத்தான மனிதநேயம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை
தஞ்சாவூர், மே 4- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் அருகே வல்லத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் சாலை விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த 30.4.2024 அன்று மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து இவரது உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். இதன்படி, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் கொடையாக பெறப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சா வூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட 17 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இது. இதேபோல, அவரது தோல் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கும், கண்கள் கொடையாக பெறப்பட்டு தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையில் உள்ள கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து மூளைச் சாவு அடைந்தவரின் உட லுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் உள்ளிட்டோர் 1.5.2024 அன்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இதை யடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.