சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!

Viduthalai
10 Min Read

சமுதாய மாற்றத்தை செய்த இயக்கத்திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கமாகும்!
மனித குலம் எங்கே அவமதிக்கப்பட்டாலும் பெரியார் திடலிலிருந்து சுயமரியாதைக்காரர்களின் குரல் வரும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சென்னை, மே 4 ‘‘சமுதாய மாற்றத்தை செய்த இயக்கத் திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கமாகும். அதற்காக ரத்தம் சிந்தியிருக்கின்றோமா? அதற்காக வன்முறை வெடித்திருக்கிறதா? இதே நிகழ்வு வடநாட்டில் நடைபெற்றிருந்தால், எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? தமிழ்நாட்டில் அறிவுப்புரட்சி, அமைதிப் புரட்சி. மனித குலம் எங்கே அவமதிக்கப் பட்டாலும் பெரியார் திடலிலிருந்து சுயமரியாதைக்காரர் களின் குரல் வரும்” என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வு!
கடந்த 25.4.2024 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா – முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார். அவரது தொடக்க வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆண் உயர்ந்தவர் – பெண் தாழ்ந்தவர்; என்ன இருந் தாலும், நான் ஆம்பிளை ஆயிற்றே; நீங்கள் பொம் பளைதானே என்று பேசிய காலம் எல்லாம் இருந்தது. இப்பொழுது அதுபோன்று யாரும் சொல்வதில்லை.
சமத்துவ உணர்வு மேலோங்கி வரக்கூடிய வாய்ப்புகள் இன்றைக்கு வந்திருக்கின்றன!
முன்பெல்லாம் சேர்மேன் அல்லது மேன்கைண்ட் என்றுதான் இருந்தது; இப்பொழுது மேன்கைண்ட் கிடையாது; யூமென் கைண்ட் என்பதுதான்.

‘‘கடவுளை மற, மனிதனை நினை” என்று சொல்லும் பொழுதுகூட, ‘‘Forget God and Think of Man” என்றுதான் மொழியாக்கம் செய்திருந்தார்கள்.
‘‘Forget God and Think of Human’’ என்றுதான் சொல்லவேண்டும்.
செய்தியாளர்களுக்கெல்லாம் தெரியும், முன்பெல் லாம் Pressman என்றுதான் சொல்வார்கள். இப்பொழுது Press Person என்றுதான் சொல்கிறார்கள்.
அந்த சமத்துவ உணர்வு என்பது இருக்கிறதே, அது மேலோங்கி வரக்கூடிய அளவிற்கு, அந்த வாய்ப்புகள் இன்றைக்கு வந்திருக்கின்றன.

உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய
ஒரு கலங்கரை வெளிச்சம்!
ஆகவே, சுயமரியாதை இயக்க நூறாண்டு காலத்திலே, அது தனக்கு மட்டும் வாழவில்லை; சமூகத்திற்காக, தரணிக்காக, உலகத்திற்காக வழிகாட்டக்கூடிய ஒரு கலங்கரை வெளிச்சமாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தக் கலங்கரை வெளிச்சத்தின் வழியாகத் தான் மானுடம் என்ற கப்பல் பயணித்துக் கொண் டிருக்கிறது. அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
எனவே, சுயமரியாதை இயக்கத்தின் பார்வை – அறிவாசான் தந்தை பெரியாருடைய கண்ணோட் டத்தோடு பேசுகிறோம். மானுடப் பார்வை, மனித குலம்.
அவருக்குத் தனிப்பட்ட முறையில், எந்த ஜாதியின் மீதும் வெறுப்பில்லை; எந்த மதத்தின்மீதும் வெறுப் பில்லை; கடவுளின்மீது வெறுப்பில்லை. இருக்கின்றவர் களின்மீது வெறுப்பு வருமே தவிர, இல்லாதவர்களின்மீது வெறுப்பு வருவதற்கு வாய்ப்பே கிடையாது.
அந்த வகையில், வெறுப்பற்ற ஒரு நிலை!
அதேபோன்று, இன்னொரு பக்கத்தில் பார்த்தீர் களேயானால், பற்றற்ற நிலையும்கூட!
சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியது ஏன்? என்று சொல்லுகின்ற நேரத்தில், அதைத் தெளிவாகச் சொல்வார்.
இவ்வளவு பெரிய சாதனைகளை செய்திருக்கிறார் தந்தை பெரியார். அந்த சாதனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பு உண்டா?
சமத்துவம் – இதோ என்னுடைய தோளில் துண்டு தொங்குகிறது; நம்முடைய நாட்டில், முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம். இது போன்ற நிலை, சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களாலே தொடங்கப்படுவதற்கு முன்பு உண்டா?

தந்தை பெரியார் அவர்கள்
சமரசம் செய்தார்!
மிகப்பெரிய நாதசுர வித்வான்கள் எல்லாம், சட்டை யில்லாமல் நாதசுரம் வாசிக்கின்ற நேரத்தில், முகத்தில் வியர்வை வருவதைத் துடைப்பதற்காகத் தோளிலே துண்டு போட்டுக்கொண்டு, பிரபலமான நாதசுர வித் வான்கள் -பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை, ஒரு சில மணிநேரம் வாசிப்பதற்காக வாங்கிய அந்தக் காலத்து சிவக்கொழுந்துகளிலிருந்து, இந்தக் காலத்து வித்வான்கள் வரையில், தோளில் துண்டு போட்டு நடந்ததைப் பார்த்து, ‘‘தோளில் இருக்கும் துண்டை” எடு என்று உயர்ஜாதியினர் சொன்ன நேரத்தில், ‘‘துண்டை எடுக்காதே, அப்படியே வாசி!” என்று கொடுத்த கூக்குரல், சுயமரியாதை இயக்கத்தின் கூக்குரல் – அந்தக் கம்பீரக் குரல். அதுதான், செட்டிநாட்டு அரங்கத்தில் மணவிழா ஊர்வலமே நிறுத்தப்பட்டது. அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் சமரசம் செய்தார்.

ராஜா சர் முத்தையா செட்டியார் – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்!
தந்தை பெரியாருடைய கடைசி பிறந்த நாள் – அதுதான் அவருடைய கடைசி பிறந்த நாள் என்று நமக்குத் தெரியாது. இதே அரங்கம்தான் – ஆனால், இவ்வளவு வடிவமாக இல்லை, பழைய இராதா மன்றம். அதில், அய்யா அவர்களுடைய பிறந்த நாளைக் கொண் டாடுகின்ற நேரத்தில், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களை அழைத்து, ‘‘நாதசுர சக்ரவர்த்தி” என்ற பட்டத்தை அவருக்குக் கொடுத்து, அவர் வாசிக்கிறார்.
தந்தை பெரியாருடைய பிறந்த நாள் அழைப்பிதழை அனுப்ப நாங்கள் மறந்துவிட்டோம். ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாமலை பல்கலைக் கழ கத்தின் இணைவேந்தர். நகரத்தார் குலத்திற்கே அவர் தான் தலைவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அய்யா பிறந்த நாள் விழாவில், அய்யாவைப் பார்ப்பதற்காக, கையில் மாலையை எடுத்துக்கொண்டு, வேகமாக வந்தார்.

நாங்கள்கூட அவரிடம் வருத்தம் தெரிவித்தோம்; ‘‘அய்யா, அழைப்பிதழ் அனுப்ப மறந்துவிட்டோம்” என்று.
‘‘எனக்கு எதற்கு அழைப்பிதழ்; பெரியார் திடலுக்கு வருவது என்னுடைய உரிமை” என்று சொல்லி, அய்யா விற்கு மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
மேடையில், தந்தை பெரியார் அவர்கள், பக்கத்தில் ராஜா சர் முத்தையா செட்டியார், அவருக்குப் பக்கத்தில் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் அமர்ந் திருந்தார்.
முத்தையா செட்டியாருக்குப் பக்கத்தில் அமருவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு, இரண்டு முறை எழுந்து, எழுந்து நகருகிறார்; அய்யா அவர்கள், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனை இழுத்து உட்கார வைத்தார்.

சமுதாய மாற்றத்தை செய்த இயக்கத்திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கம்!
கடைசியில், எந்த செட்டிநாட்டில், பிரபல நாதசுர வித்வான், ‘‘சிவக்கொழுந்து, துண்டை எடுக் காதே, வாசி” என்று சத்தம் போட்டு, தகராறு நடந்து, இரண்டு மணிநேரம் மண ஊர்வலம் நின்று, மண மக்களும் நடுரோட்டில் நின்ற காட்சிக்கும், அய்யா அவர்கள் மறைவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு கடைசியாக நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சி என்பது ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சி யாகும்.
இந்த சமுதாய மாற்றத்தை செய்த இயக்கத் திற்குப் பெயர்தான் சுயமரியாதை இயக்கமாகும்.
அதற்காக ரத்தம் சிந்தியிருக்கின்றோமா?
அதற்காக வன்முறை வெடித்திருக்கிறதா?
இதே நிகழ்வு வடநாட்டில் நடைபெற்றிருந்தால், எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்?
ஆகவே, இப்படி ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
எனவே, அறிவுப்புரட்சி, அமைதிப் புரட்சி. அதைவிட தொண்டறம். எல்லோருக்கும் தொண்டறம்.

மனித குலம் எங்கே அவமதிக்கப்பட்டாலும்
பெரியார் திடலிலிருந்து சுயமரியாதைக்காரர்களின் குரல் வரும்!
யாருக்காக என்று நாம் நினைப்பதில்லை; மனித குலத்திற்காக – எங்கே அவர்கள் அவ மதிக்கப்பட்டாலும், அன்றைக்கு சிவக்கொழுந்தாக இருக்கலாம்; இன்றைக்கு டி.எம்.கிருஷ்ணாவிற்கு அளிக்கப்படவிருக்கின்ற விருதுக்கு எதிர்ப்புக் கிளம்பினால், அதற்கும் பதில் எங்கே இருந்து வரும் என்றால், பெரியார் திடலிலிருந்து வரும்; சுயமரியாதைக்காரர்களின் குரல் வரும், அதில் என்ன தவறு? என்று கேள்வி கேட்டு, மற்றவர்கள் பின்வாங்கக் கூடிய நிலையை உருவாக்கக் கூடிய இயக்கம் இந்த இயக்கமாகும்.
எனவே, பெரியாருடைய நூறாண்டு கால உழைப்பு – இந்த இயக்கத்தினுடைய தாக்கம் என்பது, எல்லாத் துறைகளிலும் உண்டு.
ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப் பில்லை என்று சொன்னார்கள்; உயர்ஜாதிக்காரர்களுக் குத்தான் அந்த வாய்ப்பு என்று சொன்னார்கள்.
ஆனால், தமிழ்நாட்டினுடைய வரலாறு என்ன என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

ஒரு பார்ப்பன வேட்பாளரை எந்தக் கட்சியாவது நிறுத்தியிருக்கிறதா?
பா.ஜ.க. நிறுத்தியிருக்கிறதா?
இப்பொழுது நடைபெற்ற தேர்தலுக்கு எத்தனையோ முக்கியத்துவம் உண்டு. இதுதான் 10 ஆண்டுகால கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் – இப்பொழுது நடந்த தேர்தல் – நடந்துகொண்டிருக்கின்ற தேர்தல் என்ற நிலை இருக்கிறதே, இந்த நிலையில் நீங்கள் எண்ணிப்பாருங்கள், இந்தத் தேர்தலில் தமிழ் நாட்டில் 39 தொகுதிகளும், புதுச்சேரி ஒரு தொகுதியும் சேர்த்து 40 தொகுதிகள். இந்த 40 தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது பார்ப்பன வேட்பாளரை எந்தக் கட்சியாவது நிறுத்தியிருக்கிறதா? பா.ஜ.க. நிறுத்தியிருக் கிறதா? என்பதை நினைத்துப் பாருங்கள்.
இதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய வெற்றி யாகும்!

அண்ணாமலை, அய்.பி.எஸ். ஆனது யாரால்?
அண்ணாமலை, ஆயிரம் உளறல்களை அன் றாடம் அவிழ்த்துக் கொட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், அண்ணாமலை, அய்.பி.எஸ். ஆனது யாரால்? சுயமரியாதை இயக்கத்தால் என்பதை மறுக்க முடியுமா?
அதைவிட்டு இன்னும் தாண்டினால், ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்தவர்; இன்றைக்கு அகில இந்திய கட்சிக்குத் தலைவராக தமிழ்நாட்டில் இருக்கிறாரே, அது எப்படி?

பார்ப்பனர்களைத் தலைவராக, தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஏன் நியமிப்பதில்லை?
ஒரு காலத்தில், ஜனசங்கமாக இருந்தபொழுதுகூட, பார்ப்பனர்களைத்தான் தலைவராக நியமித்தார்கள். ஆனால், இப்பொழுது பார்ப்பனர்களைத் தலைவராக, தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஏன் நியமிப்பதில்லை?
திருச்செந்தூரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்த ஒரு டாக்டர், வைக்கம் போராட்டத்தை யாருக்காக நடத்தினோமோ அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர். அதற்குப் பிறகு டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன், முருகன், அதற்குப் பிறகு அண்ணாமலை தமிழ் நாட்டு பா.ஜ.க. தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

‘துக்ளக்‘ பத்திரிகை வெளியிட்ட செய்தி!
‘துக்ளக்’ பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை உங் களுக்குச் சொல்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியைப் பற்றி பேசுகிறார் இந்திரா காந்தி அம்மையார். அப் பொழுது இந்திரா காந்தி அம்மையாரின் ஆலோசகராக இருந்த தேவராஜ் அர்ஸ் அவர்களிடம், ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமிக்கலாம்” என்று அந்த அம்மையார் கேட்டார்.
ஆர்.வெங்கட்ராமன் இருக்கிறாரே, அவரை நியமிக்கலாமே என்று தேவராஜ் அர்ஸ் சொல்கிறார்.
பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், ‘‘What Mr.Urs! Don’t you know about Tamilnadu? Have you forgotten, Mr.R.Venkatraman is a brahmin? Don’t you know the Tamilnadu politics at all?” என்றார்.
அதனால்தான் இப்பொழுது அவர்கள் என்ன செய் கிறார்கள் என்றால், ‘‘நம் கைகளைக் கொண்டு, நம் விரல்களைக் கொண்டு, நம் கண்களைக் குத்தவேண்டும்” என்று நினைக்கிறார்கள்.

விபீடணர்களைத் தேடுவதினுடைய ரகசியம்!
எனவேதான், இனிமேல் எதிரிகளுக்கு வேலை யில்லை; விபீடணர்களுக்குத்தான் அதிகமான அள விற்கு, கிராக்கி அதிகம். விபீடணர்களைத் தேடுவதினு டைய ரகசியமே அதுதான்.
அதனால், அந்தக் கட்சிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று யாரும் தவறாக நினைக்கவேண்டாம். உதாரணத் திற்காக சொல்கிறேன். அங்கே கூட பெரியார் நுழைந் திருக்கின்றார்.
அக்கிரகாரத்திலும் பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் இருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். நியாயவாதிகள் ஒப்புக் கொள் றார்கள்.

பெரியாருடைய தாக்கம்தான் எங்களிடம் பெரிய அளவில் இருக்கிறது: ராதாகிருஷ்ணன் ஒப்புதல்
காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் இருந் தார். அவருடைய இல்ல மணவிழாவிற்காக, அய்யா விற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களை யும், என்னையும் அழைத்தார். சென்னை இராஜேசுவரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மணவிழா வர வேற்பிற்காக எங்களை அழைத்தார்.
நிகழ்ச்சி முடிந்து, எங்களை வழியனுப்பும்பொழுது நன்றி சொல்லிவிட்டு, ‘‘அம்மா, மற்ற சமூகத்தைவிட, பெரியார் பிரச்சாரத்தினால், அதிகமாக லாபம் அடைந்த வர்கள் நாங்கள்தான். நாங்கள் இப்பொழுது மிகச் சிக்கனமாக மணவிழாக்களை நடத்துகின்றோம். அதற்கு முன்பு பார்த்தீர்களேயானால், வரன் தேடுவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். நாங்கள் பெரியார் இயக்கத்தில் சேராமல் இருக்கலாம்; பெரியார் இயக்கத்தை எதிர்ப்பவர்களாகக்கூட சிலர் இருக்கலாம். ஆனால், பெரியாருடைய தாக்கம்தான் எங்களிடம் பெரிய அளவில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இப்பொழுது யாருமே வெள்ளை முக்காடு போடுவது கிடையாது” என்றார்.
அடிக்கடி நான் எல்லா மேடைகளிலும் சொல்லுவது உண்டு. தமிழ்நாட்டில் எங்கேயாவது தேடிப் பாருங்கள், ஒரு மொட்டைப் பாப்பாத்தியையாவது கண்டுபிடிக்க முடியுமா? அதிகமாகத் தேடினால், தசாவதாரம் திரைப்படத்தில், நண்பர் கமல் நடித்ததைத்தான் பார்க்க முடியுமே, தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது.

ரத்தப் புரட்சி செய்யவில்லை,
ஆயுதத்தை எடுக்கவில்லை!
எனவே, சுயமரியாதை இயக்கம் என்பது சாதாரண மானதல்ல. ரத்தப் புரட்சி செய்யவில்லை, ஆயுதத்தை எடுக்கவில்லை. அதற்குப் பதில் அறிவாயுதத்தைத் தூக்கினார்கள். அதுதான் சுயமரியாதை இயக்கம்.

முக்கியமான ஓர் அறிவிப்பு!
தோழர்களே, மிக முக்கியமான ஓர் அறிவிப்பு. கொடுமைகளிலேயே மிக முக்கியமானது பண்பாட்டுப் படையெடுப்பாகும். அதில், பொதிகையைக் காணாமல் ஆக்கிவிட்டார்கள். ஆல் இண்டியா ரேடியோ என்று இருந்ததை அகில இந்திய வானொலி என்று 1967 ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக வந்தவுடன் மாற்றினார்; அதை பெரியார் அவர்கள் வரவேற்றார்.
இப்பொழுது மோடி ஆட்சியில், பொதிகையும் காணாமல் போய்விட்டது. அதனுடைய விளைவு, அரசு தொலைக்காட்சியின் இலச்சினையை (லோகாவை) காவி மயமாக்கி உள்ளனர்.
இதை எதிர்த்துத் திராவிடர் கழகத்தின் சார்பாக, சென்னை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையில் தொடங்கி, அண்ணா சாலை, வாலாஜா சாலை, அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் வழியாக, தொலைக்காட்சி அலுவலகம்வரை சென்று, ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஏப்ரல் 28 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திராவிடர் மாணவர் கழகம் சார்பாக நடைபெறும். ஒத்தக் கருத்துள்ள தோழர்கள் அனைவரும் அதில் பங்கேற்கவேண்டும்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், மீறி நடத்தப்படும். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.

தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகள்!
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்கவேண்டும். ஏªன்னறால், தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகள், முதலமைச்சர் உள்பட அதுகுறித்து சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, வாய்ப்பிருக்கின்ற அத்துணை பேரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *