தன்முனைப்பைத் தடுத்தாட் கொள்வது என்பது எவருக்கும் எளிதானதல்ல.
தன்முனைப்பையும், தன்னம்பிக்கையையும் ஒன்றாக்கி நாம் எவரும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
‘தன்முனைப்பு’ என்பது தன்னை எதிலும் முன்னி லைப்படுத்தி மற்றவர்களைக் குறைவாக மதிப்பிடுதல்.
தன்னம்பிக்கை என்பது நமது ஆற்றலின், திறமையின், ஆளுமையின்மீது நாம் வைத்துள்ள நியாயமான நம்பிக்கையாகும்.
தன்முனைப்பு ஊத ஊதப் பெருகிடும் பலூன். ஒரு கட்டத்தில் காற்றின் கனபரிமாணம் அதனுள் தாங்க முடியாமல் வெடிப்பது போன்றே எளிதில் வெடித்து விடக் கூடியதாகும். ஆனால், தன்னம்பிக்கை என்பது நீர் நிறைந்த நிறைகுடத்தின் தன்மையை ஒக்கும்!
தன்நம்பிக்கை ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய முக்கிய பண்புகளில் இன்றியமையாத ஒன்றாகும்.
தன் முனைப்பு திறமையுள்ள மனிதர்களையும் தடம் புரள வைக்கும் பேராபத்தை உள்ளடக்கிய ஓர் அர்த்தமற்ற பொருத்தமில்லாத புகழ்ப் பூச்சு!
கானல் நீர் வேட்டையால் யாருக்கும் பயன் இல்லை. அதுபோலவே தன்முனைப்பு!
வின்ஸ்டன் சர்ச்சில் ஒருமுறை மிக அழகாக ஓர் உண்மையைச் சொன்னார்.
‘Facts are better than Dreams’ – ‘உண்மைகள் எப்போதும் கனவுகளைவிடச் சிறந்தது’ என்றார்.
ஆம். கனவுகள், கற்பனைகள் – கலையும். உண்மைகள் – கற்பனைகளல்ல – எதார்த்தம். கலை யாது; நிலைத்து என்றும் நிற்கும் – என்றும் இறுதியில் வெல்லும்.
சீன தத்துவ அறிஞர் லாவோ சூ (Lao Tzu)
அழகான வார்த்தைகளால் வடை சுடுகின்ற வக்கணையாளர்கள்பற்றி சுருக்கென்று தைக்கும் வகையில் ஒரு பேருண்மையை வெளியிட்டார்.
“யாருக்கு விவரங்கள் தெரியுமோ
அவர்கள் பேசுவதில்லை!
யாருக்குப் பேச்சு அதிகமோ அவர்களுக்கு
விவரங்கள் புரிவதில்லை”
பல நேரங்களில் அதனால்தான் பலர் மவுனத்தை சக்தி வாய்ந்த வாதமாக, வெல்லும் சொல்லாக, வினையாக ஆக்கி, பேச்சு இரைச்சல்காரர்களைப் பேசாதாராக்கி பெரு வெற்றி கொண்டு விடுகின்றனர்.
எதிலும் சற்றுத் தள்ளி இருக்கும் ஒரு வகை தனிமைப் பண்பு (Detachment) – தன்முனைப்புக்கு எதிரான சரியான மாற்று மருந்து. ஆனால், அதன் அளவு – எவ்வளவு தூரம் ஒதுங்குவது என்ற இடைவெளி நிர்ணயம் அவ்வளவு எளிதானதல்ல.
அறிவார்ந்த அனுபவ அணுகுமுறையே சரியான அளவுகோலாக நமக்கு அமைந்து – நாம், நம்மை, அந்தப் பெரும் அலையாம் தன் முனைப்பு சுழலில் தள்ளி விட்டு இருந்த இடம் தெரியாத நிலையை உருவாக்கி விடும் ஆபத்தை ஒதுக்கிடும் பரிபக்குவம் அனைவருக்கும் வேண்டும்.
அதற்காக கையைக் கட்டி, வாயைப் பொத்தி, இருக்கும் இடத்திலேயே மவுன சாமியாராகி, யாருக்கும் பயனளிக்காத வாழ்க்கையாளராக இருக்க வேண்டும் என்ற தவறான புரிதலுக்கு ஆளாகி விடக் கூடாது!
1) நமது விழைவுகளில் அடக்கம்.
2) வெற்றிப் பெருமையில்கூட அடக்கமான பெருமிதம்.
3) தோல்விகளைச் சந்திக்கையில் உறுதியுடன் கூடிய எதார்த்த அணுகுமுறை.
இப்படிச் செய்து, அடக்கம் என்ற ஒளி எவ்வளவு உயரத்திற்கு நம்மை உயர்த்தினாலும் அதன் பணியை எண்ணி அதனால் நாமா? நம்மால் அதுவா? என்று எண்ணி வாழுவோம்.
வாழ்வோம் – வெல்லுவோம்!
நாம் வெல்ல வேண்டிய எதிரிகள் (2)

Leave a Comment