கேள்வி 1 : In God we Trust (நாங்கள் கடவுளை நம்புகிறோம்) என்ற வாசகம் அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர்களை அங்குள்ள கடவுள் மறுப்பாளர்கள் உபயோகிப்பது சரிதானா?
– எம்.அவினாஷ், பெரும்பாக்கம்
பதில் 1 : அங்குள்ள அரசின் கரன்சி – அதுவே அதிகாரபூர்வ நாணயம். அதை அனைவரும் பயன்படுத்தித்தான் தீரவேண்டும். ஹிந்தி எழுத்துகள் உள்ள டிக்கெட்டுகளை நாம் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?
கருத்தியல்படி கொள்கையை ஏற்காதவர்கள்; நாம் அதைப் பயன்படுத்த மாட்டோம் என்றால் அதுவே ஒரு வறட்டு மூடநம்பிக்கையாகும்!
அதிதீவிரவாதவாதி கடைசிவரை கொள்கையாளராக இருந்ததில்லை என்பது நம் அனுபவம்!
—
கேள்வி 2 : ஆண்டிற்கு ஒரு பிரதமர் என்ற நிலை உருவானால் நாட்டில் குழப்பங்கள் அதிகரிக்காதா?
– பாலாஜி, கொளத்தூர்
பதில் 2 : பல அய்ரோப்பிய நாடுகளில் மாற்றம் வருவதைவிட, எதேச்சதிகாரம் மூலம் ஒருவரின் வெறித்தன சர்வாதிகாரத்தைவிட அது பல மடங்கு மேலானதே!
ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது அதீதக் கற்பனை!
—
கேள்வி 3 : உங்கள் அபாரமான நினைவாற்றலின் ரகசியம் என்ன?
– பிரபாகர், அயன்புரம்
பதில் 3 : அப்படியா? மறந்துவிட்டது; நினைத்துப் பார்த்து அடுத்த வாரம் எழுதுகிறேன்!
—
கேள்வி 4 : அரசு விடுமுறை வழங்கியும் வாக்களிக்கத் தவறியவர்களைப் பற்றி தங்கள் கருத்து?
– விஜயலட்சுமி, பெரம்பூர்
பதில் 4 : வாக்குரிமையைச் செலுத்துவதை சட்டம் மூலம் கட்டாயம் ஆக்க வேண்டும். ரேஷன் மற்றும் சில சலுகை பறிப்புத் தண்டனை வாக்களிக்காதவர்களுக்குத் தர வேண்டும். அய்ரோப்பாவில் பெல்ஜியம் (என்று நினைவு) வாக்களிக்காதவர்களுக்கு ஒரு மாத சிறைகூட உண்டு என்று சட்டம் இருக்கிறது.
அப்படியானால், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமோ, வருந்தி, வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கத் தேவையுமில்லை.
அப்படிச் செய்தால், “படிச்’சுவர்’கள், வாசிச்’சுவர்’கள்” வந்து ஓட்டு போடுவார்கள் இல்லையா? அய்யோ, கற்று என்ன பலன்?
—
கேள்வி 5 : தங்கள் ஆங்கிலப் புலமைக்கு நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்ததுதான் காரணம் என்று நம்புகிறேன். வேறு காரணங்களும் உண்டா?
– ரேவதி, சென்னை
பதில் 5 : முதலில் நான் ஆங்கிலப் புலமை உள்ளவன் அல்ல; ஆங்கிலத்தை ஓரளவு கற்றவன். எனது பள்ளிப் படிப்பு தமிழில்தான் – 11ஆவது வரை. முதலாண்டு இண்டர்மீடியட் (இரண்டு ஆண்டுகள்) முதல், இரண்டு பருவங்களில் ஆங்கில வகுப்புகளில் மிகவும் கஷ்டப்பட்டே புரிந்துகொண்டேன்.
பிறகு முயற்சி, ஆங்கில நாளேடு, புத்தகங்கள் படித்தது சோம்பலின்றி உடனடியாக அர்த்தம் புரிய ஆங்கில அகராதியைப் புரட்டிப் புரிந்துகொள்ளல் மூலம்தான் இந்த ஓரளவு ஆங்கில வாய்ப்பு என்னிடம். இதுதான் உண்மை! தங்கள் அன்பினால் ‘புலமை’ என்கிறீர்கள். உண்மை அப்படியல்ல!
—
கேள்வி 6 : உங்களைப் பொறுத்தவரை எது மன்னிக்கவே முடியாத அநாகரிகம்?
– சாந்தி பிரபாகர், அயன்புரம்
பதில் 6 : 1. ஒருவர் முன்னே அவரைப் புகழ்வதும், அடுத்த நிமிடமே அவர் இல்லாதபோது இகழ்ந்து பிறரிடம் பேசுவதுதான் மன்னிக்க முடியாத அநாகரிகம்!
2. ஒரு ஆணும் – பெண்ணும் பேசிக் கொண்டால் உடனே கற்பனைகளை அவிழ்த்து விடுவது.
—
கேள்வி 7: ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி – மோடி தலைமையில் என்றால், அது தேர்தல் ஆணையம் – பா.ஜ.க. கூட்டணியால்தான் என்று உறுதியாகச் சொல்லலாமா?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 7 : உலகமே அப்படி சொல்லுமே! அதற்கு அநேகமாக வாய்ப்பே இருக்காது என்றே நினைக்கிறோம்.
—
கேள்வி 8: காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம்பற்றி தங்கள் கருத்து?
– க.கலை, நெல்லிக்குப்பம்
பதில் 8 : எடுத்துக்காட்டானது Exemplary- மோடியை மூச்சுத் திணற அடிக்கும் கருத்தம்புகள்!
—
கேள்வி 9: சென்னையில் தெருவுக்குத் தெரு
கஞ்சா பொட்டலம் புழக்கத்தில் இருக்கிறதாகவும், அதனைக் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்கிறார்களே, இதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லையா?
– மா.சங்கர், செங்கல்பட்டு
பதில் 9 : மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு. அண்மையில்கூட குஜராத், ராஜஸ்தானில் பிடிபட்ட போதைப்பொருள் பற்றி பல ஊடகங்களிலும் பா.ஜ.க.வினரின் தொடர்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டதே! குஜராத்தின் அடானி துறைமுகத்திற்கே நிறைய இறக்குமதியாகிப் பிடிபடுகிறது – அதற்கான நடவடிக்கை என்ன?
என்றாலும் இதுபற்றி தமிழ்நாடு அரசும், காவல்துறையும் கவனச் சிதறல் இன்றித் தடுப்பது – பறிப்பு முயற்சிகளை எடுத்த வண்ணம்தான் உள்ளது! இது ஒரு பன்னாட்டு மாஃபியா (mafia) கும்பலின் பன்னாட்டு அட்டுழியம்!
—
கேள்வி 10: கருநாடக அரசியலில் பாலியல் புகாருக்கு உள்ளான பிரஜ்வாலுக்கு பா.ஜ.க. கூட்டணியில், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறதே?
– க.சரவணகுமார், கன்னியாகுமரி
பதில் 10 : அவருக்காகவும் ஓட்டுக்கேட்க பிரதமர் மோடி முதல் கடைசி அண்ணாமலை வரை சென்றாலும் வியப்பில்லை!
4 கோடி ரொக்கம் கைப்பற்றி – வாக்குமூலம் தந்த பிறகும் திருவாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்க வந்த உத்தமரின் செயல் எப்படி?