பழ.பிரபு
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்த வெப்பநிலை சில மாவட்டங்களில் 109 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து உள்ளது . பல மாவட்டங்களில் அனல் காற்று வீசுகிறது. குறிப்பாக வட தமிழ்நாடு உள் மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
இதற்கிடையில் சில பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 17ஆம் தேதி வரை இருக்கும் என்று எழுதியும் பேசியும் வருகின்றன. “அக்னி நட்சத்திரம்” “கத்திரி வெயில்” என்பது உண்மையா ? அது அறிவியல் அடிப்படையில் சொல்லப்பட்டதா? எனக் கேட்டால் வானிலை அறிவியலாளர்கள் அதை மறுக்கிறார்கள்
சென்னை வானிலை ஆய்வு மய்ய மேனாள் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன். ஒரு பத்திரிகை பேட்டியில் வானிலை துறையில் “அக்னி நட்சத்திரம்” அல்லது “கத்தரி வெயில்” என்ற சொல்லே இல்லை. மே மாதம் இயல்பான கோடை காலம் தான் என்றும் இயல்பை போலவே வானிலை தகவல்களை பெற்று, வரைபடம் தயாரித்து, வானிலை விதிகள் அடிப்படையில் வெப்ப நிலையைக் கணிக்கிறோம். பொதுவாக மே மாதம் கடும் கோடை காலம் என்பதால் இந்த மாதத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்கிறார்
வானிலை ஆய்வாளர்கள் அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை அல்ல – மறுத்த பின்னரும் பொய்யும் புனை சுருட்டும் நிரம்பிய புரட்டுக் கதையை பரப்பி வருகின்றனர். .அதாவது, ஒரு காலத்தில் தேவர்கள் 12 ஆண்டுகள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்களாம். தொடர்ந்து நெய் ஊற்றியதால் அக்னிக்கு மந்த நோய் ஏற்பட்டதாம். அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும் என்று எவனோ சொல்ல, அக்னி காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தானாம். அந்த வனத்தில் வசித்த அரக்கர்களும் விலங்குகளும் தாவரங்களும் தங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணனிடம் முறையிட “அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்’ என வருணன் கூறினானாம். .இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, “நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட. கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து, வானை மறைத்து சரக்கூடு கட்டினானாம். அப்போது அக்னி தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க கிருஷ்ணன் , “21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்’ என்றானாம். அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர நாள் என்றும் கத்திரி வெயில் என்றும் அறிவுக்கு ஒவ்வாத கதையை கூறுகின்றனர். ஜோதிடர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் காலகட்டத்தை “அக்னி நட்சத்திரம்” என்கிறார்கள்.
ஜோதிடர்கள் சொல்லும் அக்னி நட்சத்திர காலத்துக்கு முன்பும் பிறகும் சில ஆண்டுகள் வெயில் கொளுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு இரு மாதங்களாகவே அக்னி நட்சத்திர காலத்தை விட மிக மோசமாகவே வெயில் கொளுத்தி வருகிறது . பூமியின் சுழற்சியால் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றமே வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணமே அன்றி ஜோதிடத்திற்கும் வானிலை நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
பூமி சூரியனைச் சுற்றி வரும் போது பருவகாலம் வருகிறது. அதாவது கோடைகாலம், குளிர்காலம், இளவேனில் காலம் போன்றவை பூமிக்கும் சூரியனுக்குமான இடைப் பட்ட தூரத்தைப் பொறுத்து அமையும் பருவ காலங்களாகும். பூமியில் இருந்து பார்க்கையில், சூரியன் வடக்கு நோக்கி நகரும்போது சூரிய ஒளி பூமியில் நேரடியாக விழுகிறது. அப்போது வெப்பம் அதிகமாக இருக்கும்.
இந்த அடிப்படை நிலையில் மற்ற மாற்றங்கள் நிகழும்போது வெப்ப அளவும் மாறுபடும். ஒரு இடம், கடல் பகுதியில் அமைந்திருக்கிறதா, மலைப் பகுதியில் இருக்கிறதா, அங்கே காற்று எவ்வளவு நேரம் வீசுகிறது? எந்த திசையில் இருந்து காற்று வீசிக் கொண்டிருக்கிறது? காற்றில் எவ்வளவு ஈரப்பதம் உள்ளது என்பன போன்ற பல்வேறு விடயங்களைப் பொறுத்தே வெப்ப அளவு வேறுபடுகிறது. இதனாலேயே மே மாதத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. ஆகவே, “அக்னி நட்சத்திரம்” “கத்திரி வெயில்” என்பதெல்லாம் அறிவியல் அடிப்படையில் உண்மை அல்ல . அது வெறும் புராணக் கட்டுக்கதை என்பதை தெளிவாக உணரலாம்.