தடுத்து நிறுத்தப்பட்ட 59,364 குழந்தைத் திருமணங்கள்… கைகொடுத்தது கட்டாய கல்வி!

Viduthalai
2 Min Read

இந்தியாவில் 2022 – 2023 ஆண்டில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 265 மாவட்டங்களில், சமூக அமைப்புகளின் நடவடிக்கைகளால் 59,364 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவை, `குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா’ என்ற பிரச்சார அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும், `18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி கிடைக்கும்போது, குழந்தைத் திருமணங்களைத் தவிர்ப்பதிலும், தடுப்பதிலும் அது முக்கியப் பங்காற்றுகிறது’ என்பதையும் அதன் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தேசிய குடும்ப நல சர்வே 5 (2019-2021), பெண் கல்வி சதவிகிதம் அதிகமிருக்கும் மாநிலங் களில் எல்லாம் குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருப்பதை பதிவு செய்துள்ளது.

பெண் கல்வி விகிதம் நாட்டிலேயே அதிகமாக, 96% உள்ள கேரளாவில், குழந்தைத் திருமண விகிதம் நாட்டிலேயே குறைவாக, 6% உள்ளது. தமிழ்நாட்டில் பெண் கல்வி விகிதம் 77.9%, குழந்தைத் திருமண விகிதம் 12.4%. குழந்தைத் திருமணங்களை முற்றிலும் ஒழிக்க, அரசு, சமூகம் என இன்னும் தீவிரமான செயல்பாடுகள் முடுக்கப்பட வேண்டும்.
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு, அவர்களுக்கான அறிவையும், தெளிவையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், வேலைவாய்ப்பையும், தொழில்முனைவையும், விழிப்புணர்வையும், சுதந்திரத்தையும்… இன்னும், வாழ்வுக்குத் தேவையான நல்லன எல்லாம் கொடுப்பதற்கான அடிப்படை… பெண் கல்வியே. எனவே, நம் வீட்டுப் பெண்களுக்கு அதைக் கொடுப்பதில் நாம் இன்னும் தீவிரம் காட்டுவோம்.

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில், வழக்கமாக மாணவிகளே அதிக முதலிடங்களைப் பிடிப்பதையும், தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே முந்துவதையும் பார்க்கிறோம். ஆனால், உயர் கல்விகளிலும், மேற்படிப்புகளிலும் இவர்கள் காணாமல் போவது எங்கே? பணிகளில் தலைமைப் பொறுப்புகளிலும், தொழில் வெற்றிகளிலும் ஆண்களே பெரும்பாலும் ஆக்கிரமிப்பது ஏன்? காரணம், பெரும்பாலான பெண்களுக்கு உயர்கல்வி, மேற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தடைப்படுவதுதான்.

‘மகள்களுக்கு நகை போட்டு, சீர் செய்து திருமணம் செய்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை முழுமை பெற்றுவிடும், பாதுகாப்பாகிவிடும்’ என்று நினைக்கும் பெற்றோர்களே இன்றும் இங்கு பெரும்பான்மை. உண்மையில், கல்வி என்ற அழியாத சொத்தை மகள்களுக்கு அளிப்பதுதானே அவர்கள் வாழ்வு முழுமைக்கும் பாதுகாப்புத் தருவதாக இருக்கும் தோழிகளே? `எத்தனை ஆண்டுகள் படிப்பாய், பின் எப்போது திருமணம் செய்வது?’ போன்ற கேள்விகளை, தடைகளை ஒழிப்போம். அவர்கள் விரும்பும், இலக்காகக் கொள்ளும் கல்வி வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்போம்.
(நன்றி: ‘அவள் விகடன்’, 23.4.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *