திருமதி சாமி சிதம்பரனார்
நமது அன்பு தெய்வம் திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்களை கடந்த நாற்பத்து மூன்று ஆண்டுகட்கு முன்பு (1.5.1930) மே மதம் முதல் தேதியன்று மணமகளாம் என்னை ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றபோது முதன்முதலாகக் கண்டேன். காலில் விழுந்து வணங்கி எழுந்த என்னை அன்புடன் அணைத்துக் கொண்டார்கள். நெஞ்சத்துள் என்றும் நிலைத்து நிற்கும் அந்தத் திருவுருவம்.
இன்று எழுதத் தொடங்கிய எனக்கு அந்த நினைவுகள் நடந்து நாற்பத்து மூன்று ஆண்டை எட்டியது. என் நெஞ்சம் கலங்கியது. அன்பு தெய்வத்தின் திருவுருவம் என் கண் முன் வந்து மனத் திரையில் காட்சியளித்தது. அன்னாரின் அன்புப் பார்வையும் புன்முறுவலும் நாணம் நிறைந்த அழகிய நடை, எளிமையான உடை அவர்களின் சிரித்த அன்பு பார்வையின் தோற்றம், மறந்திடவா முடியும்?
திடீர் என்று அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து விடுவார்கள் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. எதிர்பாராமல் அவர்களை வந்தடைந்த நோய் படுக்கையில் கிடத்தி மீண்டும் எழுந்திருக்க முடியாமல் என் கண் முன்னாலேயே உயிரையும் பறித்துக் கொண்டு விட்டது. அந்த பேரன்பிற்குரிய அன்னை அவர்களின் தலைமையில் 5.5.1930இல் எங்கள் திருமணம் ஈரோட்டில் சிறப்புடன் நடைபெற்றது. சிவகாமி சிதம்பரனார் ஆனேன்.
சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலம்
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கத்தில் பெண்கள் படையைத் திரட்டி சத்தியாகிரகம் செய்து வெற்றி கண்ட ஈரோட்டு அன்னை அவர்களின் குணநலன்களை எழுத ஏடு இடம் போதுமா? சுயமரியாதை இயக்கம் எரிமலையென தோன்றி காட்டுத் தீ போல் பரவி நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் உள்ள மக்களை தட்டி எழுப்பிய காலம் அது. பகுத்தறிவு இயக்கம் ஒரு சில வைதீகக் கூட்டத்தாரின் பலமான எதிர்ப்புகட்கிடையில் காட்டாற்று வெள்ளம் போல் பட்டி தொட்டிகளிலும் மூலை முடுக்குகளிலும் கொள்கை வீரர்களால் சொற்பொழிவுகள் செய்யப்பட்டு வந்தது. தந்தை பெரியார் வகுத்த பகுத்தறிவு கொள்கைகளை உணர்ச்சிக் கீதமாக ஏற்று சூறாவளி வேகத்தில் கட்டுரைகளாகவும் ‘குடிஅரசு’, ‘திராவிடன்’ பத்திரிகைகளில் சொற்பொழிவுகளாகவும் ஆற்றி வந்த காலம் அது.
அறிவு இயக்கத்தை வளர்த்த தந்தை பெரியார் அவர்களின் பெரும் படைக்கு அன்னை நாகம்மையார் அவர்களின் மாளிகையில் உணவு உடை வசதிகள் அளித்து ஆதரிப்பார்கள். சொந்த வீட்டில் தாயுடன் இருப்பதைப் போன்ற உணர்வையும், சலுகைகளையும் நாங்கள் பெற்றிருந்தோம்.
அய்யாவுக்குப் பழஞ்சோறு
இரவு பன்னிரண்டு மணி, ஒரு மணி ஆனாலும் வரும் பிரச்சார வீரர்களுக்கு வீட்டில் உணவு எப்போதும் தயாராக இருக்கும். சாப்பாட்டில் யார் யாருக்கு எது பிடிக்கும்,பிடிக்காது என்பதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள். குறிப்பாக கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை அவர்கள் சொந்த பிள்ளைகளாகவே ஏற்றுக் கொண்டு அவர்களின் நலன்களை முழுவதும் கவலையுடன் கவனித்து அன்பு காட்டுவார்கள். இனி அந்த அன்பும் ஆதரவும் எங்கு கிடைக்கும்!
அய்யா அவர்களின் சிக்கனத்திற்கு எதிர்ப்பு இயக்க வீர தளபதிகள் தினம் அய்ம்பது பேருக்கு குறையாமல் உணவருந்துவார்கள். இயக்கம் மேலும் மேலும் வளர்ந்து வந்த காலம் அது. ஒரு நாள் எல்லோரும் சாப்பிடும்பொழுது, தந்தை பெரியார் அவர்கள் உணவு விடயத்தில் நேரத்தையும், உழைப்பு, செலவு இவைகளைப் பற்றி எல்லா தோழர்களுடனும் கலந்து பேசி காலை ஆகாரத்திற்கு பழைய சாதம்தான் என்று முடிவு செய்தார்கள். இதனை அம்மா அவர்களிடம் நாளை முதல் எவ்லோருக்கும் காலையில் பழைய சாதம் என்று சொல்லி விட்டார்கள். அம்மா அவர்கள் அப்பொழுது ஒன்றும் சொல்லவில்லை, பேசாமல் இருந்தார்கள்; மறு நாள் காலையில் மற்ற எல்லோருக்கும் இட்லி, சட்டினி, நெய் வழக்கப்படி பரிமாறப்பட்டது. அய்யா, அவர்களுக்கு மாத்திரம் தயிர், பழைய அமுது, ஊறுகாய் வைத்தார்கள். பார்க்க வேண்டுமே அய்யா அவர்களின் முகத்தை.
கொள்கை வேங்கைப்புலிகள்
ஏன் எனக்கு மாத்திரம்? என்று அய்யா அவர்கள் கேட்டதற்கு அம்மா கணீர் என்று சொன்ன பதில், “பிள்ளைகள் கேட்கவில்லையே, நீங்கள்தானே பழைய சாதம் வேண்டும் என்று சொன்னீர்கள். அதனால் தான்” என்று சொல்லி சிரித்தார்கள். அய்யா அவர்கள் வெட்கிப் போய் உட்கார்ந்திருந்தார். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு!
இன்னொரு சம்பவம் அய்யா அவர்கள் அய்ரோப்பா சுற்றுப் பயணம் செய்து திரும்பி வந்த சமயம் சென்னையில் நாஸ்திகர்கள் மாநாடு – ஈரோட்டிலிருந்து எல்லோரும் சென்னைக்கு சென்று கொண்டிருக்கின்றோம்.
23.4.1971இல் டாக்டர் கலைஞர் நம் முதல்வர் அவர்கள் ‘முரசொலி’யில், “கலைஞர் கடிதம்” என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க வீரத் தளபதிகள் பலரை நினைத்து, “கொள்கை வேங்கைப் புலிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அந்தக் கொள்கை வேங்கைப் புலிகளான பட்டுக்கோட்டை அழகிரிசாமி, எஸ்.வி.லிங்கம், மாயவரம் சி.நடராஜன், நாகை மணி காளியப்பன், தம்பதிகள் நீலாவதி, ராம.சுப்ரமணியம், முருகப்பா, மரகதவல்லி, விசாலாட்சி, சுப்பையா, அன்னபூரணி, ரத்னசாமி, திருச்சி ச.ம.சி.பரமசிவம் புரோகித மறுப்புச் சங்கத் தலைவர் சித்தக்காடு ராமையா, பொன்னம்பலனார், சண்டமாருதம் ஆசிரியர், நகர தூதன் ஆசிரியர், பாரதிதாசன், ‘குடிஅரசு’ சப் எடிட்டர் சங்கரையா, அம்மா, அய்யா எல்லோரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த சமயம்.
அய்யா தந்தது இரு சுளை
அம்மா தந்தது ஒரு கூடை
இரயில் வண்டி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்ததும் இயக்கத் தோழர்கள் ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழம் சுமார் இரு நூறுக்கு மேலிருக்கும். அன்பளிப்பாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். நன்றியுடன் பெற்றுக் கொண்ட நமது தந்தை பெரியார் அவர்கள் அதில் இரண்டு மூன்று பழங்களை எடுத்து உரித்து ஒவ்வொருவருக்கும் இரண்டு சுளைகள் வீதம் எல்லோருக்கும் கொடுத்து விட்டு கூடையை பெஞ்சுக்கு அடியில் நகர்த்தி வைத்துவிட்டு படுத்து உறங்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா இதனை பார்த்துக் கொண்டே தானும் அய்யா அவர்கள் கொடுத்த இரண்டு ஆரஞ்சு சுளைகளை வாங்கி சாப்பிட்டார்கள். அய்யா தூங்கியதும் எல்லேரும் வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பழங்களை அள்ளிக் கொடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் அய்யா கண் விழித்துப் பார்த்தார்.
பழக்கூடை காலியாக இருந்தது கண்டு இவ்வளவு பழங்களும் எங்கே என்ற கேட்டார். அம்மா சொன்ன பதில்: சாப்பிடுவதற்குத் தானே கொடுத்தார்கள். மாநாட்டிற்கு கொண்டு போய் ஊறுகாய் போடச் சொல்லியா கொடுத்தார்கள் என்று கேட்டார்கள். அய்யா என்ன பதில் சொல்ல முடியும்? இப்படி பல சம்பவங்கள் நடக்கும். பகுத்தறிவுக் கொள்கையில் அம்மா அவர்கள் அய்யா அவர்களுடன் ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள்.
பகுத்தறிவு மணமிக்க வாழ்க்கை
1930 மே மாதம் ஈரோட்டில் சுயமரியாதை மகா நாடு நடந்தது. அதையொட்டி மாதர் மாநாடு திருமதி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடந்தது. பல சீர்திருத்தத் தீர்மானங்கள் அய்யா அவர்களின் திட்டத்தின்படி நிறைவேற்றப்பட்டது. அதில பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு தங்களுக்குள் பல வேற்றுமைகளை உண்டாக்கிக் கொள்ளுகின்றார்கள். அது ஒழிக்கப் படவேண்டும். நெற்றியில் குறி வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமுதல் அம்மா அவர்கள் தனது கடைசிக் காலம் வரையில் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளவதை நிறுத்தி விட்டார்கள்.
அம்மா அவர்கள் விசேஷ காலங்களில் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். அங்கு நம் நாட்டு வழக்கம் போல் குங்குமம் கொடுப்பார்கள். அம்மா குங்குமம் எடுத்த பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள். உறவு பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் அம்மா அவர்களின் கொள்கையைப் பற்றி வாதாடும் திறமையைப் பார்க்க வேண்டுமே! பொட்டு வைக்காவிட்டால் என்ன? என்று வாதிப்பார்கள். கடைசியில் பதில் சொல்ல முடியாமல் உறவினர்கள் ‘புருஷனுக்குத் தகுந்த பெண்சாதி தானம்மா நீ’? என்று கூறிவிடுவார்கள். அவர் ஒன்று சொன்னால் நீ நாலு பேசுகிறாயே என்பார்கள். அந்த அளவுக்கு பகுத்தறிவுப் பாதையில் அம்மையார் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்கள்.
சுயமரியாதை இயக்க வரலாற்றில் தனியிடம் பெற்ற தாய்க்குலத் தலைவி பகுத்தறிவுச் சீமாட்டி, அன்னை நாகம்மையாரின் நினைவலைகளில் எதிர்கலப் பெண்ணினத்தின் உரிமைக் கனவுகள் மிதந்து வருகின்றன. அந்தக் கனவுகள் செயலுருவம் பெற பணியாற்றுவோமாக!