மதுரை – திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) ஆதாரப்பூர்வ உரை
மதுரை, செப். 11 – உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பேணப்படுவதில்லை – இந்த நிலையில் மாற்றம் தேவை. எஸ்.ஸி, எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர், பெண்கள் போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆதாரப்பூர்வமாகக் கருத்துரை ஆற்றினார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதி பணி நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தி 18.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கத்தில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆற்றிய உரையின் முக்கிய கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
IV. உச்சநீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிய மனங்களில் சிறுபான்மையினர் நிலை:
i) 2014 இல் மோடி ஆட்சிக்கு வரும் வரை சிறுபான்மையினர் போதிய அளவில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். அதேபோல கிட்டத்தட்ட உயர்நீதிமன்றங்களிலும் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் மோடி யின் பாஜக ஆட்சிக்குபின் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பெரிய அளவில் குறைந்தும் பாதிக்கப் பட்டுமுள்ளது. இதில் விதிவிலக்காக உள்ள சிறுபான்மை சமூகம், பார்சி சமூகம் ஆகும்.
ii) இஸ்லாமியரை பொறுத்தவரை, வழக்கமாக ஒன் றுக்கு மேற்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பர். ஆனால் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாஜக ஆட்சியில் இந்த நிலைமையில் இஸ்லாமியருக்கு எதிரான மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது.
இஸ்லாமிய நீதிபதிகளுக்கான இடம்
2012 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் நான்கு இஸ்லாமியர்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தனர். அவர்கள் 1) நீதிபதி அல்டமாஸ் கபீர் 2) நீதிபதி அப்டாப் ஆலம், 3) நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா 4) நீதிபதி இக்பால். இவர்களில் மூவர் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். நீதிபதி ஆலம் பொறுப்பு தலைமை நீதிபதியாக [Acting Chief Justice] இருந்தவர். இந்த நான்குபேரில் கடைசியாக ஓய்வு பெற்றவர் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அவர்கள். அவர் ஜூலை 2016 இல் ஓய்வு பெற்றதற்கு பின்னர், சில காலம் இஸ்லாமியர் எவரும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவே இல்லை.
2017 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் தான் நீதிபதி அப்துல் நசீர் அவர்கள் கருநாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இல்லை. பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த அய்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நீதிபதி அப்துல் நசீரும் ஒருவர். 4.1.2023 இல் அவர் ஓய்வு பெற்றதும் 12 பிப்ரவரி 2023 இல் அவர் ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற ஒரு மாதம் பொறுத்து தான் 6 பிப்ரவரி 2023 இல் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசாவுதீன் அமனுல்லா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இல்லை.
iii ) 2004ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அகில் குரேஷி அவர்கள் நியமிக்கப்பட்டு, 2019 முதல் தலைமை நீதிபதியாக செயல்பட்டும், ஒட்டுமொத்தமாக 18 ஆண்டுகள் பணிபுரிந்தும், உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்படாமலே 2022இல் அவர் ஓய்வு பெற்றார்.
அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படாததற்கு காரணம், அவர் 2010ஆம் ஆண்டில் குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா அவர்கள்மீது சொராபுதின் சேக் கொலை வழக்கில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.
எனவே அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆவதிலேயே பிரச்சினையை சந்தித்தார். குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்ற முறையில் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி காலியான போது அகில் குரேஷி, 2 நவம்பர் 2018 முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டார். உடனே அவரை மோடி அரசு மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது.
மே 2019 இல் உச்ச நீதிமன்றத்தின் கொலேஜியம் நான்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நியமித்து பரிந்துரை செய்தது. அதில் அகில் குரேஷியும் ஒருவர். 53 நீதிபதிகளை கொண்ட மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அகில் குரேஷியை நியமிக்க கொலேஜியம் பரிந்துரைத்தது.
நீதிபதி குரேஷி நிராகரிக்கப்பட்டது ஏன்?
அந்த நால்வரில் மற்றொருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மாற்றலில் பணிபுரிந்து வந்த நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்கள். அவர் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டார். அகில் குரேஷி தவிர மற்ற மூவரும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக ஜூன் 2019 இல் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அகில் குரேஷிக்கு மட்டும் தலைமை நீதிபதி நியமனம் வழங்க மோடியின் அரசு தயாராக இல்லை.
ஜூன் 2019 இல் தலைமை நீதிபதியான ராமசுப் பிரமணியம், செப்டம்பர் 2019 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே ஆகிவிட்டார்.
அகில் குரேஷிக்கு தலைமை நீதிபதி பதவி அளிக்க மறுத்த மோடி அரசை எதிர்த்து குஜராத் வழக்குரைஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கின் விசாரணையின்போது வீரா வேசம் கொண்டு பேசிய உச்சநீதிமன்றம், இறுதியில் அகில் குரேஷியை 5 நீதிபதிகளே உள்ள திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தது. அவர் நவம்பர் 2019 முதல் திரிபுராவின் தலைமை நீதிபதியாக செயல்பட்டார். பின்னர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டு 2022 மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றார்.
குரேஷி குஜராத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்ற முறையில் சீனியாரிட்டியில் முதல் இடத்தில் இருந்தது மட்டுமல்லாமல், அவர் ஓய்வு பெறும் போது அகில இந்திய சீனியாரிட்டியிலும் முதலிடத்தில் இருந் தார். உச்சநீதிமன்றத்தின் கொலேஜியத்தில் ரோகின்டன் நாரிமன் இருந்த வரை கடுமையாக அவருக்காக வாதிட் டும், அவரது ஆட்சேபனையின் காரணமாக தலைமை நீதிபதி போப்டே இருந்த காலத்தில் ஒருவர் கூட உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படாமல் போகின்ற நிலை இருந்த போதும், அகில் குரேஷி உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்படாமலே ஓய்வு பெற்றார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக 2011 இல் நியமிக்கப்பட்ட பேலா திரிவேதி என்ற பெண்மணி 2021 இல் ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப் பட்டதும், அவருடன் சேர்ந்து நியமிக்கப்பட்ட மற்ற 8 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் நீதிபதி ஏ.எஸ்.ஓக்கா தவிர்த்தும், வழக்குரைஞராக இருந்து நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி நரசிம்மா தவிர்த்தும் , மற்றவர்கள் அனைவரும் அகில் குரேஷிக்கு ஜூனியர்களே.
நீதிபதி குரேஷியைப் போலவே
பாதிக்கப்பட்ட நீதிபதி ஜோசப்
iv) இதே போல உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப் அவர்களும் உரிய நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வில்லை. உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் திருமதி இந்து மல்கோத்ரா என்ற வழக்குரைஞரையும் ,உத்தர காண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோசப் அவர்களையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரைத்தது. ஆனால் மோடி அரசு இந்து மல்கோத்ராவை மட்டுமே நியமித்தது.
பின்னர் ஆறு மாதங்கள் கழித்து நீதிபதி ஜோசப் நியமிக்கப்பட்டார்.உத்தரகாண்ட் அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை கொண்டு வந்த மோடி அரசின் உத்தரவை நீதிபதி ஜோசப் ரத்து செய்தார் என்பதே அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டதற்கான காரணம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. தேர்தல் ஆணையர் நியமனம் சம்பந்தமாக அவர் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து மோடி அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய கொலேஜியம் தான் தேர்தல் ஆணையரை நியமிக்கும் என்ற வரலாற்று சிறப்புமிக்க நீதிபதி ஜோசப்பின் தீர்ப்பை ரத்து செய்து சட்டம் இயற்றியது மோடி அரசு. மோடி அரசு செய்த சட்டத்தின்படி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் நியமிக்கும் ஒன்றிய அமைச்சரைக் கொண்ட கொலேஜியம் தான் தேர்தல் ஆணையரை நியமிக்கும்.
இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம், வழக்குரைஞர் ஜான் சத்யன் பெயரை 2022 இல் பரிந்துரைத்தும், மோடி அரசு அவரை நியமிக்க இதுநாள் வரை மறுத்து வருகிறது. அவருடன் பரிந்துரைக்கப்பட்ட மற்றவர்களை மோடி அரசு ஏற்கெ னவே பல மாதங்களுக்கு முன்னால் நியமித்து விட்டது.
இதே போல மூத்த மாவட்ட நீதிபதியாக உள்ள நசீர் அகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்ற நிலையில் அவரது ஜூனியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2014 முதல் சீக்கியர் யாரும்
உச்சநீதிமன்ற நீதிபதியாகவில்லை
v) பாஜக அரசு 2014இல் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை சீக்கியர்கள் எவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவில்லை.
vi) 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த பார்சிக்களின் எண்ணிக்கை 57, 244 தான். பார்சிக்கள் சிறுபான்மை சமூகத்தினர்.அந்த சமூகத்தைச் சேர்ந்த 6 பேர்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்1) நீதிபதி மதன் 2)நீதிபதி பருச்சா 3) நீதிபதி வைரவா 4) நீதிபதி கபாடியா 5)நீதிபதி ரோகின்டன் நாரிமன் 6)நீதிபதி பர்தி வாலா. இதில் நீதிபதி பருச்சாவும், நீதிபதி கபாடியாவும் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியவர்கள். நீதிபதி பர்திவாலா அவர்கள் இரண்டு ஆண்டுக்கும் மேலாக 2028–2030 இல் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார்.
vii)2015இல் நீதிபதி பர்திவாலா குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிகையில், அவர் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்தார். பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல் வழக்கில் அவர் அளித்த ஒரு தீர்ப்பே அந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில், அவர் இந்தியா பின் தங்கிய நிலைமையில் இருப்பதற்கு காரணம் இரண்டு என்றும் ,அவைகளில் ஒன்று லஞ்ச ஊழல் என்றும் மற்றொன்று இட ஒதுக்கீடு என்றும் கூறியிருந்தார்.
இதனால் மாநிலங்கள் அவையைச் சேர்ந்த 58 உறுப்பினர்கள், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று “இம்பீச்மெண்ட் மோஷன்” தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்சொன்ன சர்ச்சைக்குரிய பகுதியை தீர்ப்பிலிருந்து அகற்றினார் நீதிபதி பர்திவாலா. அவர் மேல் தொடரப்பட்ட பதவி நீக்க முயற்சியும் கைவிடப்பட்டது.
பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக 99 மே 2022இல் பதவி ஏற்றார். கொலிஜியம் பரிந்துரைத்த உடனே மின்னல் வேகத்தில் அவரை நியமித்தது மோடி அரசு. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய மோடி அரசின் அரசமைப்புச் சட்ட திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்த மூன்று பேர்களில் ஒருவர் நீதிபதி பர்திவாலா.
கொலிஜியம் முறையிலும்
சமூகநீதிக்கு இடமில்லை
V. கொலிஜியம் முறையும் அதற்கு முன்பும்:
i) கொலிஜியம் முறையில் உயர்நீதித் துறையில் நீதிபதிகள் நியமிக்கப்படும் போதும் அதற்கு முந்தைய காலத்திலும் SC/ST/OBC/WOMEN ஆகிய பிரிவினர் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதே உண்மை நிலை.
ii) 1993இல் இருந்து இதுநாள்வரை உயர்நீதி துறையில் கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள். 1950 முதல் 1993 வரை ஒன்றிய அரசின் முடிவே இந்த நியமனங்களில் இறுதி என்ற நிலை இருந்தது. இது கொலிஜியத்திற்கு முந்தைய நியமன முறை.ஆனால் 1950 முதல் இதுவரை –கொலிஜியம் முறைக்கு முன்பும் கொலிஜியம் முறையின் போதும்– SC/ST/ OBC/ WOMEN ஆகிய பிரிவினர் போதிய அளவில் நியமனம் செய்யப்படவில்லை.
iii) கொலிஜியம் நடைமுறையில் இருக்கும் 1993 முதல் உயர்ஜாதியினரே மிகப் பெரும் அளவில் கொலிஜியத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான் பட்டியல் இனத்திலிருந்தும் ( நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி கவாய்), இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான் பின் தங்கிய வகுப்பில் இருந்தும்(நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மற்றும் நீதிபதி சதாசிவம்), இரு உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள்தான்(நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி பானுமதி) கொலிஜியத்தின் உறுப்பினர்களாக 1993 முதல் இதுவரை இருந்துள்ளனர். தலைமை நீதிபதி உட்பட மூத்த நிதிபதிகள் அய்ந்து பேர் அடங்கியதே உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம். தலைமை நீதிபதி உட்பட மூத்த நீதிபதிகள் மூன்று பேர் அடங்கியதே உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலேஜியம்.
சிறுபான்மையினருக்கும் கதவடைப்பு!
iv) சிறுபான்மையினர்களை பொறுத்தவரை பாஜக ஆட்சிக்கு வரும் வரை போதிய அளவில் குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு இருந்தும் 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் பார்சி சமூகம் தவிர மற்ற சிறுபான்மையினர் போதிய அளவில் நியமனம் செய்யப்படவில்லை.
VI. உச்சநீதிமன்ற தலமை நீதிபதியும் பன்முகத் தன்மையும் :
i ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இருப்பதாக கூறுகிறார். அதற்கு ஆதாரமாக இந்தியாவின் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்ற அனைத்து திசைகளிலும் உள்ள அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற வகையில் நியமனங்கள் இருப்பதாக கூறுகிறார்.
ii) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுவது பன் முகத்தன்மை ஆகாது. அனைத்து திசைகளிலும் இருந்தும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படும்போது, SC /ST /OBC /WOMEN/MINORITIES என அனைத்து பிரிவினரும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும் என்பதே பன்முகத்தன்மையும் சமூக நீதியும் ஆகும்.
iii) SC /ST/OBC/WOMEN/MINORITIES பிரிவுகளில் போதிய நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக இல்லாத காரணத்தால் ,இந்த பிரிவுகளைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு ஓரிருவர் என்ற முறையில் நியமிக்கப்படுகின்றனர். இந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்களை போதிய எண்ணிக்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்திருக்கும் பட்சத்தில் இந்த அவல நிலை வராது.
iv) கொலேஜியம் முறையிலும் அதற்கு முந்தைய முறையிலும் எப்போதுமே சமூக நீதி பேணப்பட வில்லை.SC /ST /OBC/WOMEN ஆகிய பிரிவினர் எப்போதுமே போதிய அளவில் உயர் நீதித்துறையில் நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை. பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் மேற்சொன்ன பிரிவினர் மட்டுமின்றி சிறுபான்மை யினரும் போதிய எண்ணிக்கையில் நீதிபதிகளாக உயர்நீதித் துறையில் நியமிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற நிலைக்குழுவின்
பரிந்துரைகள் என்னாயிற்று?
VI. நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரை:
i) சட்டம் மற்றும் நீதித்துறை சம்பந்தமான நாடாளு மன்ற நிலை குழு 47 பக்கங்கள் கொண்ட தனது 133 ஆவது அறிக்கையை 7 ஆகஸ்ட் 2023 அன்று மாநிலங் களவையிலும் மக்கள் அவையிலும் சமர்ப்பித்துள்ளது.
ii) மேற்சொன்ன நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன் றங்களில் நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி கடைப் பிடிக்கப்படவில்லை என்று கூறுகிறது.எஸ் சி /எஸ் டி /
ஓ பி சி /பெண்கள் /சிறுபான்மையினர் என்ற அனைத்து பிரிவினரும் போதிய அளவில் உயர் நீதித்துறையில் நியமிக்கப்படவில்லை என்பதையும் பதிவு செய்கிறது அந்த அறிக்கை. அந்த அறிக்கையில் பத்தி 12 இல் கீழ்க்கண்டவாறு உள்ளது:
“ As per the data provided by the government on the social status of the Judges of the High Courts and otherwise also ,it can be seen that our higher judiciary suffers from ‘diversity deficit’. The representation of SCs, STs,OBCs,WOMEN and MINORITIES in the higher judiciary is far below the desired levels and does not reflect the social diversity of the country . In recent years that has been a declining trend in representation from all the marginalised sections of Indian society.”
iii) மேற்சொன்ன குழுவின் அறிக்கையில் பத்தி 17-இல் கீழ்க்கண்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது:
“ Further, as of now ,data related to the social status of High court judges are available from 2018 onwards ,the Committee recommends the Department of Justice finds ways and means to collect such data in respect of all judges presently serving in the Supreme court and High courts. For doing this, if required, necessary amendments may be brought in the respective Acts /Service rules of the judges.”
iv) மேற்சொன்ன நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பத்தி 7- இல், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை உயர்நீதிமன்றங்களில் 601 காலியிடங்களை நிரப்புகையில், அதில் 457 பேர் உயர்ஜாதியினர் என்றும் ,எஸ் சி பிரிவினர் 18 பேர் என்றும், எஸ்டி பிரிவினர் 9 பேர் என்றும் ,ஓபிசி பிரிவினர் 72 பேர் என்றும் ,பெண்கள் 91 பேர் என்றும் ,சிறுபான்மையினர் 32 பேர் என்றும் இவைகள் அல்லாதவர்கள் 13 பேரென்றும் கூறியுள்ளது.
சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டும் என்றால்…
v) மேற்சொன்ன பத்தி 7-இல் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பத்தி 12-இல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் எஸ் சி, எஸ் டி, ஓ பி சி ,பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் போதிய எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படவில்லை என்றும், எனவே இந்த நியமனங்கள் பன்முகத்தன்மை அற்றவையாக உள்ளது என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி பத்தி 17 இல் சமூகநீதி பேணப்பட வேண்டும் என்ற முறையில் உயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று மிகத் தெளிவாக பரிந்துரையை செய்துள்ளது.
vi ) 2018 முதல் 2023 வரை காலியான இடங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஒவாசி அவர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், மேற்சொன்ன விவரங்களையே பதிலாகச் சொன்னது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்தது.
எனவே சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்றால் உயர்நீதித் துறையில் –உச்சநீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் –நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, போதிய எண்ணிக்கையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதே ஒரே வழி.
– இவ்வாறு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள் உரையாற்றினார்.