வல்லம், மே.3 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நிகழ்ச்சியின் நான்காம் நாளில் ’குளியல் சுற்றுலா’ சென்று வந்தனர்.
தஞ்சை வல்லம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வளாகத்தில் ஏப்ரல் 28 முதல் மே 2 வரை நடைபெற்ற பழகு முகாமின் நான்காம் நாளான 1.5.2024 அன்று குழந்தைகள் ”குளியல் சுற்றுலா” அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கையான சூழலில் ஆனந்தமான ஒரு குளியல் அனுபவத்தை பெற வைத்தனர். ச. பிரின்சு என்னாரெசு பெரியார், புதுவை சிவ. வீரமணி, பேராசிரியர் கமலக்கண்ணன், அழகிரி, துணைப்பேராசிரியர்கள் அனுசுயா, சித்ரா, பயிற்சி ஆசிரியைகள் ஜாய்ஸ், சவுரியம்மாள், ராதிகா, மது உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் பிஞ்சுகளுக்கு அங்கேயே காலை உணவு வழங்கப்பட்டது. அங்கிருந்து தஞ்சை சரஸ்வதி மஹால் சென்று, தஞ்சையைப் பற்றிய 30 நிமிட காணொளி காட்சி காட்டப்பட்டு, பிஞ்சுகள் 2 மணிக்கு மேல் பல்கலைக்கழக வளாகம் திரும்பினர்.
கலைவாணனால் படைப்பாளிகளான பிஞ்சுகள்!
மதிய உணவுக்குப்பின் பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் அவர்கள் பிஞ்சுகளுக்கு வெள்ளை சார்ட் போர்டு, பெரிய பேப்பர், பெவிக்கால், பெரிய ஸ்ட்ரா ஆகியவைகள் மூலம் பறவைகளை செய்துகாட்டி பிஞ்சுகளின் உள்ளம் கவர்ந்தார். அதே பொருட்களை பிஞ்சுகளுக்குக் கொடுத்து, அவர்களுக்கு பிடித்த பறவைகளைத் தயார் செய்யும்படி பணித்தார். அவரவருக்குப் பிடித்த பறவைகளை செய்யும்படி ஊக்குவிக்கப்பட்டு, கிளி, பட்டாம் பூச்சி உள்ளிட்ட பறவைகளை உருவாக்கி, மற்றவர்களுக்குக் காட்டி மட்டற்ற மகிழ்ச்சியைப் பெற்றனர். தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், பிஞ்சுகளுடன் பயணம் செய்யும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுமான சுஜிதா, சுரேந்திரன், வீரராஜ், யோகேந்திரன், கண்மணி, சிறீகரி, அபிநயா, நூருல் ஆசிபா, ரவிதா, மேகலா, உஷா, பிரியதர்சினி, வைஷ்ணவி, பிரசன்ன லட்சுமி, பவதாரிணி ஆகியோர் நடனத்துடன் பாடல்கள், சிலம்பம், மிமிக்ரி போன்ற கலைகளைச் செய்துகாட்டி பிஞ்சுகளை மகிழ்வித்து, மகிழ்ந்தனர். மாலையில் இரட்டை மாட்டுவண்டி, ஒற்றை குதிரை வண்டி சவாரி செய்து மகிழ்ந்தனர் பெரியார் பிஞ்சுகள்.
அறிவியல் மனப்பான்மை வகுப்பு!
தொடர்ந்து ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அரங்கில் பிஞ்சுகளுக்கு 3டி கண்ணாடிகள் கொடுக்கப்பட்டு, திரையிடல் நடத்தப்பட்டது. அடுத்த வகுப்பாக அறி வியல் மனப்பான்மையை கற்றுக்கொடுக்கும் அறிவியல் செயற்பாட்டாளர் அறிவரசன் அவர்கள் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் அறிவியலை செய்முறை மூலம் எளிய முறையில் விளக்கினார். ஒளிவிலகல் எதனால் ஏற்படுகிறது என்பதை எப்படிச் சொன்னாலும் பிஞ்சுகள் புரிந்து கொள்வது கடினமே. அப்படியிருக்க, ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர், எண்ணெய் இரண்டையும் ஊற்றி அதில் ஒரு நீண்ட குழலை விட்டு, எண்ணெயில், தண்ணீரில், இரண்டு மற்ற குவளைகளின் வெற்றிடத்தில் என மூன்று இடங்களிலும் வளைந்துள்ளதைக் காட்டி, அது குறித்து அறிவியல் உண்மைகளை விளக்கினார். அதோடு பிஞ்சுகள் அனைவருக்கும் தனித்தனியாக ஊதுகுழல்கள் தயார் செய்து கொடுத்தார். அவ்வளவுதான்… அந்த ஊதுகுழல்களிலிருந்து ஓயாமல் புறப்பட்ட இசை, பல்கலைக்கழக வளாகத்தையே நிறைத்தது. ஒரே நாளில் அவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை புதுப்புது அனுபவங்கள். அதனால், அன்று இரவு… பிஞ்சுகளுக்கு நம்மிடமும், வீட்டினரிடமும் பேசுவதற்கு கருத்துகள் ஏராளமானவை இருந்தன. அதைக் கேட்பதற்கு அவர்களது பெற்றோருக்கும் தாராளமான நேரமும் இருக்கும்.