வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவரும் முதலில் அவரது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவை – அல்லது இருப் பவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கை, கவனத்துடன் நடந்து கொள்வதோடு, அந்த எதிரிகளைச் சரியாகக் கண்டுபிடித்து பிறகு தமது சாதுர்யத்தாலும், சாமர்த்தியத்தாலும், சரியான அணுகுமுறை மூலமும் தோற்கடிக்க வேண்டும்.
வெளியில் உள்ள எதிரிகளைப் பற்றித் தான் நம்மில் பெரும்பாலோர் தேடித் தேடித் திரிகிறோம்; போராட அல்லது களமாட இறங்குகிறோம்.
தனி வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி, நம்மில் பலர் தோற்றுப் போவதற்கு ஒரு முக்கிய அடிப்படைக்காரணம், வாழ்வில் நமது எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? (உண்மையான) என்று கண்டுபிடிக்கத் தவறுவதுதான்; அதைவிடக் கொடுமை நல்ல நண்பர்களை; மோசமான எதிரிகளாகக் கருதுவது – தொல்லையான எதிரிகளை நமது தோழமைக்குரிய நண்பர்களாகக் கருதி – பாம்பும் பழுதையும் பச்சை என்பதாலேயே ஒன்றுதான் என்று எண்ணி மோசம் போய் நாசமாகும் கெடுதி போன்றது அது!
நமது எதிரிகளில் வெளியே இருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது எளிது; ஆனால், நம்முள் உள்ள எதிரிகளைச் சரியாக அடையாளம் கண்டுபிடித்து, அவர்களுடன் போராட முனைவதே முக்கியமான, மூலாதாரமான முழு வெற்றியைத் தரும்!
சோம்பல், மறதி, அளவுக்கு மிஞ்சிய தூக்கம் போன்றவை நமது எதிரிகள் என்பதை திருவள் ளுவர் தனது குறளில் பாங்குடன் விளக்கியதை சில கட்டுரைகள்மூலம் உணர்த்தியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாகவே இதனையும் நமது ‘வாழ்வியல் சிந்தனை’ வாசக நேயர்கள் எண்ணிப் பார்த்து, தமது வாழ்க்கையில் முன்னேற முழு மூச்சுடன் முயல வேண்டும்!
நமது எதிரிகளில் மிக மிக ஆபத்தானதும் – ஆழமாக ஊறி ஆளுமை புரிவதும் – “தன்முனைப்பு” என்ற (Ego) ஒரு குணமேயாகும்!
புகழ்ச்சி என்ற எருவை இந்த ஆபத்தான விஷச் செடிக்குப் போட காரியம் சாதிக்கும் பலரும் தாராளமாக முன் வருவர்!
நமது அறிவைப் பாராட்டுபவர்கள் அத்தனை பேரும் முகஸ்துதி என்ற முகமன் கூறி, பொய்த் துயிர் வாழுபவர்கள் அல்ல என்றாலும், மிகப் பெரும்பாலோர், புகழ்ச்சி என்ற போதையை வாயில் ஊற்றிக் கொண்டே இருப்பதை ஏற்று ஏற்றுப் பழக்கப்பட்ட பலரும். மிகப் பெரிய நிலை, பெரிய பதவி, பெரிய அரிய தலைமை இவற்றைப் பெற்றவர்கள். இவர்களை வீழ்த்த வெளி எதிரி களே தேவையில்லை; இந்தத் தன்முனைப்பாளராக (Egomaniac) ஒருவரை மாற்றிவிட்டால், அவர் நியாயமான மாற்றுக் கருத்தெதையும் கேட்கவே முன்வர மாட்டார்!
இடிப்பாரை நோக்கிக் கடப்பாரைகளைத் தான் தூக்குவர்; வருமுன்னர் எச்சரிக்கை செய்யும் அந்த நன்மையர்களையே தனது எதிரிகளாகப் பார்த்து நாளா வட்டத்தில் கெட்டொழிவார்கள்!
இது வரலாறு காட்டும் வரிச் சுவடுகள்!
இன்றைய காலத்து மனோ தத்துவவாதிகள் இத்தகைய தன்முனைப்புத் தம்பிரான்களை Egotist என்ற ஒரு சொல்லாக்கத்தின் மூலம் அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த Egotist என்ற தன்முனைப்புக்காரர் மிகவும் தம்மை முன்னிறுத்தியே உச்சம் தொடுவ தாகக் கூறி, அதல, பாதாளத்தில் இறுதியில் வீழ்ந்து விலாசம் இழப்பார்கள்.
இது நமது புற எதிரிகள் நம்மை வீழ்த்த, கையில் வைத்துள்ள ஓர் அருமையான காந்தக்கல் ஆகும்!
(தொடரும்)