* இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) அடிப்படைக் கடமையாகக் கூறியுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் பணியில் பகுத்தறிவாளர் கழகம் செயல்படுகிறது!
* மூடநம்பிக்கைகள் பரவும் இடங்களில் களத்தில் இறங்கி செயல்படும்!
ஆளுநர் போக்கால், அவர் பதவி நீடிக்கத் தகுதியற்ற நிலை ஏற்படும்!
புதுச்சேரி,நவ.20 இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 51-ஏ(எச்) பிரிவின்படி மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும். இது குடிமக்களின் அடிப்படைக் கடமை என்பதன் அடிப்படையில், பகுத்தறிவாளர் கழகம் செயல்படுகிறது; மூடநம்பிக்கைகள் பரவும் இடங்களில் எல்லாம் பகுத்தறிவாளர் கழகம் களத்தில் இறங்கி செயல்படும் என்றும், ஆளுநர்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு ‘உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் கூறிய நிலையில், ஆளுநர் ரவி பதவியில் நீடிக்கத் தகுதியவற்றவர் ஆகிவிடுவார்’ என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (19.11.2023) காலை பகுத்தறிவாளர் கழக மாநில கலந் துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
புதுச்சேரியில் பகுத்தறிவாளர்
கழகக் கலந்துரையாடல்!
தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த ஆண்டு மாநில பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் இந்தப் புதுச்சேரி நகரில் இன்று (19.11.2023) நடைபெற்று இருக்கிறது.
இதில் வருகிற 2024 ஆம் ஆண்டிற்கான பல செயல் திட்டங்களை மாநில பகுத்தறிவாளர் கழகம் உருவாக்கி இருக்கிறது.
பகுத்தறிவாளர் கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் – பல்வேறு பிரிவுகளில் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். குறிப்பாக மாநிலம் தழுவிய பகுத்தறிவாளர் கழகம், அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழகத்தோடும், மற்ற உலக அமைப்பு களோடும் இணைந்த ஒன்றாகும்.
இந்திய அரசமைப்புச் சட்ட கடமைகளில் ஒன்று!
அறிவியல் ரீதியான மனப்பான்மையை பரப்பவேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய அடிப்படை கடமை களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், எப்படி ஜீவாதார உரிமை அடிப்படை உரிமை என்று இருக்கிறதோ, அதுபோலவே, அடிப்படைக் கடமைகள் இருக்கின்றன. அந்தக் கடமைகளில் மிக முக்கியமான ஒன்று என்னவென்று சொன்னால், 51-ஏ(எச்) பிரிவில்,”It shall be the duty of every citizen of India” – ” to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;” என்று சொல்லக்கூடிய அளவிலே இருக்கிறது.
ஆகவே, இன்றைக்கு சந்திரயான் விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் இக்காலகட்டத்தில், அறிவியல் ரீதியாக பல வெற்றிகளை நாம் பெற்றிருக் கின்றோம் என்ற நிலையில், மிக முக்கியமாக நாம் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், மூடநம்பிக்கையிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரவேண்டும்; அப்பொழுதுதான் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும்.
தந்தை பெரியார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்!
தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழ கத்தை சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியபொழுது சொன்னார், ”மனிதர்களுடைய மிக முக்கியமான அம்சம் – ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? என்று கேள்வி கேட்கக்கூடியதுதான்” என்றார்.
அந்தக் கேள்வி கேட்கக்கூடிய மனப்பான்மைதான் இவ்வளவு பெரிய அறிவியல் மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இந்த நாட்டிலே எதற்கெடுத் தாலும் மூடநம்பிக்கைகள் ஏராளமாகப் பரவிக் கொண் டிருக்கின்றன.
அன்றாடம் ஒருபக்கத்திலே அறிவியல்; இன்னொரு பக்கத்திலே மூடநம்பிக்கை – அறிவியல் ரீதியான மூடநம்பிக்கைகளைப் பரப்பக்கூடிய அளவிற்கும் இருக்கிறது.
ஓர் அறிவுப் பிரச்சாரத்தை பகுத்தறிவாளர் கழகம் சிறப்பாக செய்கிறது!
இவற்றையெல்லாம் எதிர்த்து ஓர் அறிவுப் பிரச் சாரத்தை பகுத்தறிவாளர் கழகம் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றது- 50 ஆண்டுகாலமாக.
இவ்வாறு பகுத்தறிவாளர் கழகத்தின் பிரச்சாரம் ஒரு பக்கத்தில் நடந்தாலும், இன்னொரு பக்கத்திலே மூடநம்பிக்கைகள், ஜாதிக் கொடுமைகள், இன் னொருபக்கம்ஆணவக்கொலைகள் எல்லாம்நடந்து கொண்டிருப்பதினால், அறிவுப்பூர்வமாக மக்களைத் தயாரிக்கவேண்டும். கிராமங்களாக இருந்தாலும், நகரங்களாக இருந்தாலும் அங்கெல்லாம் பிரச்சாரம் செய்யவேண்டும்; ஊடகங்களின் வாயிலாக செய்ய வேண்டும். அதுபோலவே, கட்டுரைகள், புத்தகங்கள், நூலகங்கள் மூலமாக செய்யவேண்டும் என்ற அந்த நோக்கத்தோடு, பல்வேறு கருத்துள்ளவர்களும் பகுத்தறி வாளர் கழகத்தைப் பலப்படுத்தி இருக்கிறார்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநாடு!
சிறப்பான வகையில் பகுத்தறிவாளர் கழகம் இயங்குகிறது. எல்லா பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்டபேராளர்கள்இக்கலந்துரையாடலில்வந் திருந் தார்கள்.இரண்டு ஆண்டுகளுக்குஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் வெளி மாநிலங் களிலிருந்து பகுத்தறிவாளர்கள் வந்து கலந்துகொள் கிறார்கள். அம்மாநாட்டில் செயல்திட்டங் களை வகுத்திருக்கிறார்கள். அப்படி எடுக்கப்பட்ட முடிவில், அடுத்த மாநாடு, புதுச்சேரி மாநிலத்திலோ அல்லது காரைக்கால் பகுதியிலோ நடைபெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆசிரியர்கள் மத்தியிலும் பகுத்தறிவு சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, மூடநம்பிக்கை ஒழிப்பு, கேள்வி கேட்க, மாணவர்களைத் தூண்டக்கூடிய அந்த உணர்வுகள், சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, அறிவுச் சுதந்திரம், சுதந்திரமாகச் சிந்திப்பது, வெறும் கல்வி என்று, ஏட்டுக் கல்வியை மட்டுமே நினைக்காமல், மாணவர்கள் படைப்பாற்றலை உருவாக்கக் கூடிய ஆற்றலை பெருக்கவேண்டும் என்று ஆய்வு செய்து, வருகிற 2024 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்.
மக்கள் மனதில் அறிவெழுச்சியை உருவாக்குவதுதான் முக்கிய நோக்கம்!
பகுத்தறிவாளர் கழகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பில், எல்லா நிலைகளில் இருப்பவர்களும் இணையலாம். பகுத்தறிவாளர் கழகம் என்பது அடிப்படையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரை செய்து, மக்கள் மனதில் அறிவெழுச்சியை உருவாக்குவதுதான் அதன் நோக்கமாகும்.
ஏனென்று கேட்டால், நம்முடைய மூளையில் போட்ட விலங்கை அகற்றுவது எப்படி? அதன்மூலமாக சுதந்திரமாக சிந்திக்க வைப்பது எப்படி? என்பதுதான் பகுத்தறிவாளர் கழகத்தினுடைய மிக முக்கியமான இலக்கு – நோக்கம்.
தந்தை பெரியார் அவர்கள் இந்த அமைப்பை உருவாக்கி, இன்றைக்கு 50 ஆண்டுகள் ஆகின்றன. வெளிநாடுகளிலும் பகுத்தறிவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த நாடுகளில் வெறும் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில், குறிப்பாக இந்தப் பகுதியில் அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது. காரணம் என்ன வென்றால், மக்கள் பிரச்சினைகளில் அதற்கு ஈடுபாடு இருக்கிறது.
பகுத்தறிவு ஓர் ஆயுதமாக இருக்கவேண்டுமே தவிர,
வெறும் ஆராய்ச்சிக்கான தலைப்பாக மட்டுமே இருக்கக்கூடாது!
சமூக மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்பதற் காகத்தான் பகுத்தறிவு ஓர் ஆயுதமாக இருக்க வேண்டுமே தவிர, பகுத்தறிவு வெறும் ஆராய்ச்சிக்கான தலைப்பாக மட்டுமே இருக்கக்கூடாது.
ஆகவே, இன்றைக்கு பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாநாடு நடத்துவதுபற்றியும் திட்டமிடப்பட்டு இருக் கிறது.
உண்மை நிலை கண்டறிய
பகுத்தறிவாளர்கள் குழு!
சில நாள்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். செங்கம் போன்ற ஊர்களில் சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. அங்கே பிசாசு நட மாடுகிறது என்று இரவில் மக்கள் அங்கே நட மாடுவதற்கே அஞ்சினர். அதனை மக்களிடம் விளக்கிச் சொல்வதற்காக பகுத்தறிவாளர் கழக அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆய்வு செய்து உண்மை நிலைமைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள்.
அங்கே சாலையில் வளைவு இருப்பதால், அடிக்கடிவிபத்துஏற்படுகிறது. அந்தவிபத்து களைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள் வதற்காக காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரை நேரில் சந்தித்து அதற்குரிய நடவடிக்கை களை மேற்கொள்ளும்படி அந்தக் குழு வலியுறுத்தியது.
‘பேய்’, ‘பிசாசு’ இருக்கிறது என்று இந்தக் காலத்தில், அறிவியல் காலகட்டத்தில் நம்பக் கூடாது என்பதற்கான ஓர் அறிவியல் பிரச் சாரத்தை செய்யவேண்டும் என்கிற திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த அமைப்பிற்கு நான் புரவலராக இருக்கிறேன். ஆகவே, அந்த வகையில் இம்மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வமைப்பில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; பல்வேறு அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அறிவியல் துறையில் பாடுபடக் கூடியவர்களும் இருக்கிறார்கள். மாணவர்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். கல்லூரி, பல்கலைக் கழகம் சார்ந்த சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள்.
ஆகவே, இது ஒரு பரவலான, சமூக நலன் சார்ந்த, முன்னேற்றத்தைச் சார்ந்த, அறிவியல் மனப்பான்மையை உருவாக்கக் கூடிய ஓர் அமைப்பாகும்.
அதிக அளவில் மூடநம்பிக்கைகளைப் பரப்பக்கூடிய அளவிற்கு புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகள்குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எவரிடமும் ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை உருவாக்கக்கூடாது!
இப்பொழுது மதவெறித் தனத்தை உண்டாக்கலாம் என்றுநினைக்கிறார்கள். மனிதநேயத்தைக்காப்பாற்ற வேண்டும். இந்த மதம், அந்த மதம் என்று எந்த மதமாக இருந்தாலும், அது மற்றவர்களுக்கு ஒரு நல்லிணக்கத்தைஉண்டாக்கவேண்டுமே தவிர, எவரி டமும் ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தை உருவாக்கக் கூடாது என்பது போன்ற – அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடிய பொதுவான ஒரு நிலைப்பாட்டினை எல்லோரிடையேயும் பிரச்சாரம் செய்வதுதான் இந்த இயக்கமாகும்.
அந்த இயக்கத்தினுடைய செயல்பாடுகளை வருகின்ற ஆண்டு முழுமையும் செய்வதற்கு உரிய வழிமுறைகள் குறித்து முடிவுகள் எடுக்கவே தமிழ்நாடு முழுவதுமிருந்து இக்கலந்துரையாடலுக்கு வருகை தந்திருக்கின்றார்கள்.
தமிழ்நாடு அரசு மீண்டும் மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறதே!
செய்தியாளர்: ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன் றத்தைக் கூட்டி, மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறதே?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு ஆளுநரும் சரி, அதேபோல, பலர் இன்றைய ஆர்.எஸ்.எஸ். ஆட்சி யாக ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய பா.ஜ.க. ஆட்சியினுடைய ஆளுநராக பல மாநிலங்களில் இருக்கிறார்கள். உதாரணமாக கேரளா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம்- எங்கெங்கெல்லாம் எதிர்க் கட்சிகள் ஆளுகின்றதோ, அங்கெல்லாம் ஆளுநர் களை அனுப்பி, ஒரு போட்டி அரசாங்கத்தை நடத் துவதற்கு, ஒன்றியத்திலிருந்தே அவர்களைத் தட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக
ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
”மறைமுகமாக நீங்கள் ஒத்துழையாமை இயக்கத்தைச் செய்யுங்கள். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஓர் ஆட்சியின் செயல்பாடுகளைநடத்த விடாதீர்கள். அந்தத் திட்டங்களால் மக்கள் பய னடைந்தால், அவர்கள் தங்களைப்பற்றிப் புரிந்து கொள்வார்கள்; ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.
நாம் சொன்ன உறுதிமொழிகளை நாம் நிறைவேற்ற வில்லை 9 ஆண்டுகளாக. அதேநேரத்தில், மாநில அரசு கொடுத்த தேர்தல் அறிக்கை உறுதிமொழிகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடாது” என்று ஆளுநர்களுக்கு அறிவுறுத்து கின்றனர். இதன்படியே மாநில அரசு கொண்டுவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், குறுக்குச்சால் விட்டு ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படி, ஆளுநர் தன் இஷ்டப்படி நடப்பதற்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தமிழ்நாடு அரசு, பொறுத்தது போதும் என்கிற நிலையில், வள்ளலார் அவர்கள் சொன்னதுபோல, ”பட முடியாது இனி துயரம், பட்டதெல்லாம் போதும்” என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தெளிவாக இன் றைக்குத் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது.
அப்படி சென்றவுடன், உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்த பிறகு, இதுவரையில் சும்மா இருந்த ஆளுநர், 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.
சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளாமல், வன்முறை செயல்களில் ஈடுபடாமல், அதற்குச் சரியான வழியில், அரசமைப்புச் சட்ட ரீதியாகவே மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டி, அதில் 10 மசோதாக் களை மீண்டும் நிறைவேற்றி, விவாதம் நடத்தி, தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல், கருத்தியல் ரீதியாகவும், ”இந்திய அரசமைப்புச் சட்டத்தையே ஆளுநர் கொச்சைப்படுத்துகிறார், ஜனநாயகத்தை கேவலப்படுத்துகிறார்” என்பதையெல்லாம் வெளிப் படுத்தி, ஒருமனதாக அந்த மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
வழக்கு நாளை (20.11.2023) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, உச்சநீதி மன்றத்தில் பஞ்சாப் மாநில ஆளுநர், கேரள மாநில ஆளுநர், தெலங்கானா ஆளுநர் ஆகியோர்மீது சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
”நெருப்போடு ஆளுநர்கள் விளையாடுகிறார்கள்” உச்சநீதிமன்றம் வைத்த குட்டு!
தமிழ்நாட்டிலுள்ளஆளுநரைப்பற்றிஉச்சநீதி மன்றம், ”ஜனநாயகத்தை ஆளுநர் மதிக்க வேண்டும்; ஆளுநர் என்பவர்கள் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. ஆட்சியை ஆளுகிறவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; எனவே, மக்களுடைய ஆட்சிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்” என்று கூறியுள்ள துடன், இன்னும் கடுமையான வார்த்தையை உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது ”நெருப்போடு ஆளுநர்கள் விளையாடுகிறார்கள்” என்று.
அதற்குப் பிறகுதான், இவ்வளவு நாள்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த மசோதாக்களை சிறிது நகர்த்தி இருக்கிறார். ஆனாலும், அவர் திருந்தியதாகத் தெரியவில்லை. ”வீம்புக்காக நான் செய்வேன்” என்று நடந்து வருகின்றார். இப்பொழுது அரசமைப்புச் சட்டப்படி, அவருக்கு வேறு வழியில்லை. மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பியிருக்கின்ற மசோதக்களை ஒப்புக்கொண்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும். அப்படி இல்லையென்றால், அவர் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவராக ஆகிவிடுவார்.
எனவே, அடுத்தது என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பொறு மையாக இருந்து, தெருப் போராட்டமாக நடத் தாமல், அரசமைப்புச் சட்ட ரீதியாக – ஒரு சட்டப் போராட்டமாகவே தமிழ்நாடு அரசு இதனைச் செய்திருக்கிறது.
அ.தி.மு.க.வினரின் குடுமி ஒன்றிய ஆட்சியாளர்களின் கைகளில் இருக்கிறது!
செய்தியாளர்: சட்டமன்றத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பது தமிழ்நாடு ஆளுநருக்கு ஆதரவாகத்தானே செயல்பட்டு இருக்கிறது?
தமிழர் தலைவர்: நிச்சயமாக! அவர்கள் வெளி நடப்பு செய்ததற்குக் காரணம் என்னவென்றால், இவர்களுடைய குடுமி அவர்களுடைய கைகளில் இருக்கிறது.
மேனாள் அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கிறார்கள். அதன்மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஆளுநரிடம் கோப்புகளைக் கொடுத்திருக்கிறது இன்றைய தமிழ்நாடு அரசு. அந்தக் கோப்புகளில் கையெழுத்துப் போடாமல் இருக்கிறார். அதனால், சட்ட ரீதியாக தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருக்கிறது.
ஆகவே, தங்களுக்குப் பாதுகாப்பாக யார் இருக் கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் நடந்துகொள்கிறார்கள்.
எப்படி காவல்துறையும் – குற்றம் புரிந்தவர்களின் கூட்டணியும் இருக்குமோ – அதுபோல, இவர்களுடைய கூட்டணி இருக்கிறது.
அதற்காக ஆளுநரைக் காப்பாற்றவேண்டும் என்ப தற்காகத்தான் அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பிற்கான
சரியான காரணத்தினை சொல்லவில்லை
ஆனால், அவரைக் காப்பாற்றவேண்டும் என்று நினைத்தார்களே தவிர, அதற்குச் சரியான காரணத்தைக் கண்டுபிடித்தார்களா என்றால், கிடையாது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது.
”இரவில் ஏன் தென்னை மரத்தில் ஏறினாய்?” என்று ஒருவரைப் பார்த்துக் கேட்டால், ”புல் பிடுங்கப் போனேன்” என்று சொன்னவர் கதைபோல, எங்கள் கட்சித் தலைவியான அம்மாவின் பெயரை நீக்கியதால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது இருக்கிறது.
இவருக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசிய மில்லை. அவரிடமிருந்து வந்திருக்கக்கூடிய ஓ.பி.எஸ்.சே பதில் சொல்லிவிட்டார். இவர் விவரம் தெரியாமல் சொல்லியிருக்கிறார் என்று.
எனவே, எதிர்க்கட்சித் தலைவருக்கு விவரம் தெரியவில்லை என்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதில் சொல்லியிருக்கிறார்.
பாண்டிச்சேரி பா.ஜ.க.வின் ‘சிறப்பு மாடல்’ இதுவோ?
செய்தியாளர்: பாண்டிச்சேரியில், பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்தார்கள் என்ற ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அதனை மறுத்து, அவர்களை அழைத்து விருந்து வைத்திருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அந்த நிகழ்வுதான் படத் துடன் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வெளி வந்திருக்கிறதே! ஒருவேளை அவரை அழைத்து, அருகில் அமர வைத்தார்கள் என்பதினால் அப்படி சொல்லியிருக்கிறாரோ என்று தெரியவில்லை. அவர் ஒன்றிய இணை அமைச்சராக இருப்பதினால், அவரை பக்கத்தில் அமர வைத்தார்கள்.
ஏற்கெனவே செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்த காட்சி படத்துடன் வெளிவந்திருக்கிறதே, அதற்கு என்ன நடவடிக்கை என்றுதான் கேட்கிறார்கள்.
பழங்குடியின மக்களுக்கு சிறப்பு செய்கிறோம் என்ற பெயரில் விழாவினை ஏற்பாடு செய்து – இப்படி சிறப்பு செய்கிற முறை என்பது – பாண்டிச்சேரி பா.ஜ.க.வின் ‘சிறப்பு மாடல்’ இதுவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரையில், புதுச்சேரி மாடல் என்பதே சரியாக வரவில்லை என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவே சொல்லிவிட்டார்.
ஆகவே, இதுவும் புதுச்சேரி மாடலாக இருக்கும் போலிருக்கிறது.
பழங்குடி மக்களை உயர்த்துவது எப்படி என்று சொன்னால், எல்லோரையும் போல சமமாக அமர வைத்தால் உயரமாட்டார்கள்; அவர்களை கீழே அமர வைத்து உயர்த்துகிறோம் என்பது புதுச்சேரியின் நவீன மாடலாக இருக்கின்றது.
ஆகவே, அவர் முழுப் பூசணிக்காயை அல்ல – முழுப் பெரிய மலையையே அவர் மறைக்கிறார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை, பரிதாபத்திற்குரியவர் அவர்.
இதுதான் பி.ஜே.பி., இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்பதற்கு இதுவே வெளிப்படையான அத்தாட்சி!
மிக முக்கியமாக பி.ஜே.பி.யைப் புரிந்துகொள்வதற்கு புதுச்சேரி மக்கள் இன்னும் தயாராகவில்லை என்றால், பழங்குடியின மக்களுக்கு இப்படி நடந்ததை வைத் தாவது புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் பி.ஜே.பி., இதுதான் ஆர்.எஸ்.எஸ். என்பதற்கு இதுவே வெளிப் படையான அத்தாட்சி- நல்ல சான்று.
இந்தப் படம் தேர்தலுக்கு முழுமையாகப் பயன்படக்கூடிய அளவிற்கு அமையும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.