எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்
தமிழ்நாட்டில் சமூக மாற்றத்துக்கான இயக் கத்தைத் தொடங்கி நடத்திய பெரியார், தன்னு டைய கருத்துகளை எழுத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்க முதன்முதலாகத் தொடங்கிய இதழ் ‘குடிஅரசு’. பகுத்தறிவு, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய தளங்களில் ‘குடிஅரசு’-வின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
02.05.1925இல் ஈ.வெ.ராமசாமி, வா.மு.தங்க பெருமாள் இருவரையும் ஆசிரியராகக் கொண்டு ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்டது. சில மாதங் களில் ஆசிரியர் பொறுப்பிலிருந்து தங்கபெரு மாள் விலகிய பின்னர், பெரியார் ஆசிரியராகத் தொடர்ந்தார். ‘எல்லாரும் ஓர் குலம்,எல்லாரும் ஓர் இனம்’, ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல்களை முகப்பில் கொண்டு ‘குடிஅரசு’-வின் முதல் இதழ் வெளி யானது.
‘குடிஅரசு- வின் தொடக்கக் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களைத் தொடர்ச்சியாகக் காண முடி கிறது. அப்போது பெரியார் காங்கிரசுடன் கனத்த முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். காங்கிர ஸின் விடுதலைப் போராட்டமானது, சமூக விடு தலையையும் இணைத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பது பெரியாரின் கருத்து. ஈ.வெ.ராமசாமி என்ற பெயரிலும், ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப்பெயரிலும் தனது கட்டுரைகள், தலையங்கங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்டோருக் கான உரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தனித்தமிழ் இயக்கத்துடன் இணைந்து தமிழ்வளர்ச்சிக்கான பணியைச் செய்ததும், தமிழ் மொழியுரிமைக்கான போராட்டக் களத்தில் தொடர்ந்து முன்னின்றதும் ‘குடிஅரசு-வின் முக்கியமான பங்களிப்புகள். ‘குடிஅரசு’ என்ற தூய தமிழ்ப் பெயரில் இதழைத் தொடங்கியது தனித்தமிழின் பயன்பாடு குறித்த பெரியாரின் முன்னெடுப்புக்குச் சான்று. திருக்குறள் போன்ற இலக்கியங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்ட அதே வேளையில், பகுத்தறிவுக்குப் புறம்பான இலக்கியங்களை விமர் சிக்கவும் ‘குடிஅரசு’ தயங்கியதில்லை. 1938இல் தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாயப்படுத்தப்பட்ட போது, அதன் பாதிப்பை உணர்த்தித் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதுடன், ஹிந்தித் திணிப் பைத் தமிழர்கள் எதிர்த்துப் போராடிய வரலாறு அனைத்தையும் இந்த இதழ் ஆவணப்படுத்தி யுள்ளது.
உலக அளவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசி வந்தவர்களின் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்து கவனப்படுத்த ‘குடிஅரசு’ தவ றியதில்லை. அதில் இங்கர்சால், லெனின், மேயோ ஆகியோரின் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை. சிவகாமி சிதம்பரனார், நீலாவதி, பினாங்கு ஜானகி உள்ளிட்ட பெண் படைப்பாளிகள் பலரும் தொடர்ந்து எழுதிவந்தனர். அது மட்டுமின்றி, குஞ்சிதம் குருசாமி,மீனாம்பாள் சிவராஜ் ஆகி யோர் சுயமரியாதை இயக்க நிகழ்வுகளில் பேசிய உரைகளையும் ‘குடிஅரசு’ ஆவணப்படுத்தியுள் ளது. குழந்தைத் திருமணத்தை எதிர்த்தும், விதவை மறுமணத்தை ஆதரித்தும் வெளிவந்த கட்டுரைகள் எண்ணற்றவை.
அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்ற தலைப்பில் தலையங்கம் (29.10.1933) எழுதியதற் காகப் பெரியார் மட்டுமின்றி, பெரியாரின் சகோ தரியும் இதழின் வெளியீட்டாளருமான கண்ணம் மாளும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். இவ்வாறு பல அடக்குமுறைகளுக்கும் உள்ளானது ‘குடிஅரசு’.
தமிழர்களின் சமூக, பண்பாட்டு அரசியலில் தவிர்க்க இயலாத பாத்திரத்தை வகித்த ‘குடிஅரசு’, 05.11.1949 வரை வெளிவந்தது. இதில் வெளிவந்த பெரியாரின் பேச்சையும், எழுத்தையும் தொகுத்து, 42 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது திராவிடர் கழகம்.
– நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 2.5.2024