வரலாற்றைத் திரிப்பது – இருட்டடிப்பது என்பது எல்லாம் சங்பரிவார் களுக்குக் கை வந்த கலை!
வைக்கம் போராட்டத்திற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத – தத்துவ ரீதியாக ….. இருக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது என்றால், அதன் அறிவு நாணயத்தை மிக ஆழமாகவே புரிந்து கொள்ளலாம்.
வைக்கம் போராட்டம் என்பது ஜாதி – தீண்டாமை ஒழிப்பின் அடிப்படையைக் கொண்டதாகும். ஜாதி – தீண்டாமை ஒழிப்பில் ஆர்.எஸ்.எசுக்கோ அதன் சங்பரிவார்களுக்கோ நம்பிக்கை உண்டா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தன்வாயைத் திறந்து “ஜாதி ஒழிக! தீண்டாமை ஒழிக!!” என்று சொல்லட்டுமே பார்க்கலாம்.
“தீண்டாமை க்ஷேமகரமானது” என்று காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னது தவறு – அதனை ஏற்கவில்லை என்று இன்றைய காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சொல்லட்டுமே பார்க்கலாம்.
வேதம், கீதை, இதிகாசங்கள், புராணங்களில் வற்புறுத்தப்படும் ஜாதியை இன்றைய கால கட்டத்தில் நாங்கள் ஏற்கவில்லை என்று பார்ப்பனர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்று கேட்க விரும்புகிறோம்.
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியை பாலக்காட்டில் காந்தியார் (16.10.1927) சந்தித்து, தீண்டாமை ஒழிப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இசைவு தந்தாரா? என்று கேட்க விரும்புகிறோம்.
“ஹரிஜன ஆலயப் பிரவேத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என்றும்; அவர்கள் மனம் நோகும் படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றேதாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் காந்தி அடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: “தமிழ்நாட்டில் காந்தி” பக்கம் 575,576).
இதற்கு என்ன பதில் ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமே! விஜயபாரதம் மட்டுமல்ல – இந்தக் கூட்டம் அறிவு ஜீவி என்று தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் ‘துக்ளக்’ சோ ராமசாமியும் வைக்கப் போராட்டத்தில் மூக்கை நுழைத்து அறுபட்டதுதான் மிச்சம்!
நெல்லை ஜெபமணி என்பவரின் பெயரால் ‘துக்ளக்’கில் (15.11.1985) வைக்கம் போராட்டம்பற்றிய கட்டுரை வெளி வந்தது. அதற்கு மறுப்புக் கட்டுரை எழுதித் தருகிறேன் என்று திராவிடர் கழக – பொதுச் செயலாளராக இருந்த ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித்தபோது, அத்தகைய கட்டுரை ‘துக்ளக்’கின் ஒரு பக்கத்திற்குள் இருக்க வேண்டும் என்று திருவாளர் ‘சோ’ ராமசாமியால் வரம்பும், நிபந்தனையும் விதிக்கப்பட்டது. (எப்படி இருக்கிறது யோக்கியதை?) பரவாயில்லை என்ற பரந்த மனப்பான்மையோடு திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் மறுப்புக் கட்டுரை ஒன்றையும் எழுதி அனுப்பினார். அந்தக் கட்டுரை ‘துக்ளக்’கிலும் (1.12.1985) வெளிவந்தது.
அதோடு முடிக்க வேண்டியதுதானே – மறுபடியும் நெல்லை ஜெபமணி பெயரால் வைக்கம் போராட்டம் பற்றி ‘துக்ளக்’கில் மூன்று கட்டுரைகள் வெளிவந்தன.
அந்த நேரத்தில் மலேசியா சுற்றுப் பயணத்தில் இருந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ‘துக்ளக்’ கட்டுரைக்கு மறுப்பாக தட்டச்சு செய்து கட்டுரை ஒன்றை ‘துக்ளக்’குக்கு எழுதி அனுப்பினார்.
கட்டுரையோடு கடிதம் ஒன்றையும் திரு சோவுக்கு இணைத்திருந்தார்.
“வணக்கம், கடந்த மூன்று ‘துக்ளக்’ இதழ்களில் வைக்கம் போராட்டம் பற்றிய எனது கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரைகள் – உண்மையை மறைத்தும், திரித்தும் கூறுகின்றன என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். எனது மறுப்புகளையும் அதே போல் 2 அல்லது 3 இதழ்களில் வெளியிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். எனது மறுப்புக் கட்டுரைகளை வெளியிட வாய்ப்பு இல்லை என்று கருதினால் அருள்கூர்ந்து எனது அலுவலகத்திற்கு உடன் தெரிவித்து திருப்பி அனுப்பி விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தங்கள் அன்புள்ள
கி.வீரமணி
14.1.1986
ஆனால் ‘யோக்கிய சிகாமணி சோ’ எப்படி நடந்து கொண்டார்? கட்டுரைகளை ‘துக்ளக்’கில் வெளியிடவும் இல்லை; கட்டுரையைத் திருப்பி அனுப்பவும் இல்லை.
இதுதான் அவர்களின் பத்திரிகா தர்மமும் பண்பாடும். ‘சோ’வின் கால் ஆடினால் அவருடைய அருமருந்தன்ன சீடரும், இன்றைய ‘துக்ளக்’கின் ஆசிரியருமான திருவாளர் குருமூர்த்தி அய்யரின் தலையாடாதா? தன் பங்குக்கு எழுத வேண்டாமா?
26.6.2019 நாளிட்ட ‘துக்ளக்’கில் இவ்வாறு எழுதியுள்ளார்.
“ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசிக் கட்டத் தில்தான் கலந்து கொண்டு தலைமையேற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டம் பெருமை முழுவதும் அவருக்கே தரப்படு கிறது” என்று எழுதியுள்ளார். எவ்வளவு வயிற்றெரிச்சல் – ஆற்றாமை!
வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்டது. 30.3.1924 போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட 19 பேர்கள்.
அந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற சீர்திருத்த கிளர்ச்சிக்கு தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தவல்லவர் ஈ.வெ.ரா.தான் என்று முடிவு செய்து, குருநீல கண்டன் நம் பூதிரி தந்தை பெரியாருக்குத் தந்தி கொடுத்தார். (4.4.1924 மற்றும் 12.4.1924)
ஜார்ஜ் ஜோசப் மற்றும் கேசவமேனனும் கையொப்பமிட்டு கடிதமும் எழுதினார்கள். அந்த நிலையில் பெரியார் புறப்பட்டு வைக்கம் அடைந்த தேதி 13.4.1924.
உண்மை இவ்வாறு இருக்க, வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா. பெரியார் பங்கு கொண்டது தலைமையேற்றது – வைக்கம் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில்தான் என்று கூசாமல் சற்றும் அறிவு நாணயமில்லாமல் ‘துக்ளக்’கில் (26.6.2019) எழுதுகிறார் என்றால், இவர்களின் மகா மகா கீழிறக்க நிலையை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
(1924 மார்ச்சில் தொடங்கி 1925 மேயில் முடிவுற்ற போராட்டம் 600 நாட்கள் நடந்ததாக ‘விஜயபாரதம்’ எழுதுவதில் இருந்தே அதன்புளுகு அம்பலமாகவில்லையா?
வைக்கத்தில் போராட்டக் களத்தில் தந்தை பெரியார் முகாமிட்டிருந்தது 141 நாட்கள்; அதில் கொடுஞ் சிறையில் (கை கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு) இருந்த நாட்கள் 74.
தந்தை பெரியார் மட்டுமல்ல அவரது துணைவியார் நாகம்மையார் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள் ஆகியோரும் வைக்கம் போராட்டத்தில் பங்கு கொண்டனர் என்பது வரலாறு.
தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது அவரை சிறையிலேயே சாகடிக்க ஸநாதன வைதிக வெறியர்களான நம் பூதிரிப் பார்ப்பனர்கள் நடத்திய சத்ரு சம் ஹாரயாகம் (எதிரியை சாகடிப்பதற்கான யாகம்) பெரியாருடன் காந்தியார் சந்திப்பு (12.3.1925) மகாராஜா மரணம் இறுதியில் – 23.5.1925 அன்று வீதிகளில் அனைவரும் செல்லலாம் என்ற திருவாங்கூர் அரசு அறிவிப்பு – வைக்கம் வெற்றி விழாவுக்குத் தந்தை பெரியார் தமது துணைவியாருடன் தலைமையேற்றது (29.11.1925) ‘வைக்கம் வீரர்’ என்று ‘நவசக்தி’யில் திருவிக தலைப்பிட்டது என்பதைப்பற்றி எல்லாம் எழுதினால் பெரிதும் விரியும்.
கேரள அரசும் – திராவிட மாடல் தி.மு.க. அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு விழாவை – தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்திக் கொண்டாடிக் கொண்டு இருப்பது எல்லாம் எதிரிகளின் இதயத்தை நோக்கி எரி ஈட்டியை எய்துவதாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்?