ஆண்டிப்பட்டி,மே 2- ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப் பத்தை கொண்டு கிராம மக்கள் அடித்துக் கொள் ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பொங்கல் வழி பாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொதுவாக விழாவின் கடைசி வழக்கமாக கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள். ஆனால் இந்த கிராமத்தில் விழாவின் கடைசி நாளில் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று (1.5.2024) கிராமத்தில் உள்ள மக்கள், தங்களின் மாமன், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியிலும் நனைத்துக் கொண்டு அடித்துக் கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிக் கொண்டனர். பக்தி, பழக்க, வழக்கத்தின் பெயரால் இப்படியும் ஒரு மூடத்தனம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.