ஜப்பானில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்!

Viduthalai
8 Min Read

தொகுப்பு: வி.சி. வில்வம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா ஏப்ரல் 27 அன்று ஜப்பானில் நடைபெற்றது. பலரும் உரையாற்றிய அந்நிகழ்வில், “பாவேந்தரும் – பெரியாரும்” எனும் தலைப் பில் வரலாறு டாட் காம் மின்னிதழின் ஆசிரியரும், வெளி நாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் துணைப் பொறுப் பாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பானிய ஆலோசகருமான வரலாற்றாய்வாளர் ச.கமலக்கண்ணன் உரையாற்றினர். அப்போது அவர் பேசும் போது,
எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா!
இதுபோன்ற பக்திப் பாடல்களைப் பாடிவந்த பாவேந்தர் எப்படிப் புரட்சிக் கவிஞர் ஆனார்?

பாரதிக்கு உதவி செய்த புரட்சிக்கவிஞர்
1908 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் வேணு (நாயக்கர்) என்பவரின் திருமணம் நடைபெறுகிறது. அதில் தான் பாரதி தாசனும், பாரதியாரும் முதன்முதலில் சந்தித்துக் கொள் கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே எங்கெங்கு காணினும் சக்தியடா என்கிற பாடல் மூலம் பாரதிதாசனை, பாரதியார் அறிந்து வைத்திருந்தார்.
அதன் பின்னர் 1910 இல் வெள்ளையர் அரசாங்கம், பாரதியாரின் தேசப் பக்திப் பாடல்களுக்காக அவரைக் கைது செய்ய தேடுகிறது. பாண்டிச்சேரியில் ஒரு உறவினர் வீட்டில் ஒளிந்திருக்கும் பாரதியாருக்கு உறுதுணையாகவும், இந்தியா பத்திரிகை தொடர்ந்து வெளி வரவும் நிதியுதவி செய்கிறார் பாரதிதாசன். இவரின் குடும்பம் பாண்டிச்சேரியில் செல் வாக்கு மிக்க வசதியான குடும்பம். அதன் பின்னர் 10 ஆண்டு காலம் பாரதியார் இறக்கும் வரை நட்பு தொடர்கிறது.

பெரியார் இயக்கத்தில் புரட்சிக்கவிஞர்!
பிறகு அவர் பல பக்திப் பாடல்களை இயற்றியிருக்கிறார். உதாரணமாக மயிலம் சிறீஷண்முகம் வண்ணப் பாட்டு, மயிலம் சிறீசிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம், மயிலம் சுப்பிரமணியர் துதியமுது ஆகியவற்றைக் கூறலாம். இது 1928 வரை தொடர்ந்தது.பிறகு 1928 இல் தந்தை பெரியாரைச் சந்தித்து, அவரது முற்போக்குக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள் கிறார். அதன் பின்னர் அவரது பாடல்களின் போக்கே மாறு கிறது. பெரியார் நடத்தி வந்த குடிஅரசு இதழிலும், பகுத்தறிவு ஏட்டிலும் புரட்சிக்கவிஞர் எழுதத் தொடங்குகிறார்!
1929 இல் குடிஅரசு இதழில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி எழுதுகிறார். பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடிய காலத்திலேயே, மக்கள் தொகைக் குறித்துப் புரட்சிக்கவிஞர் சிந்தித்தார்! ஒன்றிய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முன்னரே, காலத்தை மீறிச் சிந்தித்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

நானொரு நிரந்தர நாத்திகன்!
அதன் பின்னர் இதழாளர் (ஜர்னலிஸ்ட்) என்கிற துறைக் குள் நுழைகிறார். அதுசமயம் பாண்டிச்சேரியில் வெளிவந்த புதுவை முரசு என்கிற மாத இதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்று நடத்தத் தொடங்குகிறார்! அதில் “கிண்டல்காரன்” என்ற புனைப் பெயரில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார். செவ்வாய் உலக யாத்திரை, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாடல் போன்ற முற்போக்குப் படைப்புகளையும் படைத்தார்!

1933 இல் சிந்தனைச் சிற்பி
ம.சிங்காரவேலர் சென்னையில் நாத்திகர் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் வருகையாளர் பதிவேடு ஒன்றையும் வைத்திருக்கிறார். அதில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டார் பாரதிதாசன்!

இரணியன் அல்லது இணையற்ற வீரன்!
தொடர்ந்து பெரியாருடனும், அவரது கருத்துகளுடனும் பயணிக்கிறார். ஸநாதனக் கருத்துகளைச் சாடும் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்கிற நாடகத்தை எழுதுகிறார். அதற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்தித் தருகிறார்!
அதேசமயம் பாரதியார் மீதான மரியாதையிலும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. சுயமரியாதை இயக்கத்துக்கு வருவதற்கு முன் பாரதியார் மீது எத்தகைய மதிப்புக் கொண்டிருந்தாரோ, அதை இறுதிவரை குறைத்துக் கொள்ளவில்லை. எதை, எங்கே, எந்த அளவுடன் நிறுத்த வேண்டும் எனக் கையாளத் தெரிந்தவர் பாரதிதாசன்!

தன்மான பாவலர்!
பாரதியின் வலதுசாரி சிந்தனையையும், இந்துத்துவச் சார்பையும் நாம் அனைவரும் அறிவோம். கவிதையையும், இலக்கியத்தையும் கொண்டாட அரசியல் சார்பு நமக்கு இடையூறாக இருப்பதில்லை. அதேபோல்தான் புரட்சிக் கவிஞரும், பெரியாரியல் வழியில் சுயமரியாதை வாழ்வு வாழ்ந்து போதும், பாரதியின் மீதிருந்த பற்றை வெளிப்படுத்தும் விதமாக “சிறீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்” என்று இந்தியாவிலேயே முதன்முதலில் பாட்டுக்கென்று ஓர் ஏட்டைத் தொடங்குகிறார்.
இதையெல்லாம் பார்த்துப் பெரியாரும், புரட்சிக்கவிஞரை ஒதுக்கிவிடவில்லை. 1938 இல் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைத் திராவிட இயக்கத் தோழர்கள் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி (நாயுடு) ஆகியோர் பொருள் உதவி செய்து வெளியிடுகிறார்கள். “தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்” என்று பெரியார் பாராட்டினார்!

புரட்சிக்கவி பட்டம்!
தனது மூத்த மகள் சரசுவதியின் திருமணத்தைப் பெரியாரின் முன்னிலையில் நடத்துகிறார். பெரியாரிடம் மட்டுமின்றி, திராவிட இயக்கத்தின் தூண்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், சோமசுந்தர பாரதியார் போன்ற தலைவர்களுடனும் நெருங்கிய நட்பில் இருந்தார். 1946 இல் அவருக்குப் “புரட்சிக்கவி” என்கிற பட்டம் வழங்கப்படுகிறது. அதை வழங்கியவர் அறிஞர் அண்ணா. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நாவலர் சோமசுந்தர பாரதியார். நிகழ்ச்சியில் புரட்சிக்கவிக்கு அளிக்கப்பட்ட பொற்கிழி 2 ஆயிரம் ரூபாய்! 1946 இல் இது பெரும் தொகை!

முற்போக்குக் கட்டுரைகள்!
கவிதைப் பணிக்கு இடையில் இதழியல் பணியையும் அவர் விட்டுவிடவில்லை. புதுவை முரசு தந்த ஊக்கத்தால் முல்லை என்கிற இதழையும், குயில் என்கிற இதழையும் தொடங்குகிறார். முற்போக்குக் கட்டுரைகளைப் பலவற்றை அதில் எழுதினார்.
கடவுள் என்று சனியனை வணங்குவது சரியா?, ஆஸ்திகமே அறிவைக் கெடுத்தது, அன்பே சிவம் என்பது ஆத்திகர் கரடி, லவுகிகத்தின் துஷ்டப் பிள்ளை, வைதிகம், பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம் போன்றவையெல்லாம் இவர் எழுதிய கட்டுரைகள். இது மட்டுமின்றி இருண்ட வீடு என்கிற பாடல் வடிவக் கதையையும் எழுதினார். சகுனம் பார்த்து, சடங்குகள் செய்து, சோதிடத்தை நம்பி, பகுத்தறிவின்றி வாழும் ஒரு குடும்பம், எப்படிப்பட்ட துன்பங்களை அடையும் என்பதைத் தனக்கேயுரிய பாணியில் சாடியிருப்பார்.

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பின்னர் அரசியலிலும் தடம் பதிக்கிறார். 1954 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் 1960 தேர்தலில் தோற்றுவிடுகிறார். ஆனால் இவை எதுவும் அவரது எழுத்துப் பணிகளைப் பாதிக்கவில்லை. 1961 ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்கிறார். 1963 இல் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் 1964 இல் அவரது மரணம் அம் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது!
1937 ஆம் ஆண்டில் இருந்தே திரைப் பயணத்தையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். கவிகாள மேகம், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி போன்ற திரைப்படங் களுக்கு வசனமும், ஓர் இரவு, பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்ற படங்களில் பாடல்களும் எழுதினார். அவர் இறந்த பின்னும் அவரது பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப் பட்டு வந்தன.
அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை “ஓர் இரவு” திரைப்படத்தில் இடம் பெற்ற “துன்பம் நேர்கையில் நீ யாழெடுத்து மீட்ட மாட்டாயா?”, “பஞ்சவர்ணக் கிளியில்” “தமிழுக்கும் அமுதென்று பேர்”, “கலங்கரை விளக்கத்தில்” “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” போன்றவற்றைப் பட்டியலிடலாம்.

பாரதிதாசன் பல்கலைக் கழகம்!
அவர் இறந்த பிறகு 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் மலர்கிறது. 1968 இல் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. அப்போது புரட்சிக்கவிஞரின் உருவச்சிலை, சென்னை மெரீனா கடற்கரையில் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்டது. 1978 இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடு அரசு பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை, அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடியது. அவ்வாண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் விருது (ரூ 10 ஆயிரம், 4 பவுன் தங்கப் பதக்கம்) வழங்கப்பட்டது. முதன் முதலாக இப்பரிசை புரட்சிக்கவிஞர் சீடர் கவிஞர் சுரதா அவர்கள் பெற்றார்! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரில் எம்.ஜி.ஆர் அவர்கள் திருச்சியில் ‘பாரதிதாசன் பல்கலைக் கழகம்’ ஒன்றையும் அமைத்தார்!

புரட்சிக்கவிஞர் பரிசு!
1990 இல் புரட்சிக்கவிஞர் நூற்றாண்டில் திரைத் துறையில் ‘பாவேந்தர் பரிசு’ என்பதைக் கலைஞர் தோற்றுவித்தார். இவரது தலைமையிலான தமிழ்நாடு அரசு வழங்கிய ‘பாவேந்தர் பரிசை’ முதன் முறையாகப் பெற்றவரும் புரட்சிக்கவிஞரின் சீடர் ‘சுரதா’ அவர்களே!
1991 இல் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, புரட்சிக் கவிஞரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கி யது. புரட்சிக்கவிஞரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 இலட்சம் வழங்கப்பட்டது! இன்று அவரது நூல்கள் எல்லாம் நமக்குச் சேதாரமில்லா மல் முழுமையாகத் தடையின்றிக் கிடைக்கின்றன. பல பதிப்பகங்கள் மலிவு விலைப் பதிப்புகளை வெளியிட்டு மாணவர்களைச் சென்றடைய இது வழிவகுத்தது. இன்று நாம் புரட்சிக்கவிஞரின் படைப்புகளை ரசித்து மகிழ்கிறோம். மீண்டும் இப்படியொரு சுயமரியாதை முற்போக்குக் கவிஞர் கிடைக்கமாட்டாரா எனவும் ஏங்குகிறோம்.

ஜப்பானில் பாரதிதாசன்!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டுமே ஒரு வார இடைவெளியில் வருவ தால், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கமும், வான வில் பன்னாட்டுப் பள்ளியும் இணைந்து “தோக்கா இச்சிபா வில்” ஏப்ரல் 27 அன்று புரட்சிக்கவிஞரை நினைவு கூர்ந்தன!
வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் ஜப்பான் நாட்டுப் பொறுப்பாளர் வி. குன்றாளன் வரவேற்புரை ஆற்றினார். ஜப்பான் வாழ் தமிழ்க் குழந்தைகள் புரட்சிக் கவிஞரின் கவிதைகளை ஒப்புவித்தும், பாடியும் அவரைப் பற்றிய தகவல்களை உரை வீச்சாகவும் அமைத்துப் புரட்சிக் கவிஞருக்குப் பெருமை சேர்த்தனர்! பங்கேற்ற அனை வருக்கும் சான்றிதழும், புரட்சிக் கவிஞரின் நூல்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி சிறக்க உழைத்தோர்!
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் தலைவர் வே. கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ச.சே.இராஜலட்சுமி, துளிக்கனவு இலக்கிய வட்டத்தின் தலைவரும், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் ஜப்பானின் ஆலோசகரு மான எழுத்தாளர் ரா. செந்தில்குமார், டோக்கியோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த கு.கோவிந்தராஜன் ஆகியோர் புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையை உரைச் சித்திரமாகப் படம்பிடித்துப் பேசினர்.
தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக, இணைய நேரலையில் பங்கேற்ற கவிஞர் அறிவுமதி அவர்கள், புரட்சிக்கவிஞரின் நினைவுகளைச் சிறப்பாக எடுத்துக் கூறினார்! தமிழ்ச் சமூகம் கைக்கொள்ள வேண்டிய விழுமி யங்கள் எவ்வாறு புரட்சிக்கவிஞரின் பாடல்களில் மிளிர்கின் றன என்பதையும் அவருக்கே உரிய ஆற்றொழுக்கான நடையில் எடுத்துரைத்தார்!
அரங்கு நிறைந்த கூட்டமாக விளங்கிய இந்நிகழ்வுக்கு வானவில் பன்னாட்டுப் பள்ளியின் தமிழாசிரியர் சித்ரா அவர்கள் குழந்தைகளைத் தயார் செய்யவும், அரங்க ஏற்பாடுகளுக்கும் பொறுப்பேற்றார்.
ச.சே. இராஜலட்சுமி, அய்ஸ்வர்யா, அழகு பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். வானவில் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் அறிவு முதல்வன் நன்றியுரை கூறினார்.
ராயல் பேக்ஸ் மற்றும் ருசி இந்தோ உணவகத்தினர் சுவையான சிற்றுண்டி வழங்கினர்.
எமை ஈன்ற திராவிடமே!
அன்பு பதிந்த இடம் – எங்கள்
ஆட்சி சிறந்த இடம் – நல்
இன்பம் நிறைந்த இடம் – எமை எல்லாம்
ஈன்ற திராவிடமே! என்கிற பகுத்தறிவும், மொழியுணர்வும் ஊட்டி, நம் திராவிட ஆட்சியின் முன்னோடியாய் விளங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்ற வேண்டியது தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *