அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தன்னை மதமற்றவர் என தெரிவிக்கக் கோரியும், அதன் அடிப்படையில் தனது பெற்றோரின் சொத்தில் தனக்குள்ள வாரிசு உரிமை வேண்டியும் நீதி வழங்கிடக் கோரி கேரளாவிலிருந்து ஒரு பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன் றான மதத்தில் நம்பிக்கை கொள்வதற்கும், (அ) மதத்தின் மீது நம்பிக்கையற்று இருப்ப தற்குமான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட் டத்தில் வசித்து வரும் பி.எம்.ஷபியா, தான் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந் திருந்தாலும் அந்த மதத்தைப் பற்றிய நம்பிக்கை எதுவும் தனக்கு இல்லை என்பதால் மதச்சார்பற்ற சட்டங்கள்தான் (ஷரியத் சட்டம் அல்ல) தனக்குப் பொருந்த வேண்டும் என உரிமையினை வழக்கு தொடுத்து கோரியுள்ளார்.
மனுதாரர் சார்பாக வழக்காடிய வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளதாவது: மதச்சார்பற்ற அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்து மதங்களையும் சமமான அளவில்தான் கருதுகின்றன. அதன்படி எந்த ஒரு தனி நபரும் மதத்தின் மீது நம்பிக்கை வைப்ப தற்கும் நம்பிக்கையற்று இருப்பதற்கும் முழு சுதந்திரம் உண்டு என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் படி, மத நம்பிக்கையற்று இருப்பதால், ஒரு நபர் தனக்குள்ள வம்சாவளி சார்ந்த அல்லது இதர குடிமைச் சட்டங்களின் மூலம் கிடைக்கக்கூடிய வாரிசு உரிமை களில் தகுதியிழப்பு எழக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ஒரு மதத்தின் மீது நம்பிக்கையற்று இருப்பவர்களுக்கு நாட்டின் மதச்சார் பின்மை சட்ட வடிவங்களுள் ஒன்றான இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 (The Indian Succession Act) பொருந்தும்; உயில் மூலம் பெறப்படும் சொத்துரி மைக்கும், உயில் இல்லாமல் வாரிசு களுக்கான சொத்துரிமைக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் மனுதாரரின் வழக்குரைஞர் வாதிட்டார்.
மனுதாரர் தனது வேண்டுதலில், இஸ்லாம் நமபிக்கையிலிருந்து தான் விலகி இருப்பதால் தனது சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தனது பெற்றோர் வழி சொத் துக்கு தான் உரிமை கோர முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.
தான் முஸ்லிம் தனி நபர் சட்டத் தின்படி நடக்க வேண்டியவர் அல்லர் என்றும், தனது உறுதியேற்பின்படி, தனக்கு சான்றிதழ் அளிக்க வேண்டி உள்ளார். அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்கிட சட்டத்தில் இடமில்லை என்ப தால் சட்டத்தில் உள்ள இடைவெளியினை உச்சநீதிமன்றம்தான் தங்கள் அறிவார்ந்த சட்ட விளக்கங்களால் பூர்த்தி செய்து நீதி வழங்கிட வேண்டும்.
சட்டத்தில் உள்ள வெற்றிடத்தால் மனுதாரர் தனது பெற்றோர் வழி சொத்துக்களைப் பெற்றிட “மதமற்றவர்”, “ஜாதியற்றவர்” என சான்றிதழினை உரிய அதிகாரியிடம் பெற்றிட தடை எதுவும் இருக்கக் கூடாது.
நிறைவாக மனுதாரரின் வழக்குரை ஞர் தனது வாதுரையில், “இப்படிப்பட்ட நிலையிலுள்ள எனது மனுதாரருக்கு அரசமைப்புச் சட்டத்தின் கூறு 25 வழங் கியுள்ள மத நம்பிக்கை கொள்வதற்கும், மத நம்பிக்கையற்று இருப்பதற்கும் உள்ள அடிப்படை உரிமை நேரடியாக மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
வாதுரையை கேட்ட உச்சநீதிமன்றம், ஒன்றிய மற்றும் கேரள அரசுகளுக்கு தாக்கீது அனுப்பிட உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கின் அடுத்த நடவடிக்கை யாக ஜூலை மாதத்திற்கு விரிவான விவா தத் திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: வீ.குமரேசன்